(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)
முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின்
முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே !
முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை
மூவேதம் புகழ்பாடும் அற்புதமே !
பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே ! – மனிதப்
பண்பொழுக்கம் அனைத்திற்கும் முழுவுருவே !
அதிபுகழுக் குரியவரே ! முஹம்மதரே ! – உம்மை
அன்பாலே புகழ்ந்துரைப்பேன் ! ஏற்பீரே !
சிலை வடிக்க ஷரீஅத்தில் சட்டமில்லை – அனுமதித்தால்
சந்திரனைப் பிளந்துமக்கு சிலைவடிப்பேன் !
மலைச்சிகரம் இமயத்தில் ஏற்றி வைப்பேன் – என்
மலர்விழிகள் மூடாமல் காத்திருப்பேன் !
தலைக்கவிஞன் கம்பனையே அழைத்து வந்து – கன்னித்
தமிழ்மொழியில் கவியெழுதப் பணித்திடுவேன் !
கலைஞனை வாழ்வு தந்த எங்கள் நபியே ! – அந்தக்
கவிதைகளை மலைமுதுகில் செதுக்கி வைப்பேன் !
மறுபிறவி என்றொன்று உண்டென்றால் – அதில்
மாதரசி ஆமினாராய்ப் பிறப்பெடுப்பேன் !
நறுமலரே உம்மையெந்தன் கருவில்வைத்து – உலகின்
நாற்றிசையும் புகழ்பாடப் பெற்றெடுப்பேன் !
நறுமணமாய் பூப்பறித்து பாதைசெய்து – உம்மை
நடக்கவைத்து ரசித்திடுவேன் ! மகிழ்ந்திடுவேன்!
மறுபடியும் நபிப்பட்டம் கொடுக்கும்போது – நான்
மலைக்குகையாம் ‘ஹீரா’வாய் உருவெடுப்பேன் !
சின்னஞ்சிறு ஆசைகளை நெஞ்சில் வைத்து – ஒரு
சிறுகவிதை படைத்துங்கள் பாதம் வைத்தேன் !
என்னையொரு மானிடனாய் ஏற்றுத்தங்கள் – மின்னும்
எழிற் கரத்தால் இறுகணைத்து அருளவேண்டும் !
இன்னுமென்னை சோதனையில் ஆழ்த்த வேண்டாம் – உங்கள்
எழிற்பார்வை வீசாமல் மறுக்க வேண்டாம் !
அன்னையொத்த கருணையுடன் பார்க்க வேண்டும் – என்
ஆருயிரே ! உங்களோடு சொர்க்கம் வேண்டும் !