தாயில்லாமல் நானில்லை !
கவிஞர் சீர்காழி இறையன்பனார்
தாயிற் சிறந்ததொரு உலகமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை;
தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு
தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !
தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை !
தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை !
சோகத்தைக் கண்டால் கண்ணீர் விடுவாள்
சுகத்தினை வேண்டி இறைவனைத் தொழுவாள் !
சீர்பெறும் கருணையால் தினமும் சிறப்புறுவாள் !
சிந்தைக்கு வழிவிட்டு தாள் திறப்பாள்;
பேர் பெருகும் சபையினிலே உனை வைப்பாள் !
பார் புகழும் பாராட்டில் உனை நனைப்பாள் !
பசி தீர்த்துப் பட்டினியை அவள் போக்குவாள்
பாசத்தால் உச்சிமுகர்ந்து உவகை பெறுவாள்;
அழகு செறியும் வாயினிலே கலிமா சொல்வாள் !
பழகும் உறவின் பாசத்திலே பண்பு காட்டுவாள் !
பேணுகின்ற இறைவழியில் பிழைத் தேடுவாள்
நாளும் அறிய நற்கல்வியை அவள் தருவாள்
நாடறிய உன்னை நல்வழியில் நடத்துவாள் !
அன்றலர்ந்த மல்லிகையின் இதழைப்போல
அகம் திறந்து முகமலர்ந்து சிறந்திடுவாள்;
தன் அன்னை உண்ணவும், உறங்கிடவும்
உளம் தந்து நலம் பேணி மகள் வாழ்வாள் !
நன்றி : நர்கிஸ் – மே 2012