ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம் அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல உயர்ந்து நிற்கும் கட்டிடம்!
பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது! வள்ளுவர் சிலை பலகாலம் முடிக்கிடந்ததை விழா எடுத்து வெளிக்கொணர்ந்து இன்றும் வருடாவருடம் வள்ளுவர் நாளை விமரிசையாகக்கொண்டாடுகிறது. தமிழ்ச்சங்கத்தின் உள் அரங்கத்தின் பெயரே வள்ளுவர் அரங்கம்தான் எங்கும் தமிழ்ப்புலவனின் படங்கள் அவன் எழுதிய குறள்கள் அதற்கான மிக அழகிய படங்கள், நால்வகை நிலம் பற்றிய சித்திரங்கள் என்று கலைக்கூடமாக காட்சி அளிக்கிறது.சங்கத்தின் அரிய பணிகள் பலப்பல. ஏரிக்கரைகவியரங்கம் என்று மாதாமாதம் புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள் சில சமயங்களில் அல்சூர் ஏரியில் படகில் வலம் வந்தபடியே கவிதைகள் பொழிவார்கள் கவிஞர்கள்!
வள்ளுவரைப்பல்லக்கில் வைத்து வருடாவருடம் வீதி உலா வருகிறார்கள் அந்த சமயம் பல அமைப்புகள் சங்கத்திற்கு உதவுகின்றன. பல திரைநடிகர்களின் ரசிகர்சங்கங்கள் அதில் பணிபுரியும் இளைஞர்கள் பலவிதங்களில் உதவுகிறார்கள்.நான் என்னவோ ரசிகர்மன்றங்கள் என்றாலே அவர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் பல ரசிகர்மன்றங்கள் பலவிதமான நற்பணிகள் செய்கின்றன. அவர்கள் அனைவரையும் சிறப்பிக்க நேற்று அத்தனை பேரையும் வரவழைத்து பொன்னாடை போர்த்தி நற்சான்றுப்பத்திரமும் கேடயமும் அளித்தார்கள்.
தொடர்ந்து சங்கத்தின் இலக்கியபணியாக கதை கவிதை கட்டுரைப்போட்டியில் வென்றவர்களையும் சிறப்பித்தார்கள்..நாற்காலியில் அமரவைத்து பொன்னாடை போர்த்தி சான்றிதழ் கேடயம் கையில் அளித்து(அதை பத்திரமாய் எடுத்துப்போக கூடவே ஒரு ப்ளாஸ்டிக்கிலான பெரிய பையும் தந்து) இறுதியில் சிற்றுண்டியும் இட்டு அனுப்பினார்கள்!
பெரிய பெரிய பத்திரிகைகள் சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகளை வருடாவருடம் நடத்துகின்றன அவற்றில் சிலவற்றில் சின்னச்சின்ன பரிசினை வென்ற அனுபவம் எனக்கு உண்டு. அமெரிக்கப்பத்திரிகையான தென்றல் சிறுகதைப்போட்டி நடத்தியபோது கதை கிடைத்தமைக்கும் பரிசீலனையில் இருப்பதையும் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கச்சிதமாக செய்தார்கள்..பரிசுபெற்றவர்களு க்கு பாராட்டுப்பத்திரம் தவிர சிறுபரிசுப்பொருட்கள் புத்தகங்கள் இவைகளை சன்மானத்தொகைக்கான காசோலையுடன் அனுப்பிவைத்தார்கள். கூடவே ஆசிரியர் கைப்பட எழுதிய பாராட்டுக்கடிதம்! தென்றல் பெயரில் மட்டுமல்ல அவர்களின் செயலிலும் தெரிந்தது!
விகடன் , அதன் பவழவிழாவினை(1997) காமராஜர் கலைஅரங்கில் மிகப்பிரமாதமாக நடத்தி அப்போது விகடனில் வைத்த போட்டியில் வென்றவர்களுக்கு அரங்கில்முதல் இரண்டு வரிசைகளில் உட்காரும் நாற்காலியில் பெயர் எழுதிவைத்து மேடைக்கு பணியாளருடன் கூட்டிச்சென்று இன்னாரின் இந்தபடைப்புக்கு இன்ன பரிசென்று(எனக்கு அப்போது படக்கதைப்போட்டியில்முதல்பரிசு 30ஆயிரம் ரூபாய்) கூறி சான்றோர் பெருமக்களைவிட்டு மாலை அணிவித்து மற்ற மரியாதைகளை செய்தார்கள்..
இலக்கியபீடம் என்றொரு பத்திரிகை அதற்கு திருவிக்கிரமன் ஆசிரியர் எண்பதுகளை எப்போதோ கடந்துவிட்டவர் அவரும் போட்டிக்கான பரிசளிப்புகளை விழா நடத்தி படைப்பாளிகளை கௌரவிக்கிறார் இன்னமும்,இதைப்பல சிரமங்களிடையே செய்துவருகிறார். ஆனால் பெரும்பாலான பிரபல பத்திரிகைகள் பரிசு கிடைத்த விவரத்தைக்கூட சில நேரம் தெரிவிக்கத்தவறிவிடுவார் கள் நாமாக புத்தகம் வாங்கிப்பார்த்தால்தான் தெரி யவரும்:) இடம் ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்து பரிசளிப்பு விழா நடத்த தயங்குகின்றார்கள் ஏனென்றால் இதில் பொறுப்பு மிக அதிகம் செலவும் கூட! நான் ஒரு பத்திரிகையில் சிறுகதைக்குப்பரிசுவாங்கினபோது, ”ஆசிரியரே நீங்கள் எனக்கு சன்மானத்தொகை அனுப்பாவிட்டால் பரவாயில்லை நான் பங்கேற்று வென்றதற்கு சான்றிதழாவது அனுப்புங்கள்’ என்று நச்சரித்து வாங்கிக்கொண்டேன்!
படைப்பாளிக்கு பணம் இரண்டாமிடம்தான். பாராட்டுப்பத்திரம்தான் ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது.