நபி (ஸல்) அவர்களின் அருள்மொழிகள்
வறுமை நீங்கி செழிப்பு உண்டாக …
பிரார்த்தனையைத் தவிர, வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.
நற்செயல்களைத் தவிர, எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
ஒருவர் தமது இல்லத்திலிருந்து ஒளுச் செய்து கொண்டு தொழுகைக்காக பள்ளிவாசலை அடைகின்றாரோ, அவர் ஹஜ்ஜு மாதத்தின் சமயம் இஹ்ராம் ஆடை அணிந்து ஹஜ்ஜுப் பயணம் செய்பவர் போலாவார்.
நபில் தொழுகைகளை உங்கள் இல்லத்திலேயே அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வறுமை நீங்கி செழிப்பை உண்டாக்கும்.
ஒருவன் தன் மனைவியின் கெட்ட குணத்தை பொறுமையுடன் தாங்கிக் கொண்டால், பெரும் பெரும் துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொண்ட அய்யூப் நபி (அலை) அவர்களுக்கு அருளிய நற்கூலியை அல்லாஹ் கணவனுக்கு அருள்வான்.
ஒரு பெண் தன் கணவனின் கெட்ட குணத்தை பொறுமையுடன் தாங்கிக் கொண்டால் அவளுக்கு, கொடுமைக்கு ஆளான பிர்அவ்ன் மனைவி ஆசியா அவர்களுக்கு அருளிய நற்கூலியை அல்லாஹ் அருள்வான்.
ஒருவன் ஒரு நன்மை செய்ய எண்ணி அதை அவன் செய்யவில்லையானால், அல்லாஹ் அதற்கு ஒரு நன்மையை பதிவு செய்கின்றான். நன்மை செய்ய எண்ணி அதை செய்தால், பத்து நன்மை முதல் எழுநூறு மடங்கு வரை அதையும் விட பல மடங்கு அருள்வான்.
ஒருவர் குர்ஆன் ஓத ஆரம்பித்தால், அவர் அதை முடிக்கும் வரை வானவர்கள் அருள் பொழிய இறைவனிடம் துஆ கேட்டவர்களாக இருப்பார்கள்.
மறுமை நாளை மறக்கச் செய்யும் உலகை விட்டும், மரணத்தை மறக்கச் செய்யும் வாழ்க்கையை விட்டும், நற்செயல்களின் சிறப்புகளை மறக்கச் செய்யும் பேராசைகளை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து அதற்கு அவன் நன்றி கடனுக்காக அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை விட அதிகமான உபகாரங்களை கொடுத்து விடுகிறான்.
ஈமான் கொண்டவருக்கு சிரமம், துன்பம், நோய் ஆகியவற்றில் ஏதேனும் நிகழ்ந்து அவரை கவலைக்கு ஆளாக்கினால், இறைவன் அவருக்கு அவற்றை, அவருடைய பாவச் செயலுக்கு பரிகாரமாக அவற்றை ஆக்கி போக்கடித்து விடுகிறான்.
நன்றி : நர்கிஸ் – ஜனவரி 2013