தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க மழை தருகிறது? அது போல இளையான்குடியைச் செழிக்க வைக்க வந்தவர்கள் என்று கூட நாம் இவர்களைச் சொல்லலாம். இவர்களின் பெருமைகள், அருமைகள் எல்லாம் வரும் அத்தியாயங்களில் மின்னிடக் காண்பீர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் கொங்கை கொண்டான் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்திலிருந்து, சுமார் நான்கு மைல் தொலைவில் இருப்பது உலக்குடி என்ற ஊராகும். இந்தச் சீவலப்பேரி சந்தைப் பேட்டை, உலக்குடி ஆகிய ஊர்களில் இருந்து இளையான்குடியில் குடியேறியவர்கள் முஸ்லிம்கள். இந்தச் செய்தியை இவ்வூரின் மேலப்பள்ளிவாசல் கடந்த 23-06-1967இல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை வாயிலாக நாம் அறிகிறோம். மேலும், இவ்வூரின் ஆரம்பப் பள்ளிவாசலாகிய கீழப்பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தையும் ஜமாஅத்தார் குடியிருக்க இடவசதியையும் இவ்வூர் பள்ளர் கொடுத்து உதவி ஆதரித்துள்ளனர் என்றும் அவர்களுக்கு நன்றி கூறியும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கி.பி 1828இல் மதுரை ஜில்லாக் கோர்டில் இவ்வூர் லெப்பைமார்களுக்கிடையே ஏற்பட்ட அப்பீல் வழக்கில் (எண் 72) இருந்து, சில குறிப்புகள் நமக்குத்தெரிய வருகின்றன. அதில் 1680 இல் லெப்பை மார்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு தகராறைத் தீர்த்து வைப்பதற்குத் தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்விபரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் 1680க்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, கீழப்பள்ளிவாசல் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இக்காலத்திலிருந்து சுமார் 500 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 1180) முஸ்லிம்கள் இளையான்குடிக்கு குடியேறியதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி மறைந்த பன்னூலாசிரியர் மர்ஹூம் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் அவர்கள் எழுதியுள்ள இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மொகலாயர் ஆட்சி இந்தியாவில் தோன்றுவதற்கு முன்பே, இளையான்குடியில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
சாலிவாகன சகாப்தம் 1665 ஹிஜ்ரி 1163க்குச் சரியான ஆங்கில வருடம் கி.பி. 1744 இல் பழைய மேலப்பள்ளிவாசல் கல் கட்டிடத்தையும், முன் மண்டபத்தையும் வருசை முகம்மது மணியாரன் அவர்களும், ஜமாஅத்தார்களும் கட்டியிருக்கிறார்கள்.
கி.பி.1889இல் இவ்வூர் நெசவுப்பட்டடை ஜமாஅத்தார்கள் மேலப்பள்ளிவாசல் ஜமாஅத்தில் இருந்து பிரிந்து தனிப்பள்ளிவாசல் அமைத்துக் கொண்டார்கள்.
ஜமாஅத்தார்களின் பெருக்கத்தையும் பள்ளிவாசலின் இடநெருக்கடியையும் முன்னிட்டு மேலப்பள்ளிவாசலை விரிவாக்க ஜமாஅத்தார்கள் தீர்மானித்தார்கள். ஹிஜ்ரி 1381க்குச் சமமான கி.பி.1962 இல், முன் குறிப்பிடப்பட்ட வருசை முகம்மது மணியாரன் அவர்களால் கட்டப்பட்ட பழைய மேலப்பள்ளிவாசல் கல்கட்டிடம் முன் மண்டபம் மினரா ஆகியவை மாற்றிக் கட்டப்பட்டன.
