குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

இலக்கியம் கட்டுரைகள்
kulandai
(அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை !
கட்டுரை நீளமானது என்று விட்டு விட வேண்டாம் ,நமது குழந்தைகளுக்காக /பொறுத்துகொள்வோம் 🙂
குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.
‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.]
படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் மீதான வன்முறை :
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை” சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?
கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.
நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.
குழந்தைகளை திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?
திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.
உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.
அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.
பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.
ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?
கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.
என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?
சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.
பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?
ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.
குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?
ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.
ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை…
எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.
“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.
அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.
மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர… இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க…. (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)
உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன.
கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.
அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.
சொன்னபடி கேட்காத பிள்ளையை என்ன செய்வது?
கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?
அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்… குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம்.
நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.
பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும்.
குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது.
குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்……….
as received from
MADHIYALAGAN
TRICHY

Trichy Prasannan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *