ஏலக்காய்

மருத்துவக்குறிப்புகள் மருத்துவம்

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

 

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில்
வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை
சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல்,
கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல்,
டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள்
நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி,
அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை
தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும்
குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து
ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே
மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு
நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும்
சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும்,
அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன
அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால்
ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி,
செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே
நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில்
போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு
நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக்
காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே
நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன்
நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி
வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து
பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில்
கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய்
தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *