தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் பயன்பாடு

இலக்கியம் கட்டுரைகள்

முன்னுரை :

நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு ஊட்டலாம், நாளை நிலவிலேயே சோறு சமைக்கலாம். இத்தகைய நவீனம் நாளும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இணையத்தின் தன்னிகரில்லாச் சேவைகள் மற்றும் தேவைகள் பற்றியும் அதை கல்விக்கு எவ்வகையில் பயன்படுத்தலாமென்பது பற்றியும் குறிப்பாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

கணினியில் தமிழ் மொழியின் தாக்கம் மற்றும் ஆளுமை…….

கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், காகிதம் என பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்ற தமிழ் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதன் விளைவுதான் இன்று நாம் இங்கு ஒன்று கூடி விவாதிக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. 1980ம் ஆண்டு முதல் கணினியில் இடம் பெறத் துவங்கியது தமிழ். 1995ம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய 17 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தச் சூழலில் அதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணைக் கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ் இணையத்தை வலுப்பெறச் செய்து வருகின்றனர்.
இணையத்தில் தமிழ் இன்று ஆட்சி செய்து வருவதால் எளியவரும், வறியவரும், மொழி ஆளுமை அற்றவரும் கூட இன்று உலகம் முழுமைக்கும் இருந்த இடத்திலிருந்தே பயணிக்க முடிகிறது. இன்றைய இணைய உலகால் தமிழ்ப் பயன்பாடு, கலாச்சாரம் உலகம் முழுதும் மிக விறைவாக பரவி வருகிறது. தமிழில் உள்ள வலைத் தளங்கள் வாயிலாக தமிழர் செய்திகளை அறிந்து கொள்ளவும், பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்களைப் பெறவும், இணையத் தமிழ் இதழ்களைப் படிக்கவும், தமிழிசையைக் கேட்கவும், தமிழ்க் காணொலிகளைக் காணவும் முடிகின்றது. மொத்தத்தில் தற்கால தகவல் தொழில் நுட்ப உலகில் தமிழைத் தழைக்கச் செய்ய வேண்டிய முயற்சிகள,  செயல்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதே உண்மை நிலை.

 

 

 

கணினி மூலம் கல்வி வளர்ச்சி…………

மற்ற எல்லாத் துறைகளையும் போலவே இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பழைய மரபு வழி சார்ந்த கற்றல் கற்பித்தல் முறைகள் பலவும் தற்போதைய வகுப்பறைகளில் மாறி நவீனமான புதிய  முறைகள் இடம் பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விரிவு, பயன்விளைவு, கவர்ச்சி, மனமகிழ்வு, பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்வி முறை இன்றைய காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. மேலும் கற்றல்  கற்பித்தலுக்கு உதவும்  வகையில் பல வகையான இணைய வசதிகள், செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள் முதலியவை தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.

 

தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப்பள்ளி தொடங்கி உயர் கல்விக் நிறுவனங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தகையச் சூழலில் கற்றல் கற்பித்தலில் இணையமும், இணையம் சார்ந்த வசதிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டன எனலாம். கோலின்சு என்பார் 1996 – 97 ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் தடம் பதித்து விட்டது என்கிறார். இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் இன்று மிகவும் புகழ் பெற்றதாகவும் எல்லோராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது.

 

இணையத்தில் தமிழ்……….

தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் கொண்டேவருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய வசதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணைய உலகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் முதலான அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிப் கல்வி வரையில் இணையத்தில் படிக்கக் கூடிய வசதிகள் தற்போது உள்ளது. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகு முறைகளோடு கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவ்வகையில், தமிழ் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய வசதிகள் குறித்து பார்த்தோமேயானால், இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாக வளர்ச்சி பெற்று  இருக்கின்றது. எழுத்துரு, படங்கள், அசைவுப் படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி-ஒளி காட்சிகள், இணைய உரையாடல், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல எளிமையாகப் பயன்படுத்தக் கூடியவை. இவ்வாறு பல்லூடகமாகச் செயல்படும் இணையத்தில் உள்ளவற்றை கணினியில் சேமித்து வைத்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. அதே போல், நம்மிடம் உள்ளவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் உள்ள கணினிப் பயனாளர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. இப்படியான, அரிய வாய்ப்பினைத் தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய ஆற்றலும் திறமும் ஆகும்.

 

 

இணைய வழிக் கல்வி……….

இணையம் வழி கற்றல் கற்பித்தல் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. பல்வேறு விதமான கல்வி மேம்பாட்டு செயல்கள் நிறைவு பெற இயலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை …………….

*              பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

*              ஓர் குறிப்பிட்ட தலைப்பிலான பாடத்தை பற்றிய கூடுதல் தகவலை அறிந்து     கொள்ளும் வகையில் இணைப்புகளைப் பயன்படுத்தலாம்.

*              எல்லா மாணவர்களும் ஒரே விதமான பாடத்தை படிக்க வேண்டிய கட்டாம் இல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது

.*             மாணவரை மையமாகக் கொண்ட பாடத்திட்டத்தை வகுக்கலாம்.