இப்போது உள்ள பள்ளிவாசல், டிரஸ்டின் மூலம் ஜமாஅத்தார்களின் நன்கொடையால் கட்டப்பட்டது. இந்தப் புதிய பள்ளிவாசல் கட்டிடம் தூங்காலயன் ஜனாப் தூ.கீ. சிக்கந்தர் அவர்கள் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புரை நிகழ்த்தி 23-06-1967இல் திறந்து வைக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இங்கே வந்ததின் பின்னணி
திருநெல்வேலி மாவட்டம் உலக்குடியில் உள்ள ஜமீன்தார் ஒருவர் (முஸ்லிம் அல்லாதவர்) அந்த ஊரில் கம்மம்புல் காயப்போட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் இளம் பெண்ணைப் பார்த்து ஆசை வைத்து, அந்தப் பெண்ணைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என் உத்தரவிட்டார். பயந்துபோன அந்தப் பெண்ணின் பெற்றோர் பிற மதத்தாருக்குத் தம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இரவோடு இரவாக அந்தப் பெண்ணை தந்திரமாக குதிருக்குள் (முதுமக்கள் தாழி) உயிரோடு இறக்கி, மூடிவிட்டு அந்த ஊரை விட்டு வெளியேறி வந்து விட்டனர். அவ்வாறு அங்கிருந்து வந்தவர்கள் ஒருவர் இருவரல்ல, நாற்பது குடும்பத்தார்கள். இப்போதுள்ள பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் அவர்கள் குடியேறியதால் அருகில் இருந்த இந்துக்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் பாங்கோசை இந்துக்களுக்கு அறியாமையால் ஓர் புதிராகவே இருந்தது. இதனால் முஸ்லிம்களை இந்தப் பகுதியில் இருந்து வெளியேறச் சொன்னார்கள். முஸ்லிம்கள் மறுக்கவே, வழக்கு நீதிமன்றம் போனது. பின் நாளில் அந்த வழக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்துக்கள், முஸ்லிம்கள் மீது தொடர்ந்த வழக்கைக் கண்டு பயந்த இளையான்குடியில் குடியேறிய முஸ்லிம் குடும்பங்களில் ஏழு குடும்பத்தார்கள் பிரிந்து திருவள்ளூர் என்னும் கிராமத்திற்குச் சென்று குடியேறினர். அவர்கள் அங்கே குடியேறிய பிறகு, வழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் மீண்டும் இளையான்குடியில் குடியேற முயன்றனர். அவர்களை அங்கே குடியேறவிடாமல் திருவள்ளூருக்கே விரட்டி விட்டார்கள். அவர்கள், இடம்பெயர்ந்து பூச்சியேந்தல், திருநாடகரேந்தல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த புறம்போக்கு நிலங்களில் குடியேறினர். இவர்கள் புதிதாகக் குடியேறியதால் அந்தப் பகுதி புதூர் எனப் பெயர் பெற்றது.
இளையான்குடியில் பெரிய பட்டடையில் வசிக்கும் சில குடும்பங்களில் பூர்வீகப் பெயரும், புதூரில் வசிக்கும் சில குடும்பங்களின் பூர்வீகப் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் போது இவர்கள் ஒன்றாக இருந்து பிரிந்தவர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. இதற்குச் சான்றாக மொட்டச்சி, கட்டமாது, சீனி வகையறா, சம்சு, கருங்கண்ணன் போன்ற குடும்பப் பெயர்களைக் குறிப்பிடலாம். திருநெல்வேலிச் சீமையில் இருந்து இளையான்குடிக்கு குடிவந்த முஸ்லிம்கள், முதலில் இறை வணக்கத்திற்கென ஒரு பள்ளிவாசலை கட்டிக் கொண்டனர். இதுவே கீழப்பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.
இவர்கள் பூமியில் நல்ல குடிநீர் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு புதிய முறையைக் கையாண்டனர். ஒரு குழியை வெட்டி அதில் மண்ணைக் கொட்டினர். குழிக்கு மேல் மண் நின்றால் அந்த பூமியில் நல்லநீர் இருப்பது தெரியவரும் எனவே அந்த இடங்களில் முஸ்லிம்கள் முதலில் குடியேறினர். இன்றைக்கும் பள்ளிவாசல் பகுதியில் இருப்பதை இன்று உள்ளோரும் அறியலாம்.
( இளையான்குடி வரலாறு நூலிலிருந்து )