பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்
”மகனே..?
இனிய மைந்தா!
மூன்று மாதத்தில்
வளர்ந்த போது
வயிற்றில் மிதித்தாய்…
தாங்கிக் கொண்டேன்.
இன்று…
இருபத்து மூன்று வயதில்
இதயத்தில் அல்லவா
மிதித்து விட்டாய்..!”
”மண்ணில் புரளும்
புழுவுக்குள்ள மதிப்புகூட
உன்னை ஈன்ற
எனக்கில்லாமல் போனது.”
அன்று நீ
பேசிய மழலைச்சொல் – எனக்குத்
தேனாக இனித்தது…
இன்று நீ ஏசும் மொழிகள்
தேளாய் கொட்டுகிறது.!
என் பாசம் கூட
உனக்கு
தொலைக்காட்சி சீரியலாய்
தெரிய…
அப்பாவி எனக்குத்தான்
வாழ்க்கை
இன்னமும் புரியவில்லை…
தெரியவில்லை…”
உன் போக்கால்…
“பிள்ளையை
வளர்க்கத் தெரியாதவள்!
என்ற குற்றவாளிக்
கூண்டில் (நிற்கிறேன்)
கணவரின் அன்புகூட
கானல் நீராய் போனது!”
“மத்தளத்திற்கு
இரண்டு பக்கம்
இடி என்பார்கள்…
ஆனால் பெண்களுக்கு
வாழ்க்கையின் எல்லா பக்கமும்
இடியோ.. இடி!”
மகனே…
”நேரத்தை வீணாக்கும்போது
கடிகாரத்தைப் பார்…!
ஓடுவது முள் அல்ல…
உன் வாழ்க்கை
என்று உணர்வாயாக..!”
“முடிவு செய்!
உன் கையில்… உன் வாழ்வு…!”
“இனியாவது
பிள்ளையாய் இரு!
பிழையாய் இராதே..!
-எஸ். ரெஜினாபானு,
துணை செவிலியர்
அரசு மருத்துவமனை இளையான்குடி.
நன்றி : இளையான்குடி மெயில் – ஜுன் 2012