எல்லாம் பழகிபோச்சு !

இலக்கியம் கவிதைகள் (All)
(பி. எம். கமால், கடையநல்லூர்)
இருட்டும் திருட்டும்
விரட்டும் விலைவாசியும்
புரட்டும் பொய்யும்
பொல்லாக் கொலைகளும்
எல்லாம் இப்போது
எங்களுக்குப் பழகிப் போச்சு !
நாங்கள்
வாக்குறுதிகளை நம்பியே
வாழ்க்கையை  இழந்தவர்கள் !
இலவசங்களுக்காக
வாக்குரிமைக்  கற்பை
ஆள்காட்டி விரல்
அடையாள மையில்
காணா க்கி  விட்டோம் !
ஆட்டு மந்தைகளாய்
ஆகிவிட்ட எங்களுக்கு
தலைகளைவிடத்
தலைவர்கள் ஏராளம் !
ஜனநாயகத்தில்
தலைகள்தான் எண்ணப்படும் !
ஆனால்
எங்கள் நாட்டில்
தறுதலைகள்
எண்ணப்படுகின்றன !
ராமன்களுக்கு
படையல்களா கப்
பள்ளிவாசல் சிதறல்கள் !
அபிஷேகம் நடப்பதோ
முசல்மான் குருதியில் !
குரங்குகள் கையில்
இந்தியப் பூமாலை !
செருப்புகள்தான்
சிம்மா சனங்களில் !
வாழ்க்கை இப்போது
வனவா  சத்தில் !
“இந்தியனாக இரு
இந்தியப் பொருளையே வாங்கு “
வாய்மையே வெல்லும் !”
வறுமையே வெளியேறு “
இதுவெல்லாம்
பழைய காலத்துப்
பத்தினி வசனங்கள் !
இப்போதோ-
இந்தியனாக இரு
அன்னியப் பொருளையே
ஆசை யுடன் வாங்கு!
நேர்மையே வெளியேறு !
பொய்மையே வெல்லும் “
இதுதான் இந்தியா
வல்லரசு ஆவதற்கு
வழிதிறக்கும் சாவிகள் !
தேசத் துரோகிகளைத்
தூக்கிலிட்டுக் கொன்றார்கள் !
இப்போதோ-
தூக்குக் கயிறுகளில்
தொங்குவது விவசாயிகள் !
தற்கொலைச் செய்திகளின்
அடிக்கோடாக
வறுமைக் கோடுகள்
வரையப் படுகின்றன !
முட்டாளும் மந்திரியாய்
முடிசூடிக் கொண்டால்
ஆயுள் முழுவதற்கும்
அரசாங்கப் பணம் கிடைக்கும் !
பட்டம் பெற்றவனோ
பரிதாபம் ! ஆயுளுக்கும்
பட்டினி மட்டுமே
பரிசாகக் கிடைக்கும் !
எல்லாம் எங்களுக்குப்
பழகிப் போச்சு !
இதுதான் நடக்குமென்று
எங்களுக்குத் தெரிந்தாலும்
ஓ ட்டெலும்பை  விட்டெரிந்து
ஒதுங்கிக் கொள்ளுகின்றோம் !
கலீபா உமராட்சிக்
கனவுகண்ட காந்தியைச்
சுட்டுக் கொன்றவர்கள்
சூழ்ந்திருக்கும் நாள் வரையில்
இந்தியா இமயத்தில்
ஏறிநின்ற போதினிலும்
ஒருபோதும் உயராது !
மனசுக்குள் எரிகின்ற
மதவெறியும் சாகாது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *