ஆண்மை உருக்கொண்ட அந்தணன் – எங்கள்
அண்ணல் விவேகா னந்தனின்
மாண்பை அளந்திட எண்ணினால் – இந்த
மண்ணையும் விண்ணையும் பண்ணலாம். 1
காமனைப் போன்ற அழகினான் – பொல்லாக்
காமத்தை வென்று பழகினான்;
சோமனைப் போலக் குளிர்ந்தவன் – ஞான
சூரியன் போலக் கிளர்ந்தவன். 2
வீரத் துறவறம் நாட்டினான் – திண்ணை
வீணர்வே தாந்தத்தை ஓட்டினான்.
தீரச் செயல்களை நாடினான் – இந்தத்
தேச நிலைகண்டு வாடினான். 3
கர்மத் தவநெறி காட்டினான் – நல்ல
காரியம் வீரியம் ஊட்டினான்;
மர்மம், பலிதரும் பூசைகள் – இந்து
மதமல்ல என்றுண்மை பேசினான். 4
‘உலகை வெறுத்துத் துறந்தவர் – தெய்வ
உள்ளக் கருத்தை மறந்தவர்
கலக நடுவிலும் தங்குவேன்‘ – என்று
கர்ஜனை செய்திட்ட சிங்கமாம். 5
பெண்ணின் பெருமையைப் போற்றினான் – ஆண்கள்
பேடித் தனங்களைத் தூற்றினான்
மண்ணின் சுகங்களை விட்டவன் – ஏழை
மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான். 6
ஏழையின் துன்பங்கள் போக்கவும் – அவற்(கு)
எண்ணும் எழுத்தறி வாக்கவும்
ஊழியம் செய்வதே ஒன்றுதான் – தேவை
உண்மைத் துறவறம் என்றுளாம். 7
தேசத் திருப்பணி ஒன்றையே – உண்மை
தெய்வத் திருப்பணி என்றவன்;
மோசத் துறவுகள் போக்கினான் – பல
மூடப் பழக்கத்தைத் தாக்கினான். 8
அடிமை மனத்தை அகற்றினான் – உயர்
அன்பின் உறுதி புகட்டினான்
கொடுமை அகற்றிட முந்திடும் – தவக்
கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன். 9
ஐம்பது வருடங்கள் முன்னமே – செல்வ
அமெரிக்கச் சிக்காகோ தன்னிலே
நம்பெரும் இந்திய நாட்டவர் – கண்ட
ஞானப் பெருமையைக் காட்டினான். 10
வெள்ளையர் பாதிரி மாரெல்லாம் கேட்டு
வெட்கித் தலைகுனிந் தார்களே!
தெள்ளிய ஞானத்தைப் போதித்தான் – அவர்
திடுக்கிட உண்மைகள் சாதித்தான். 11
சத்திய வாழ்க்கையைப் பேசினான் – அருள்
சாந்தத் தவக்கனல் வீசினான்;
யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் – அந்த
உத்தமன் சொன்னதை வந்திப்போம். 12