(தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்)
வீரமும், நெஞ்சில் ஈரமும் விளைந்த மண்ணில் மானம் காத்த மாவீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவர்கள் !
மருதிருவர்கள் ஏற்றி வைத்த விடுதலை ஒளி சுதந்திர இந்தியாவின் வெளிச்சப் பாதைக்கு வழிகாட்டியது ! பேச இயலாதவனுக்கு (ஊமைத்துரை) அடைக்கலம் தந்ததற்காகவும், அடிமைகளாய்ப் பேச மறந்த மக்களின் உரிமைகளுக்காகவும் தங்கள் மூச்சுக்காற்றை துறந்தவர்கள்.
“படுத்திருக்கும் வினாக்குறிபோல் இருக்கும்
பாண்டியர் தம் மீசை”
என்று மருது சகோதரர்களின் தோற்றப் பொலிவை உவமைக் கவிஞர் சுரதா பாடுவார்.
வெல்ஷ் – என்ற ஆங்கிலேயத் தளபதி பெரியமருதுவின் வேட்டையாடும் வீரத்தையும், தீரத்தையும், பரிவுகாட்டும் நெஞ்சின் ஈரத்தையும் கண்டு வியப்புற்று பாபிலோனிய தேசத்தில் வேட்டையாடுவதில் வெற்றி வீரனும், மன்னனும் ஆகிய “நிம்ராட்” என்ற மகத்தான போர் மறவனோடு ஒப்பிட்டு கூறுகின்றார்.
“வெல்ஷ்” பெரிய மருதுவை “கீழ்த்திசை நாடுகளின் நிம்ராட்” என்று அழைக்கின்றார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேட்டைக்குச் சென்ற பொழுது அவர்மீது பாய வந்த வேங்கையை சின்னமருது குறுக்கே விழுந்து தடுக்க, அந்த வேங்கையைப் பெரியமருது வெறுங்கையால் வீழ்த்திக் கொன்றார். உயிரைப் பணயம் வைக்கும், மயிர்க்கூச்செறியும் வீரத்திலும், விவேகத்திலும் இரு சகோதரர்களும் ஈடு இணை இல்லாதவர்கள் என்பதை இந்நிகழ்வு காட்டுகின்றது.
தென்காசித் திருக்கோயிலின் ஒரு கல்வெட்டுச் செய்தி
”யாராயினும் இத்தென்காசி மேவும் பொன் ஆலயத்தில்
வாராதோர் குற்றம் வந்தால் அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களாயின்
பாரறியப் பணிந் தேன் மன்னன்
பராக்கிரம பாண்டியனே!”
என்று கூறுகிறது.
“தென்காசித் திருக்கோயிலில் எந்த வகையிலாவது ஏதேனும் குற்றம் குறை வருமானால் யார் அதனை நீக்கிப் போற்றிப் பாதுகாக்கின்றார்களோ அவர்களை உலகறிய வீழ்ந்து வணங்குவேன் மன்னன் பராக்கிரம பாண்டியன் !” என்று ஒரு நாட்டை ஆளும் மன்னன் திருக்கோயில் மீது வைத்த ஈடுபாடு நெகிழ வைக்கிறது.
அதைப்போல் விடுதலைப் போரில் வீழ்த்த முடியாத வீர மருது சகோதரர்களை, பிடிக்க இயலாத நிலையில் கர்னல் “அக்னியு” அறிவிக்கின்றான்.
“மருது சகோதரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சரண் அடையாவிட்டால் காளையார்கோயில் பெரிய கோபுரம் தகர்க்கப்படும்” என்று வெள்ளை ஏகாதிபத்தியம் அறிவித்தவுடன் ஆட்சி, அதிகாரத்தை இழந்ததற்குக் கவலைப்படாதவர்களுமாகிய மருது சகோதரர்கள் தங்களைத் தந்து காளையார்கோயில் கோபுரத்தைக் காப்பாற்றினார்கள். இன்றும் கண்ணில் நிழலாடும் காளையார்கோயில் ராஜகோபுரம் மருது காத்த கோபுரமாக கண்ணில் நீர் நிறைக்க மருது சகோதரர்களை நினைவூட்டுகின்றது. இத்தியாகத்தின் தொடர்ச்சி ஒன்றா? இரண்டா? ஏராளம்! ஏராளம் !
காளையார் கோயிலுக்குப் புதிய தேர் செய்ய பெரிய மருது விரும்பினார் ! மாலை கண்டானைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரியிடம் காளையார்கோயிலுக்குப் புதிய தேர் செய்யும் பணியை பெரிய மருது ஒப்படைத்தார்.
தேர்ப் பணிகள் சிறப்பாக முடிந்து, கண்டோர் வியக்கும் வண்ணம் அழகுத் தேராக வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது !
தேர் வெள்ளோட்டம் தொடங்கும் முன் குப்பமுத்து ஆசாரி பெரிய மருதுவிடம் “தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டு விட்டது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்” என்றார்.
