முதுமை

இலக்கியம் கவிதைகள் (All)
 
(பி.எம். கமால், கடையநல்லூர்)
முதுமை-
இள “மை”  வற்றிய
எழுதுகோல் !
காலம் மென்று
துப்பிய குப்பை !
வாழ்க்கைத் தொழுகையின்
“அத்தஹயாத்” இருப்பு !
அன்று-
குடும்பத் தேர்தலின்
தலைமைத் தேர்தல்
அதிகாரி !
இன்று-
வீட்டுத் தேர்தலில்
செல்லாத ஓட்டு !
முதுமை-
இயலாமை புகுந்த
இருட்டு வீடு !
நரைதான் அங்கே
நூலாம்படையோ ?
முதுமை-
வாழ்க்கை ஒளியில்
சிறகிழந்த ஈசல் !
மழை நின்ற பிறகு
கிளை விடும் தூவானம் !
முதுமை-
ஞானம் பிறக்கும்
கருவறை !
ஆரோக்கியத்தின்
கல்லறையும்  அது தான் !
இந்த-
அனுபவ மரத்தில்தான்
“பழ” மொழிகள்
கனிகின்றன !
முதுமை-
கடந்த காலப்
பழைய திரைப்படம்
முகம் காட்டும்
திரையரங்கம் !
ஆசைகளின்
சிறையரங்கமும்
இது தான் !
முதுமை-
காலன் எழுதும்
கையெழுத்து !
சுற்றித் தேய்ந்த
நிமிட முள் !
கற்களைக் கடித்துத்
துப்பிய பற்கள்
பஞ்சுமிட்டாய் கடிக்கப்
பலம் இழந்து போனது !
வாழ்க்கைப் பயணத்தில்
தீ மிதித்த கால்களுக்கு
“சில” பிள்ளைகள்
செருப்பாகிறார்கள் –
பலரோ
நெருப்பாகிறார்கள் !
துள்ளாட்டம் போட்ட
இளமை
தள்ளாட்டம் போடும்போது
காலன் அங்கே
கைகொட்டிச் சிரிக்கிறான் !
உயிரின் பல்லக்கில்
உட்கார்ந்து இருக்கின்ற
மரணம்
முதுமையைக்  கண்டு
முகம் மலர்கின்றது !
ஆயுளைக் களவாட
ஆயத்த தருணம்
இதுவென்று !
தேகத்து அணையில்
தேக்கிவைத்த உயிர்நீர்
வயது மதகு
வழியாக ஓடி
இதோ-
வற்றிக் கொண்டிருக்கிறது !
உடலை வரவேற்க
 மண்கடல்  கைநீட்டிக்
காத்திருக் கின்றது !
முதுமை-
செப்பனிட முடியாத
சிறுவீடு ; உடற்சுவற்றில்
ஒப்பனைகள் செய்தாலும்
உதிரநீர் வற்றியதால்
காரை பெயர்ந்து
காட்டிக் கொடுத்துவிடும் !
முதுமை-
யாருமே விரும்பாத
இறைவனின் அருட்கொடை !
முதுமை-
இறுதித் தேர்வு
எழுதும் நேரம் !
வாழ்க்கையின்
மாலைப் பொழுது !
இரவு எப்போது வரும் ?
இறைவனுக்கு மட்டுமே
தெரிந்த
“பரம(ன்) இரகசியம் !
 pmkamal28@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *