எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

இலக்கியம் கவிதைகள் (All)

1
ன்னைச் சுற்றி எதிரிகளும்
அதிகம் நிற்கின்றனர்;
உலகின் யதார்த்தம் என்றெண்ணி
அவர்களையும் கடந்துச் செல்கிறேன்,

நல்லதை விட
கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது;
உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று
அதையும் மறக்கிறேன்,

என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே
தவறென்று முன்நிற்கிறது உலகம்;
தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று
எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான்,

உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும்
அததற்கான நியாயங்கள் அதற்கானதாகவே இருக்கிறது
எனக்கான நியாயங்கள் மட்டும்
யாரோ கைமூடிக்கொண்டு நிற்க; உள்ளே
குற்றத்தின் சுவடுபோல் மறைந்தே கிடக்கிறது;

அதனாலென்ன –
ஒருநாள் அது வெளியேத் தெரியும்போது
மறைத்தவர்களின் குற்றமும் அகப்பட்டிருக்கும்
நானும் வெளிப்பட்டிருக்கக் கூடும்..
————————————————————————————————-

2
ன்றும் அந்த நிறுத்தத்தில் நிற்கும்
பேருந்து இன்று நிற்கவில்லை,

இத்தனைநாள் விடியலில் திறக்கும் கடை
இன்று திறந்திருக்கவில்லை,

எப்போதுமே நெரிசலின்றி போகும் தெருவில்
இன்று அத்தனைக் கூட்டமிருந்தது,

நான் கடைக்குப் போனபோதுதான் வரிசை
தெருக்கோடிவரை நீள்கிறது,

வீடு வரை வந்து வாழையிலை விற்கும் பாட்டிக்கு
இன்றுப் பார்த்து காய்ச்சலாம்,

இத்தனைநாள் மழை பெய்திடாத வானம்
இன்றுப் பிய்த்துக்கொண்டு கொட்டியது..,

என்றும் பட்டென வெடித்திடாத
அண்ணாச்சிக் கடைப் பட்டாசு
இன்று மழைப்பெய்த ஈரத்தின்போதும் படாரென
கையிலேயே வெடித்துவிட்டது..

வலியில் துடித்துக் கொண்டுபோய்
மருத்துவமனையில் அவசரமென்று நின்றால்
ஊமைப்பேயென பேசாமலே நின்றுச் சுட்டது அவள் பார்வையும்
அவள் தந்த டோக்கனின் நெடுந்தூர வரிசை எண்ணும்..,

எல்லாம் கொடுமை..
எல்லாமே எனக்கு எதிராகவேதானா
நடக்கும்?

இருந்தும் இவைகளையெல்லாம் நான்
விதியென்று எண்ணிக்கொள்ளவில்லை
காலம் அதுவாகக் கடந்துகொண்டேயிருக்கிறது..
நான்; நானாகயிருக்கவே முயன்றுக்கொண்டுள்ளேன்!!
————————————————————————————————-

3
னக்கென்று
பெரிய்ய்ய…. ஆசைகளெல்லாமில்லை
அதற்கென்று நான்
ஆசையை முற்றிலும் மறுப்பவனுமல்ல,

கடவுளென்றால் ஒரு
அணிச்சையான ஈர்ப்புண்டு,
அதற்காக அவனை ஒரு கோவிலிற்குள் அடைப்பவனோ
இல்லைப் பிறர் நம்பிக்கையை மறுப்பவனோ கூட அல்ல,

கேட்பவருக்கு திரும்பக் கிடைப்பதை
எண்ணாமலேயே
கொடுக்க விருப்பமுண்டு;
ஆனால் கேட்டவருக்கெல்லாம் கொடுத்ததோ
அல்லது கேட்போருக்கெல்லாம்
கொடுக்கமுடிவதுமோவுமல்ல,

பொய்யும் மெய்யும்
தெள்ளத் தெரிவதுண்டு
அதனால் மெய்வழி நிமிர்ந்து நடக்கவோ
பொய்வழி வளைந்துக் கொள்ளவோக் கூட
முடிவதில்லை,

உயிர்களுக்கு நோகுமோ
இலை பறித்தால் வலிக்குமோ
என மனசஞ்சுவதுண்டு;
ஆனால் மனங்கள் மிதிபடாமல் நடக்கும் பாதையின்
வலியும் பொறுக்குதில்லை,

மனிதரென்றால் ஒரு பெரிய மரியாதையுண்டு
பயமுண்டு
பார்க்கையில் கூடும் மதிப்பும்
ரசிப்பும் கூட உண்டு
பாசமும் பண்புமுள்ளே வேகமாய் எழுவதுண்டு
மன்னிப்புமுண்டு;
அதற்காக நான் அத்தனை உயரத்திற்கு எற்றவனுமல்ல,

ஆக நானென்பது இங்கே யார்?

நல்லது கெட்டது இரண்டையும்
நேராக சந்திக்கநேர்கையில்
சந்தித்ததன் நல்வினையாக மட்டுமே
வாழ நினைப்பவன் அல்லது
உலகக் கூறுகளால் அவ்வாறு வாழ தோற்பவன்..
———————————————————————————————–

4
ழை வருது துணி எடு
மழை வருது மன்னுமூட்டையை மூடு
மழைவருது குழந்தைகளே உள்ள போ..

மழை வருது நனையாதே
குரல்கள் மழையை எதிர்த்து வலுத்துக் கொண்டேயிருந்தன;

அந்த குப்பைவண்டியில்
குப்பையள்ள வந்த அந்த மூன்று பேர்
இந்நேரம் எங்கு ஒதுங்கி
எப்படி நின்றிருப்பார்களோ என்றெண்ணி
நான் மழையிலேயே நிற்கிறேன்!!
——————————————————————————————
வித்யாசாகர்

vidhyasagar1976@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *