சீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் “சீனாவில் இன்ப உலா’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது.
ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர். தமிழ்மகளாக மாறிய அந்த சீனத்தின் கலைமகள் நமக்கு அளித்த பேட்டி:
தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? அதற்கென சிறப்பான காரணங்கள் இருந்தனவா?
1995ம் ஆண்டு நான் சீனாவின் லட்சக்கணக்கான சாதாரண இடைநிலைப்பள்ளி மாணவர்களில் ஒருத்தியாக இருந்தேன். இந்தியாவின் சுவையான புராணங்களும், கதைகளும் எழில்மிக்க பண்பாடுகளும் என்னை ஈர்த்தன. அவ்வாண்டு சீனச் செய்தித் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வகுப்பை ஆரம்பிக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள எவ்வித தயக்கமும் இன்றி முடிவு செய்தேன்.
தமிழ் கற்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எவை? தமிழிலில் உள்ள ழ,ள,ல, ர,ற, ன,ண,ந, போன்ற எழுத்துகள், அவற்றின் உச்சரிப்புகள் உங்களுக்குச் சிரமத்தைத் தரவில்லையா?
உச்சரிப்பு பற்றி சிரமம் ஏதுமில்லை. தமிழ் கற்றுக் கொண்ட துவக்கத்தில் 247 எழுத்துக்களைக் காணும் போது வியப்படைந்தேன்.
சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் எவை? சீன மொழி தெரிந்தவர் தமிழ் மொழியை எளிதாகக் கற்றுக் கொள்ள இயலுமா?
சீன மொழியும் தமிழ் மொழியும் உலகில் மிகவும் பண்டைய மொழிகளாகும். உலகில் நீண்டகால வரலாறுடைய பண்பாடுகளை இவ்விரு மொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சீன மொழி எழுத்து, சதுர வடிவமாகும். அது சீன மொழியின் தனிச்சிறப்பியல்பு. அதிலிருந்து தமிழ் எழுத்துகள் மேலும் அதிகமான மாற்றங்களைக் கொண்டு உள்ளது. பெயர்ச் சொற்களோ, வினைச் சொற்களோ, வேறுபட்ட நிலைமையில் வேறுப்பட்ட வடிவமாக மாறும். இது தமிழ் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மிக பெரிய சிக்கல்தான்.
சீனாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன? அவற்றில் நீங்கள் எத்தனை மொழிகள் பேசுவீர்கள்?
சீனாவில் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட உச்சரிப்புள்ள மொழிகளைக் கேட்கலாம். சீனாவில் மொத்தமாக 56 தேசிய இனங்கள் உள்ளன. பெரும்பாலான இனங்கள் சொந்த மொழிகளைப் பேசுகின்றன. எனக்கு ஷாங்காய், குவாங்துங், ஷான்சி முதலிய இடங்களின் மொழிகளைப் பேச முடியும்.
“சீனாவில் இன்ப உலா’ என்று சீனாவிற்குச் சுற்றுலா செல்ல ஆர்வத்தை ஏற்படுத்தும் புத்தகத்தை எழுத என்ன காரணம்? அதுவும் தமிழில் எழுதக் காரணம் என்ன?
1999ம் ஆண்டு முதல் இதுவரை சீன வானொலியில் 13 ஆண்டுகளாக வேலை செய்தேன். தமிழ் ஒலிபரப்பு மூலம் எண்ணற்ற தமிழ் நேயர்கள் நண்பர்களாக மாறினார்கள். தமிழ் நண்பர்கள் சீனாவைப் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டனர்.
மேலும், நான் சீனாவில் பணிப்பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காய், பெய்ஜிங், தியென்சின் முதலியவற்றில் தமிழ் பயணிகளைச் சந்தித்துள்ளேன். உலகில் சீனா மேன்மேலும் முக்கியமான இடம் பெற்றுவருவதால், மேலதிகமான தமிழர்கள் சீனாவை அறிந்துகொள்ள விரும்புகின்றார்கள் என்று நினைக்கின்றேன். குறிப்பாக, தமிழர்களிடம் ஓர் உண்மையான சீனாவை அறிமுகப்படுத்தும் வகையில் இப்புத்தகத்தை எழுதினேன்.
உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். தமிழைக் கற்பது, தமிழில் புத்தகங்கள் எழுதுவது தமிழ் வானொலியில் வேலை செய்வது என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடைய குடும்பத்தினர் என்ன கருதுகிறார்கள்?
உண்மையில், என் கணவர் மொழி வேலையில் ஈடுபட்டவர். அவர் ஸ்பெயின் மொழிக் கற்றுக்கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் ஸ்பெயினில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோம். விரைவில் அவருடன் இணைந்து தமிழகத்தில் பயணம் மேற்கொள்வது என்னுடைய ஆசை.
சீனாவின் மக்கள் வாழ்க்கை, பிற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைவிட எந்தவிதத்தில் வேறுபட்டு உள்ளது?
என்னுடைய புத்தகத்தில் இது பற்றிய சில பதில்களைப் பார்க்கலாம். அதேவேளை, தமிழ் நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு வருகை தந்து தாமாகவே தெரிந்து கொள்வதை வரவேற்கின்றோம்.
தொலைக்காட்சி, இணையதளம் போன்ற காட்சி ஊடகங்கள் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், வானொலி கேட்பது குறைந்து வருகிறதே, அதை எப்படி அதிகரிக்க முடியும்?
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பைக் கேட்கும் தமிழ் நேயர்கள் மிக அதிகம். இவ்வாண்டு தமிழ் ஒலிபரப்பு துவங்கிய பொன் விழா நினைவு ஆண்டாகும். இப்போது, சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு, ஒலிபரப்பை விட, இணையதளம், “தமிழ் ஒலி’ என்னும் இதழ் ஆகியவற்றின் மூலம் தமிழர்களுக்கு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றோம். விரைவில் கைபேசி மூலம், மேலதிகச் சுவையான தகவல்களை வழங்குவோம்.
உங்களுடைய பெயர் ஜாவோ ஜியாங் என்றிருப்பதைக் “கலைமகள்’ என்று ஏன் மாற்றிக் கொண்டீர்கள்?
உலக அளவில் மிக பண்டைய மொழி தமிழ்மொழி. என் வேலை காரணமாக மட்டுமல்ல, இந்த மொழி மூலம் இந்தியாவை மேலும் நன்றாகப் புரிந்துகொண்டேன். தமிழ் மொழி மூலம், சீன-இந்திய மக்களுக்குமிடையே தொலைவைக் குறைத்து, மேலும் நெருங்கிய உறவு உருவாக்க முயற்சி செய்து வருகின்றேன். ஓர் உண்மையான தமிழரைப் போல தமிழகத்தை மேலும் புரிந்துகொள்ள விரும்பியதால், எனக்குத் தமிழ்ப் பெயர் கொடுத்தேன்.
நன்றி :- ந.ஜீவா, தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், 03-02-2013
http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1444049.ece