*            மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கவும் பல புதிய சிந்தனைகளை வெளிக்காட்டவும் பயன்படுகிறது.

*              எழுத்து (text),  ஒலி (sound),  காட்சி (visual),  அசைவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor),  இருவழித்தொடர்பு (interactive) எனப் பல வகையில் கற்பதற்குறிய வாய்ப்பு கிடைக்கின்றது.

*              மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திடவும் அவற்றை அளவிடவும் இம்முறை சிறப்பானது.

*              மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி  ஆய்வு மனப்பான்மையை வளர்க்கிறது.

*              கற்பதற்குறிய குறிப்பிட்ட காலமோ, இடமோ, தக்க சூழலோ தெவையில்லை.

*              தேவையான  அனைத்து தகவல்களையும் விரைவாகவும், விரிவாகவும் பெற முடிகின்றது.

*              கற்றலில் ஏற்படும் சந்தேகங்களை பல முனைகளிலிருந்தும் ஆய்ந்து, கேட்டறிந்து தாமே தீர்வு காணும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

*              தாம் கற்றதை தாமே மதிப்பீடு செய்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

 

துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் இணைய அறிமுகம்…….

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கணிணியை கண்ணால் காண்பதே மிகப்பெரிய அதிசயம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தமட்டில் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேநிலைப் பள்ளிகளிலும் கணிப்பொறிகள் பயன்படுத்தும் வசதி கிடைத்து விட்டது. ஆம், அனைத்து பள்ளிகளிலும் மேசைக் கணிணிகளும், மடிக் கணிணிகளும் உள்ளது. அவற்றைக்கொண்டு இன்று இணைய அறிமுகத்தை மேற்கொண்டால் நாளைய உலகம் நம்கையில் என்பதற்கேற்ப இன்றைய இளைய தலைமுறை மிக வேகமாக இத்துறையில் முன்னேற்றம் காண வழி கிடைக்கும்.  இதன்மூலம் உலக அரங்கில் இணைய பயன்பாடு என்பதே கோலோச்சும்.

 

துவக்க/நடுநிலைப் பள்ளிக் கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு……….

இன்று கல்வி என்பது வெறும் பாட அறிவு என்பதில் இருந்து வேறுபட்டு உலகியல் அறிவை வளர்ப்பதோடு அன்றாட நடைமுறைச் செய்திகளையும் புதுப்பித்துக்கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டும் என அனைவரும் எதிர் நோக்குகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே இன்று அரசானது துவக்க/நடுநிலைக் கல்வி கற்பித்தல் முறையை 1 முதல் 4 வகுப்பு வரையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SIMLIFIED ACTIVITY BASED LEARNING) என்றும், 5 ஆம் வகுப்பு எளிய படைப்பாற்றல் கல்வி (SIMPLE  ACTIVE LEARNING METHODOLOGY) என்றும், 6 முதல் 8 வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி (ACTIVE LEARNING METHODOLOGY)  என்றும் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. இச் சூழலில் வெறும் பாடபுத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் அது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பொய்த்துப்போகச் செய்துவிடும்.

 

இச்சூழலில்தான், நமக்கு கைகொடுக்கும் புதியமுறை இணைய வழிக் கற்றல்/கற்பித்தல் ஆகும். அனைத்து பள்ளிகளிலும் இணைய வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது ஆசிரியர்கள் தமது அறிவாற்றலை உயர்த்திக்கொள்ளும் அதே வேளையில் மாணவர்கள் நாளும் பல புதியச் செய்திகளையும், கற்றல்  அனுபவக்களையும் பெற வாய்ப்பு ஏற்படும். மேலும் நடுநிலைக் கல்வி பெறும் வயது என்பது (6 முதல் 8 வகுப்புகள்) 10 முதல் 14 வரையானது இக்காலக்கட்டம் மாணவர்கள் எதையும் விளையாட்டு வழியில் எளிமையாகக் கற்கும் காலம் இக்காலகட்டத்தில் கற்கும் எதையும் தம் வாழ்நாளில் மறத்தல் இயலாது. எனவே இப்பருவத்தில் இணையவழிக் கல்வியை அறிமுகம் செய்யும் போது அது மிகு பயனை விளைவிக்கும். மேலும் இக்கல்வி முறையை தொடர்ந்து பின்பற்றும் மாணவன் ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில், ”தானே கற்றல் ” (SELF LEARNING) முறைக்கு மாறிவிடுவான்.

 

தமிழ் இணையக் கல்விக் கழகம் அறிமுகம்……….

மேற்காண் இணைய கற்றல் முறையை ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்திட பெரும் உதவியாக அமைந்ததுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். இதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள ஓர் மாணவன் துவங்கிவிட்டாலே அவனுக்கு கற்பித்தலுக்கு ஆசிரியர் துணை தேவைப்படா. ஆம், காரணம் அதில் உள்ள நூலகம்,  இணைய வகுப்பறை, அகராதிகள், கலைச் சொற்கள், சுவடி காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என உள்ள பல்வேறு வசதிகள் இணையத்தை பயன்படுத்தும் அனைவரையும் கவரும்.

