(
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தார்
thahiruae@gmail.com )
ஒருதலைப் பட்சக் காதல்,ஒரு தறுதலை வீசினான் ஆசிட் !
பெற்றவர்கள் அப்போதுதான் பெரு மூச்சு விட்டிருந்தார்கள் !
கற்றவளான வினோதினி இப்போது தன்னைக் காப்பாற்ற போகிறாள் என எண்ணி !
சகோதிரி வினோதினி இப்போது மெழுகுதிரியாய் தன்னை
அர்ப்பணித்தவர்களுக்கு உதவ தன்னை தயார்ப் படுத்திக் கொண்டாள் !
கணினி நிறுவனத்தில் அந்தக் கன்னி வந்து சேர்ந்தாள் கனவுகளோடு
தான் வாழ காதல் கனவுகளோடு அல்ல ! தன்னை வாழ வைத்தவர்களை கண்ணீர் இன்றி வாழ வைக்க வேண்டும் என்ற கனவுகளோடு !
அவளின் அழகில் மயங்கியனுக்கு அன்பு நெறி அல்ல ! காம வெறி !
அடையப் பார்த்தான் . அவள் பின்னால் அலைந்துப் பார்த்தான் !
காதல் சொன்னான் அவள் காதின் ஓரத்தில் ! கண்ணசைத்தான் அவள் எதிரே வந்த நேரத்தில் !
படித்தவள் , பண்பாடு உடையவள் உடையவள் அவனின் காமப் பார்வைகளுக்கு மசியவில்லை .
சுரேஷ் என்ற அந்தக் கொடூரன் தனக்கு அவள் கிடைக்கவில்லை என்றதும் அவள் வாழ்வதே அவனுக்குப் பிடிக்க வில்லை !
அந்த மங்கை நல்லாள் காதல் என்பதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை .
அமுது கொடுத்தவர்கள், கல்விக் கொடுத்தவர்கள் ,கண்ணும் கருத்துமாய் வளர்த்தவர்கள் ,பேரன்புடையவர்கள் ஆம் அவளதுப் பெற்றோர்கள் கைப்பிடுத்துத் தரும் மணாளனையே தாம் மணக்க விரும்புவதாக அவள் சொன்னாள் !
கருணை மிக்க அந்தக் கன்னிப் பெண் தன் நிலை யாருக்கும் நேரக்கூடாது என்றாள் .தனக்கு நேர்ந்தக் கொடுமை தன்னையொத்த சக பெண்ணுக்கு ஏற்ப பட்டதுக் குறித்து அறிந்த போது வருத்தப் பட்டாள் .தம் மீது ஆசிட் வீசியக் கொடியவன் அதே போன்று ஆசிட் வீசி தண்டிக்கப் பட வேண்டும் என்றாள் .
தில்லியில் ஒருப் பெண் கர்ப்பழிக்கப் பட்ட போது துள்ளிக் குதித்த தமிழ் நாட்டிலுள்ள மாதர் சங்கங்களும் , மனித உரிமை இயக்கங்களும் இங்கு அவர்கள் அருகிலேயே ஒரு இளம் பெண் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட போது கண்டுக் கொள்ள வில்லை .
அவள் ஏழைப் பெண் என்பதாலா?
அல்லது எந்த மீடியாவும் அவர்களின் பேரணியை, கண்டனங்களை, புகைப் படம் பிடிக்க முன் வராது என்றா ?
அல்லது அவள் தாழ்ந்த சாதியா ?
அல்லது புனிதமான காதலை (?) அவள் மறுத்ததாலா ?
உதவ கூட பெரும்பாலும் முன் வரவில்லை.
டில்லி மாணவியை சிங்கப்பூருக்கு தம் செலவில் அனுப்பியது அரசு .
புதுவையின் இந்த இளம் மாணவிக்கு அரசு உதவிக் கூட கோரிக்கை வைத்தப் பின்தான் வந்தது . கொஞ்சம் இலட்சங்கள் வந்து சேர்ந்தது .
மருத்துவம் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது .
எனினும் அது ஏழைகளின் உயிரை அல்ல ! அது பணக்காரர்களுக்குத்தான் !
திரைப்படங்களில் கதாநாயகியை தீயாக பாய்ந்து வந்து காப்பாற்றி கொண்டிருக்கும் கதாநாயகர்கள்
திராவகம் வீசப் படும் போது ,நடைமுறை வாழ்வில் எவனும் காப்பாற்ற முன் வருவதில்லை !
வாங்கும் காசுக்கும் எத்தனைப் பூக்கள் இருக்கிறதோ அத்தனை பூக்களாகவும் பெண்ணை புகழ்ந்து தள்ளும் கவிஞர்கள் இதை கண்டிக்கவெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை !
தெய்வமாகவும், தேசமாகவும் , மொழியாகவும் பக்தியாய் பெண்ணைப் பார்க்கும் தேசத்தில் . அவள் தேசத்தில் நடந்து வருவதே பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது ,ஆணாதிக்க காமவெறிப் பிடித்தவர்களின் அச்சுறுத்தல். உள்ளது .
இன்று வினோதினி கடைசி மூச்சு விட்டாள் .