என்ன பரிகாரம் என்றாலும் சொல்லுங்கள். செய்து விடுவோம்” என்றார் பெரியமருது. குப்பமுத்து ஆசாரி தயங்கித் தயங்கிச் சொன்னார். இந்தத் தேர் வெள்ளோட்டம் விடுகின்ற இந்நாளில் நான் இந்த நாட்டின் மன்னனாக இருக்க வேண்டும்” என்றார்.
“இவ்வளவு தானே” என்று பெரியமருது அப்பொழுதே அரச முத்திரை மோதிரத்தை குப்பமுத்து ஆசாரிக்கு அணிவித்து செங்கோலைக் கையில் எடுத்துக் கொடுத்து “நீதான் இன்று முதல் சிவகங்கைச் சீமையின் மன்னன்” என்று தந்தார்.
“ஐயோ ! கொடுமை!” என்று மக்கள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தபொழுது அவர்களை அமைதிப்படுத்தி குப்பமுத்து ஆசாரியை மன்னனாக தேரில் ஏற்றினார் மாமன்னர் மருது!
இப்பொழுது மன்னர் குப்பமுத்து ஆசாரி ஆணையிடத் தேர் புறப்பட்டது. தேர் நிலைக்குச் சேரும் கடைசி நொடியில் குப்பமுத்து ஆசாரி தேரில் இருந்து கீழே விழுந்து தேர்க்காலில் அடிபட்டுக் குற்றுயிரும், குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
பெரிய மருது பதைபதைத்து ஓடிவந்து, உயிர் போகும் தருவாயில் இருந்த குப்பமுத்து ஆசாரியை மடிதாங்கி, “என்ன நேர்ந்தது” என்றார்.
“அரசே ! நான் தேர்செய்யத் தொடங்கியவுடன் செதுக்கிய விநாயகரின் துதிக்கை உடைந்துவிட்டதால் அந்த ஒச்சம் இந்த நாட்டின் அரசனுக்கு ஆபத்து என்று எங்களுக்கிடையே உள்ள நம்பிக்கையின் படி அச்சம் அடைந்தேன் ! அதற்காகத்தான் தேர் வெள்ளோட்டம் விடுகின்ற நேரத்தில் இந்த நாட்டின் மன்னன் பொறுப்பைக் கேட்டேன் ! எல்லோரையும் உயிராகப் போற்றுகின்ற மன்னரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று என் உயிரைக் கொடுத்து விட்டேன்!” என்று பெரிய மருதுவின் மடியில் உயிர் விட்டார் குப்பமுத்து ஆசாரி.
மருது வந்தாலும் தேர் ஓடாது.
மருது மச்சினன் வந்தாலும் தேர் ஓடாது!
தேருக்கு உடையவன் குப்பமுத்து ஆசாரி
தேர்வடம் தொட்டாலே தேரோடும்
என்று தியாகத் தேரை பற்றி நாட்டுப்பாடல்
சொல்லும் கண்ணீர் கதைதான் இது !
ஒரு கலைஞன் தன் உயிரை விட தன் கலை, சமயம், பண்பாடு, நாட்டுத்தலைமை பெரிது என்று போற்றினான்.
ஒரு தலைவன் தன் பதவியைவிட கலை, சமயம், பண்பாடு பெரிது என்று போற்றினான். பெரியமருதுவின் இந்த உயர்ந்த உள்ளம்தான் பெரியமருதுவை ஒப்பற்ற மாமனிதராக உலகிற்கு அடையாளம் காட்டுகின்றது.
காலம் அறிந்து கருணை புரியும் குன்றக்குடிக் குமரக்கடவுள் மீது மருது சகோதரர்களுக்கு அளவற்ற பக்தி! பெரிய மருதுவுக்கு ஏற்பட்ட இராசபிளவைநோய் குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் பேரருளால் நீங்கியது. தம் நோய் நீக்கிய ஆறுமுகப்பெருமான் குடி இருக்கும் திருக்கோயிலுக்கு உயர்ந்த இராசகோபுரம், எழுப்பி நூற்றுக்கணக்கான தூண்கள் உடைய பெரிய மண்டபம் கட்டி, உற்சவமூர்த்திக்குத் தங்கக்கவசம் செய்வித்து தைப்பூசத் தேர் உருவாக்கம் செய்து தைப்பூசப் பெருந்திருவிழா கண்டார்! மடத்திற்குத் தெற்கே மருதாபுரித் திருக்குளம் அமைத்தார். குன்றக்குடி ஆறுமுகப் பெருமான் மீது மருது சகோதரர்கள் கொண்ட பக்தி அளப்பரியது; ஈடு இணையற்றது !
மண் காக்கின்ற போரில் தம்மைத்தந்த தியாகத் திருவிளக்குகளான மாமன்னர்கள் மருது சகோதரர்கள் செய்த திருப்பணிகளால் ஆற்றிய அறச்செயல்களால் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !
நன்றி :
அறிக அறிவியல்
நவம்பர் 2012