 

தமிழ் இணையப் கல்விக் கழகம் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் எளிதில் தமிழை அடிப்படை அரிச்சுவடியில் துவங்கி முதுநிலை பட்டப் படிப்பு வரையில் பயில இயலும். இத்தளத்தில் காணும் நூலகம் சென்றால் அங்கு காணும் ஆயிரக்கணக்கான நூல்கள் மிக அரிதானவை இந்த நூலகத்தை இதுவரையில் பார்வையிட்டவர்கள் 2,78,145 பேர் (04.1.2012 வரையில்) ஆவர்.

 

கல்விக்கான சில இணைய தளங்களும் அவற்றின் சேவைகளும்……….

தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பல இணையத் தளங்கள் உள்ளன. தமிழை முதல் மொழியாகக் கற்பதற்கும்,  இரண்டாம் மொழியாகக் கற்பதற்கும் இணையத் தளங்கள் வந்துவிட்டன. அதுமட்டுமல்லாது,  ஆங்கிலம் உள்ளிட்ட பல அயல் மொழிகள் சார்ந்தோரும் தத்தம் மொழி வழியாகத் தமிழ் கற்றல் என்பது இன்று மிக எளிதானதாக உள்ளது. முறையாக வடிவமைக்கப்பட்ட கலைத் திட்டங்கள், பாடங்கள் ஆகியவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.

 

தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் மொழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க இயலாது.  அதுபோல, உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ்க் கல்விக் கழகங்கள் அல்லது கல்விக் கழகத் தமிழ் இருக்கைகள் இணையம் மூலமாகத் தமிழ்க்  கல்வியை கற்பித்து வருகின்றன.

 

தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் அதிக அளவில் இருக்கின்றன. இவை கற்றல் கற்பித்தலுக்கு பயன்படக் கூடிய பல்வேறு கற்றல் மூலங்களை (Veries Learning Sources) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி செயல்படுத்திடவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றன.  அதிகம் விலை கொடுத்து மிகப்பெரிய அளவிலான கலைக் களஞ்சியங்கள்,, அகரமுதலிகள் ஆகியவற்றை வாங்கிச் சேமித்து வைக்க வேண்டிய வேலையோ அல்லது எங்கு சென்றாலும் அவற்றைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியமோ இல்லா நிலையில் இன்று இருக்கும் இடத்திலேயே விரல் நுனியில் விவரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினை இணையம் வழங்கிக்கொண்டிருக்கிறது.

 

இது தவிர தமிழ் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்‌ஷனரி ஆகியன இணைய வழிக் கற்றலுக்கு மிகவும் பயன்தருவனவாகும். தமிழ் விக்கிபீடியாவில் இன்று வரையில் 49,688 (04.12.2012நாளின் படி) கட்டுரைகள் வலையேற்றப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் விக்ஷனரியில்  2,75,283 (04.12.2012நாளின் படி) கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

கல்வி வளர்சிக்கு உதவிடும் சில இணைய தளங்கள்

*              www.tamilvu.org

*     http://ta.wikipedia.org

*     http://ta.wiktionary.org/wiki/

*     www.tamil.net

www.tamil.org

*     www.southasia.upenn.edu/tamil

*     www.languageshome.com

*     www.tamildigest.com

*     www.tamilheritage.org

*     http://hongkongtamil.blogspot.com

*     http://www.thozhilnutpam.com

*     http://www.tamildict.com

*     http://tamilelibrary.org

*     http://www.chennailibrary.com

 

எல்லோருக்கும் இணைய வழிக் கல்வி………..

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது அந்நாட்டில் வெளிப்படும் புதிய படைப்பாற்றல். மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கக் கணினி மென்பொருள் வசதியுடன் கூடிய மொழிப் பயிற்று முறை அனைத்து வகுப்பறைகளிலும் கொண்டுவரப்படல் வேண்டும். அன்றைய ஓலைச்சுவடி முதல் இன்றைய இணையம் வரை தகவல் பகிர்தலின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக் காட்ட வேண்டும். தமிழில் கற்பிக்க மிகமிக எளிமையான சொற்களையே பயன்படுத்துதல் வேண்டும். கற்பவருக்குக் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்திட்டங்களும் பாடப்பொருளும் அமையப் பெறல் வேண்டும்.

முடிவுரை :

நேற்றைய உலகம் இருண்டு கிடந்தது, இன்றைய உலகம் வெளிச்சமாக இருக்கிறது. நாளைய உலகம் பிரகாசமாக இருக்க வேண்டும். அதற்குத் தேவை அனைவருக்கும் தரமான அடிப்படை கல்வி. அதை இணையம் வழி இனிதே வழங்குவோம்! இன்சுவைக் கனிகள் பலவும் புசித்து மகிழுவோம்.

 

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை – 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in
                     http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *