-தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ்
கருப் பை
சுமப்பதெல்லாம் …
வியப்பை பெறுவதல்ல ..!
ஆனால்
ஒரேயொரு கருப்பை
மட்டும்
வியப்பை சுமந்திருந்தது …!
அது
யாருடைய கருப் பை …?
அன்னை ஆமீனா (ரலி)
அவர்களின்
கருப் பைதான் அது …!
இந்த உலகைத் திருப்பிப்போட
ஒரு மாமணியைச் சுமந்திருந்த
கருப் பை அது…!
தந்தை அப்துல்லா
தாய் அன்னை ஆமீனா…!
இந்தத் தம்பதிகளின்
பிள்ளை நிலாதான்…
அந்தக் கருப்பை தந்த
மாணிக்கம்…! மரகதம்…!
இந்தப் பிள்ளை நிலா
பேசிய பிறகுதான்…
அம்மண உலகம்
ஆடை கட்டிக் கொண்டது..!
அதுவரை… அந்தோ..
அறியாமைப் பாயில்
சுருண்டே… கிடந்தது.
அந்தப் பிள்ளை நிலா யார்…?
நம் உயிரின்… உயிர்…!
ஏக இறைவனின்
அருட்கொடை !
உலக முகங்களுக்கெல்லாம்
புன்னகை சேர்க்கவந்த
அஹமது அவர்கள்…!
அண்ணல் நம் பெருமானார் (ஸல்)
அவர்கள்தான் !
இரு நூறு ஆண்டுகளில்
செய்ய வேண்டிய சீர்திருத்தத்தை
தாமே வாழ்ந்து காட்டி
இருபத்து மூன்றே ஆண்டுகளில்
செய்து காட்டியவர்..!
மண்ணுக்கு மட்டுமல்ல,
பெண்ணுக்கும்
பெருமை தேடித்தந்தவர்..!
உரிமை தேடித்தந்தவர்…!
உலகப் பல்கலைக்கழகமே
உத்தமர் நபி (ஸல்) வாழ்வியலைப்
படித்துக் கொண்டிருக்கிறபோது
இவரை…
உம்மிநபி என்கிறோமே…!
ஹீரா கல்லூரியில்
வேதம் பயின்றவர்
மறையொளியில்…
மனிதத்தை
உணர்த்தியவர்..!
ஆக…
நம் கண்ணிய நபி (ஸல்) அவர்கள்
சிறந்த கல்வியாளர் தானே..!
வாருங்கள்..!
நம் மாநபி (ஸல்) வழி நடப்போம் !
மாண்புகள் வாழ்வில் குவிப்போம் !
நன்றி : இளையான்குடி மெயில் – பிப்ரவரி 2012