நவீன சிகிச்சையில் வளர்ந்துள்ளது மருத்துவம், மனிதத்துவம் இல்லை . பணத்திற்காக தாமதித்து கடைசியில் அவள் பிணமானாள் .
விழிப்புணர்வு மிக்க மாதர் சங்கங்கள் , மனித உரிமை இயக்கங்கள் விளம்பரம் இதில் கிடைக்காது எனபதால் பேரணி, எதிர்ப்பு எதுவும் இன்றி பேட்டிகள் மட்டும் கொடுத்து விட்டு பேசாமல் ஒதுங்கி உட்கார்ந்து விட்டார்கள் ..
அறிக்கை விடும் அரசுகள் , கண்டனக்கணை வீசும் கட்சித் தலைவர்கள் இதில் ஓட்டுப் பொறுக்க முடியாது என்பதால் அவ்வளவாக ஒன்றும் பேசாமல் இருந்து விட்டார்கள் .
கருத்து சுதந்திரம் வேண்டும் என்றுக் கொதித்த திரை உலகம் ஒரு கன்னிப் பெண்ணின் சுதந்தரம் அல்ல . உயிரே பறிக்கப் படும் நிலை வந்தப் போது கூட அதை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேச வில்லை .
ஆபாசமாக பெண்ணை வருணிக்கும் கவிஞர்கள் , ஆபாச காட்சிகளை எடுக்கும் திரை சமூகம் , ஆபாச படங்களைப் போட்டு காசுப் பார்க்கும் பத்திரிக்கைகள் ,சுதந்திரம் என்னும் பெயரில் காமப் பேச்சுக்களை மேடைகளிலும் ,தொலைக் காட்சிகளிலும் அரங்கேற்றுபவர்கள், காதலர் தினம் என்னும் பெயரில் (என்னமோ இதற்கு முன் இந்தியாவில் யாரிடமும் அன்பே இல்லாதததுப் போல ) அழகை மட்டுமே ஆராதிக்கும் மேற்கத்திய மூட நம்பிக்கைகளின் இறக்குமதியாளர்கள் ஒவ்வொருவருக்கும் வினோதினியின் மரணத்தில் பங்கு இருக்கிறது .
நேரடியான குற்றவாளி இதில் சுரேஷ் , மறுப்பதற்கில்லை .
எனினும் மறைமுக குற்றவாளி மேற்க் கூறப் பட்ட அனைவருமாவர் .
சமூகத்தில் இவர்களும் குற்றவாளிகள் எனபது தேசத்தின் கூட்டு மனசாட்சி மட்டுமல்ல. திரையில் நடப்பது தெருவில் பிரதிபலிப்பது வெளிப் படையான சாட்சியாகும் .
வினோதினியின் வீட்டுக்கு வெகு விரைவில் எல்லா தலைவர்களும் வருவார்கள் . அஞ்சலி செலுத்துவார்கள் ,அறிக்கை விடுவார்கள் ,
அரசும் உதவித் தொகை வழங்கும் , குற்றவாளிகளை தண்டிப்பதாக முழங்கும் .
அஞ்சலி முதல் அடக்கம் வரை அனைத்தும் முடிந்தப் பின் அனைவரும் மறந்து விடுவர் .
அவளைப் பெற்றவர்கள் அவளின் புகைப் படத்துடன் ,நினைவுகளுடன்,
கண்ணீருடன் தங்கள் வாழ்க்கை நாட்களை நகர்த்துவர் .
உறவுகளை இழந்தவர்களின் இரவுகள் !
தங்கள் அன்புள்ளவர்களை இழந்தவர்களின் நாட்கள்
சொல்ல வார்த்தைகள் எம்மிடம் இல்லை .
அந்த வலிகளைப் போக்க எந்த மருந்தும் உலகில் இல்லை !
சுரேஷ் இப்போது பாதுகாப்பான அறையில் இருப்பான்
மூன்று நேர சாப்பாடு இலவசமாக கிடைக்கும் .
மருத்துவ வசதிகளும் குற்றவாளிக்கு ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது .பாவம் தனிமை கஷ்டமாகத்தான் இருக்கும் .அதுவும் கொஞ்சக் காலம்தான் அவன் கவலைப் பட வேண்டியதில்லை .
வெகு விரைவில் அவனுக்காக திறமையான வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். அரசியல் புலத்தில் இருந்தும் அவனுக்கு ஆதரவு கிடைக்கும். மனித உரிமை அமைப்புகள் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று போர்க் குரல் எழுப்பும். சீக்கிரம் ஒரு நாள் விடுதலையாவான் . சிரித்த முகத்துடன் பத்திரிக்கையில் பேட்டி கொடுப்பான் .அதையும் போட்டு காசுப் பார்ப்பார்கள் .
சுதந்திரத்தின் அர்த்தம் குற்றவாளிகள் விடுதலை செய்யப் படுதல் என்று பிற் காலத்தில் அகராதியில் மாற்றம் செய்யப் படலாம் .
ஆச்சரியப்படுவதற்க்கில்லை .
எதிர்வரும் காலத்தில் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது .
ஈவ்டீசிங் செய்யும் ஈனர்களைக் கண்டால்,
கற்பழிக்க வரும் காமுகர்களை எதிர்க் கொண்டால்,
நீ அவர் முகத்தில் ஆசிட் ஊற்றி விடு பாப்பா !