‘ஆலம்பொழில்’ எனும் பெயரைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தஞ்சை மாவட்டம் கண்டியூரிலிருந்து திருப்பூந்துறுத்தி வழியாக கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிற்றூர் திருவாலம்பொழில் எனும் கிராமம். இப்பகுதியில் இலக்கிய வாதிகள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். அவர்களில் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர்கள் “தச்சன்” எனும் சிற்றிதழ் ஆசிரியர் தச்சன் இரா. நாகராஜன். திருவையாற்றைச் சேர்ந்தவரான இவர் இப்போது சென்னையில் பத்திரிகையாளராக இருக்கிறார். இன்னொருவர் சிங்க.செளந்தரராஜன். இவரும் இந்தப் பகுதி இலக்கியவாதிதான்.
இவர்களுடைய நண்பர் வலம்புரி லேனா. இவர் இருப்பதுதான் இந்த திருவாலம்பொழில். சரி! அதற்கென்ன என்கிறீர்களா? சொல்கிறேன். இந்த ஊருக்கும் திருநாவுக்கரசர் பெருமானுக்கும் தொடர்பு உண்டு. திருஞானசம்பந்தர் மதுரையிலிருந்து திரும்பி வரும்போது அப்பர் இங்கு எங்கோ இருக்கிறார் என்று, அவரைக் காண பல்லக்கில் வருகிறார். அவருடைய பல்லக்கைச் சிலர் தூக்கி வருகின்றனர். மக்கட்கூட்டம் இருக்குமிடங்கலிலெல்லாம் சம்பந்தர் ‘அப்பர் எங்கே?’ என்று கேட்கிறார். பல்லக்கு இந்த திருவாலம்பொழிலைக் கடக்கும்போது சம்பந்தர் கேட்ட கேள்விக்கு, கீழே பல்லக்கைச் சுமந்து வந்து கொண்டிருந்த அப்பர் சொன்னார், “அடியேன் இங்கே” என்று. உடனே சம்பந்தர், அப்பரே! என்று சொல்லி பல்லக்கிலிருந்து குதித்து அப்பரைத் தொழ இரு சிவனடியார்களும் அன்பின் தளையில் சிக்குண்டிருந்தனராம். அப்படிப்பட்ட புனிதமான பூமியிலிருந்து ஒரு இலக்கிய இதழ், பெயர் “ஆலம்பொழில்” என்பது. அதன் ஆசிரியர் வலம்புரி லேனா. ஒரு தனி இதழ் ரூ.30. நான் மேலே குறிப்பிட்ட நண்பர்கள் அனைவருமே திருவையாறு பாரதி இயக்கத்தில் வளர்ந்தவர்கள். அற்புதமான இலக்கியவாதிகள். இளைஞர்கள். இந்த “ஆலம்பொழில்” இதழுக்கு என்ன சிறப்பு தெரியுமா? இது முழுக்க முழுக்க கடித இலக்கியத்தை உள்ளடக்கி வெளிவருவது. இப்போதெல்லாம் யாருக்குக் கடிதம் எழுதத் தெரிகிறது. கைபேசியில் குறுஞ்செய்தி, அல்லது கணினியில் மின்னஞ்சல். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடிதங்கள், நீ சுகமா, நான் சுகமே என்றில்லாமல் இலக்கியத் தரமாக எழுதக் கூடியவர்களும், இனி எழுத முயற்சி செய்வோரும் படிக்க வேண்டிய அருமையான இதழ் இது. காவிரியும் குடமுருட்டியும் பாய்ந்து வளம் பரப்பும் இந்தப் பகுதி இலக்கியத்திலும் வளமை நிறைந்ததுதான் என்பதற்கு இந்த இதழ் ஒரு சான்று. ஆசிரியர் வலம்புரி லேனாவைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால்
முதன்மைச் சாலை, திருவாலம்பொழில், திருப்பூந்துறுத்தி வழி, தஞ்சை மாவட்டம் 613103 எனும் முகவரியிலோ, அல்லது அவருடைய கைபேசி எண்: 9894138439க்குத் தொடர்பு கொள்ளலாம்.