பொங்கும் இன்பம்

இலக்கியம் கவிதைகள் (All)

 

கே. ஏ. ஹிதாயத்துல்லா

 

 

பனைவெல்லம் பச்சரிசி பருப்பு

பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து

பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல்

பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !

 

பட்ட துன்பம் அதைப் பழையதோடு

நெருப்பி லிட்டுப் பொசுக்கி விட்டுஇனி

தொட்ட தெல்லாம் துலங்க போகி

வந்ததே எங்கும் இன்பம் தங்குதே !

 

கன்னியர் வேல்விழிகள் காளையரை நோக்க

காளையரோ ஜல்லிக்கட்டு காளைகளைத் தாக்க

குருதிச் சேற்றில் குளித்தெழும் வீரம்

பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !

 

நெற்றி வியர்வை நிலத்தின் உரமாக்கி

சேற்றை உழுது விதைத்து நெல்லாக்கி

பாருக்கு அளிக்கும் உழவனின் பொங்கல்

பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !

 

கிழங்கும் மஞ்சளும் மலைபோல் குவிய

கிழவியும் குழவியும் கரும்பை ருசிக்க

சுற்றம் சேர்ந்து காணும் பொங்கல்

பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !

 

சோரம் போனதில்லை தமிழன் ஒருநாளில்

வீரம் விளைந்த மண்ணடா இதுவென்று

உலகிற்கு சொல்லும் தமிழனின் பொங்கல்

பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !

 

தாய்ப்பால் வழியே தமிழ்பால் குடித்து

தமிழ் உரைக்கும் யாவரும் தமிழினம்

பொங்கலோ பொங்கலென உரக்கச் சொல்லி

வைப்போம் பொங்கல் வளர்ப்போம் ஒற்றுமை !

 

 

 

நன்றி :

முகவை முரசு

ஜனவரி 14 – 20, 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *