“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.
“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”
அப்பாஸ் இப்ராஹீம்
“இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை”
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI
கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு
திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.
ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”
ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.
கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.
அரபி மூலம் – தமிழாக்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.
மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.
இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;
வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!
ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!
ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.
திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.
திறப்பு
எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.* * *
உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”– கண்ணதாசன்
எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.
கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்
சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.
திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.
“சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!”(“கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 146)
கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.
“புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”(“கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)
நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.
“நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்” என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,
“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”
என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!
கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
“மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!”
என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,
“எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!”
என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,
“எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!”
என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.
கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.
“எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!”
என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.
பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக…, கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.
நிறைவுரை
இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.
நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், “அல்ஃபாத்திஹா” எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் “திறப்பு” என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
– பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்
(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)
http://www.islamkalvi.com/portal/?p=181