(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய
இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !)
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
செல்: 9976372229
இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி
எண்ணிப்பார் கொஞ்சமடா ! – என்
இதயம் வலிக்கிறது; போதும் நீ இருப்பது
இருட்டுக் குகை தானடா !
வலைக்குள் மீன் விழும்; வழக்கம் இது தானே !
தம்பி அறிவாயடா ! – உன்
வலையது வலையல்ல; உன் வாலிபத்தை விழுங்கும்
வலைதான் உணர்வாயடா !
உலையரிசி கொதிப்பதைப்போல் உனைக்கொஞ்சம் சூடாக்கி
உன்ரத்தம் பருகிடுவார் ! – உன்னை
உணர்ச்சியின் உச்சிக்கு கொண்டுபோய் அவர்கள்
லாபங்கள் ஈட்டிடுவார் !
நிலைமையிது தம்பி, இனியேனும் யோசிப்பாய் !
இ.யூ.மு. லீக் ஒன்றே ! – உன்
நேசக் கூடாரம் என்பேன் நான் தம்பி
இணைவாய் இதில் இன்றே !
கூடு என்றெண்ணி கூண்டுக்குள் கிடக்கின்றாய்
கொடுமை கொடுமையடா ! – தம்பி
கொள்கைப் புலியே நீ ; குழப்பத்தின் மடியிலா ?
மடமை மடமையடா !
வாடா.. வெளியே ! உன் வாலிபச் சிறகசைக்க
வானம் இதுவல்லவோ..? – உன் பெயர்
வரலாறிலா இல்லை வெறும் வாக்காளர் பட்டியலிலா ?
முடிவு உனதல்லவோ..?
பீடு நடைபோடு ! பிடிடா ! பிறைக்கொடியை
பெருமை பெருமையடா ! – வீண்
பிற்போக்கு கும்பலை முற்போக்கென்றெண்ணி
கிடப்பது மோசமடா !
மாடாய் உழைத்தாயே..! மாற்றமென்ன கண்டாய் ?
மெளனம் தான் உன் பதிலா..? – நீ
மாட்சி கண்டாயா..? இல்லையே தம்பி நீ
இ.யூ.மு. லீக்கிற்கு வா … இன்றே !
இந்திய விடுதலைக்குச் சிந்திய ரத்தங்கள்
இங்கே கொஞ்சமல்ல; – அதில்
இஸ்லாமிய ரத்தமும் இணைந்துள்ள வரலாற்றைச்
சிந்திப்பாய் தவறே யல்ல !
வந்தே மாதரம் என்றார்கள் ஆர்த்து
ஆர். எஸ்.எஸ். அன்று இல்லை !
வாழ்கபாரதம் என்றார்கள் அன்று
ஜாதிகள் பேதம் இல்லை !
அந்த நாள் காந்திஜியின் அஹிம்சைக்களத்திலே
குதித்தார்கள் மாற்றமில்லை !
அன்னியர் ஆட்சி ஒழிவது ஒன்றே
இலட்சியம் வேறு இல்லை !
இந்தியத் தாய்க்கு எல்லோரும் பிள்ளைகள்
இதிலே மாற்றம் இல்லை
இடையில் வந்ததேன் பிரிவினைக்குழப்பம்
நெஞ்சிலே அமைதியில்லை !
நேற்றுவரை கண்டோம் ; வேற்றுமையில் ஒற்றுமை
நெஞ்சம் மறக்கவில்லை ! – எந்த
நீசர் செய்த நாடகம் அந்தோ … ஒற்றுமை
நமக்குள்ளே இல்லை ! இல்லை !
மாற்றுக்குறையாத முஸ்லீம் லீக்கின்
மகத்துவம் குறையவில்லை ! – பொய்
மானின் பின்னாலே போகின்ற அவலங்கள்
ஏனோ .. குறையவில்லை ?
தூற்றுவோர் தூற்றட்டும் ; தோள்தட்டி வா தம்பி !
சூளுரைப்பாய் இன்றே !
தூயதோர் இயக்கம் ; இ.யூ.மு.லீக்கென்று
சொல்வேன் .. வா .. இன்றே !
போற்றும் வரலாறு ; புவனம் மாலையிடும்
புன்னகை உனைச் சேரும் ! – எந்தப்
பொய்யின் நிழல் கூடச் சிறிதும் இங்கில்லை
புறப்பட்டு வா .. இன்றே !
கண்ணியத்தலைவர் காயிதே மில்லத்
கட்சிக் கொடி பிடிப்பாய் ! – அவர்
கற்பாய் அரசியல் பாடம் நடத்தியதை
கற்றே நீ யுணர்வாய் !
அன்றைக்கே தமிழ்தான் இங்கே ஆட்சிமொழி
என்றே குரல் கொடுத்தார் ! – தம்பி
யாரடா – இவர்போல தமிழுக்குக்குரல் கொடுத்தார்
சொல்லேன் நீ அறிந்தால் !
எண்ணத்தில் தூய்மை ; செயலில் தூய்மை
காட்டிடும் இயக்கமடா ! – கொஞ்சம்
எண்ணிப்பார் தம்பி ! இ.யூ.மு.லீக் ஒன்றே உனக்கு
ஏற்ற இயக்கமடா !
திண்ணமாய் சொல்வேன் ; திரும்பிப் பார் கொஞ்சம்
உன் திசை கானலடா ! – புதிய
தீர்ப்பொன்று எழுது ; தேசம் காத்திடவே
இ.யூ.மு.லீக்கில் சேரடா !
காயிதே மில்லத் சிராஜுல் மில்லத்
வளர்த்த இயக்கமடா ! – பேராசியர்
காதர் முகைதீன் தலைமையில் இன்று
வளரும் இயக்கமடா !
தூய்மையே சுவடு ; சொல்லுவேன் ஆமாம் !
தூயநல் இயக்கமடா ! – எவர்
தூற்றினும் தூற்றட்டும் ; உன்னத இலட்சிய
கூட்டம் கூட்டமடா !
வாய்மையே வலிமையாய் வாக்கிலே நேர்மையாய்
வளரும் இயக்கமடா ! – எவர்
வாதுரைத்தாலும் சரி ; தீதுரைத்தாலும் சரி
அஞ்சாத இயக்கமடா !
தாயன்புதான் காட்டி உனைத் தட்டிக்கொடுக்கின்ற
தங்க இயக்கமடா ! – இந்தத்
தன்மான இயக்கத்தில் உன் பேரும் பதியச்
சடுதியில் நீ சேரடா..!
ஏற்ற கொள்கைக்கு எதிர்ப்பு வந்தாலும்
வெல்லும் இயக்கமடா ! – சில
ஏமாற்றுப் பேர்வழிகள் கோமாளித்தனத்தாலே
சாடுவர் வழக்கமடா !
ஆற்றலில் குறையாத அன்பிலும் குறையாத
அரிய இயக்கமடா ! – இதன்
ஆனிவேரிலும் கூடத் தியாகத் தழும்பிருக்கும்
அறிவாய் உண்மையடா !
கற்பதில் அற்புதம் கன்னல் தமிழ் மொழியைக்
காக்கின்ற இயக்கமடா ! – யாரும்
கண்ணீர் சிந்துவதைக் கொஞ்சமும் பொறுக்காத
தாய்மை இயக்கமடா !
நாட்களை வீணாய் இழந்திட வேண்டாம் !
நல்லதோர் முடிவு காண்பாய் ! இந்த
நானிலம் வியக்கும் பேரெழில் இயக்கம்
இ.யூ.மு.லீக்கில் இணைவாய் !
கோவில் மாநகரம் கும்பகோணத்தில்
கூடுகிறோம் .. வா . தம்பி ! – வந்து
கொள்கைமுழக்கமிடு ; கோரிக்கையை வென்றேடு !
வா ! வா ! இளைய தம்பி !
நாவில் உரம் சேர்த்து நடையில் பலம் சேர்த்து
நடந்து வா அன்புத்தம்பி !
நமது குரல் அந்த நாடாளுமன்றத்திலும்
ஒலிக்கட்டும் எழு தம்பி !
பூவுக்கு வாசம் சரி ; புயலாய் ஆர்த்தெழுந்து
புறப்படுவாய் இன்றே ! – இங்கே
பொய்மை எழுந்தோட மெய்யே எழுந்தாட
வருவாய் அணியில் இன்றே !
ஆவின் பாலதிலே அருமைத் தேன்கலந்தால்
இனிமை இனிமையடா ! – தம்பி உன்
அச்சத்தைக் கட்டி வைத்து உச்சத்தைத் தொடுவதற்கு
அவசியம் … வா தம்பி !
நீ …
நடந்தால் நடையழகு ! நாவசைத்தால் பேரழகு
நடைபோட்டு வா .. தம்பி ! – உன்
நாநயவீச்சாலே நஞ்சுகள் மாயட்டும்
நாடி வா இளையதம்பி !
கடந்து போவது நாளல்ல ; உன் வாழ்க்கை
கவனத்தில் கொள் தம்பி ! – உன்
கண்ணியம் குறையாது கெளரவமும் சிதையாது !
கட்டாயம் வா .. தம்பி !
எடைபோட முடியாத இரத்தினமே ! மணிச்சுடரே !
என்றும் நீ யல்லவா ! – உன்
எரியீட்டி எங்கே எடுத்துக்கொள் ; பொய்மை
எதிர்ப்போம் ; எரிப்போம் வா !
தடையென்ன செய்யும் தளராதே உடைப்போம்
தம்பி நீ எழுந்து வா ! வா ! – உன்னைத்
தன்மானத் தமிழர் தலைவர் நம் பேராசிரியரே தான்
அழைக்கின்றார் வா ! வா !
அம்மாவின் ஆட்சியிலும் ஐயாவின் ஆட்சியிலும்
முஸ்லிம் என்ன கண்டோம் ?
அயோத்தி மஸ்ஜிதை இடித்துவிட்ட துரோகத்தில்
ஆர்ப்பாட்டம் தான் மிச்சம் !
சும்மா வரவில்லை ; சுதந்திரம் என்பார்கள்
சொல்லலாம் மேற் போக்காக ! –இங்கே
சூழ்ச்சிகள் ஆயிரம் ஆயிரம் நடக்குது
முஸ்லிமுக்கு எதிராக !
நம்மவர் ஓரணியில் இணையாததாலே
நஷ்டம் மிகக் கண்டோம் !
நமக்குள்ளே வேற்றுமைகள் ! நம்மிலே பல அணிகள்
பாவம் நாம் நலிந்தோம் !
இம்மட்டே .. நிற்கட்டும் ! பிளவுகள் மாறட்டும் !
இனியேனும் நாம் இணைவோம் !
எதிர்காலம் நமை வாழ்த்த இன்பங்கள் தான் சேர்க்க
இ.யூ.மு. லீக்கை வளர்ப்போம் !