மணம் வீசும் மணிச் சொற்கள் (நபிமொழித் தொகுப்பு)

இலக்கியம் நூல் அறிமுகங்கள்

அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி)

 

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள் இரண்டாம் இடம் வகிப்பது ஹதீஸ் எனும் நபிமொழிகள்தாம். அந்த நபிமொழிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாததுதான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் பிளவுகளுக்கும் பின்னடைவு-களுக்கும் முதன்மைக் காரணம் எனலாம். நமது நாட்டைப் பொறுத்தவரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழி-களை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய தெளிவை சமூகத்துக்கு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

நூலாசிரியர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் இலங்கையிலுள்ள புத்தளம் மண்ணின் மைந்தர் ஆவார். புத்தளம் நகரம் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு சிறப்பிடத்தைப் பெற்ற நகரம். காரணம் அந்த நகரில் காணப்படும் புரிந்துணர்வும் நல்லிணக்கமும்தான். எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் புத்தளத்தில் உள்ள எந்தவொரு பள்ளியிலும் சுதந்திரமாகத் தம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியும். அரசியல்வாதிகளும்கூட இஸ்லாமிய அழைப்பியல் மேடையில் பங்குகொள்கிற சூழல் இங்கு நிலவுகிறது. இத்ததகைய ஓர் ஆரோக்கியமான சூழலைத் தோற்றுவிப்பதற்குப் பின்புலமாக ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையும் பெரும்பங்கைச் செலுத்தி வருகிறது. ஜமாஅத்தின் இப்பங்களிப்பின் ஒரு பகுதியைப் புத்தளம் மக்களுக்குத் தம் அறிவாலும் பேச்சாலும் எழுத்தாலும் வழங்கி வருகிறார் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள்.

கடந்த பல ஆண்டுகளாய் அவர் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடத்திவரும் ஹதீஸ் வகுப்பும் அவருடய ஏனைய நிகழ்ச்சிகளும் புத்தளம் மக்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஹதீஸ்களின் பெயரால் கருத்து மயக்கம் ஏற்படுத்தப்படும் சமயங்களில் சொற்பொழிவுகள் வாயிலாகவும் ‘அல்ஹஸனாத்’மாத இதழ் மூலமாகவும் அவர் வழங்கும் தெளிவுரைகள் அவருடைய ஆழமான ஹதீஸ் துறை ஈடுபாட்டுக்குச் சிறந்த சான்றாகும்.

‘அல்ஹஸனாத்’ இதழில் இவர் தொடர்ந்து எழுதிவந்த நபிமொழி விளக்கம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பகுதியாகும். அந்த விளக்கவுரைகள் தனி நூலுருவில் வருவது தமிழ்பேசும் மக்களுக்குக் கிடைத்த ஓர் அருளாகும்.

இந்நூலின் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு என்னவெனில், நபிமொழிகளைத் தற்காலச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் வகையில் ஒப்பாய்வு செய்து, தெளிவாக எடுத்துரைப்பதுதான். அந்த வகையில் இந்த நூல் தமிழ் பேசும் மக்களிடையே மகத்தானதொரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அரபிக் கல்லூரிகள்,மதரசாக்கள், நூலகங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவர் இல்லத்திலும் இந்த மணிச்சொற்கள்  மணம் வீச வேண்டும்; நம் வாழ்வின் ஒவ்வொரு துறையும் அந்த நறுமணத்தால் கமழ வேண்டும் என்பதே நமது வேணவா.

எண்ணங்கள் ஈடேற இறைவனின் திருவருள் என்றென்றும் துணை நிற்கட்டும்!

வெளியீடு:

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்

138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை – 600 012.

Ph: +91 44 2662 4401, +91 44 4332 6446  Fax: +91 44 2662 0682

Email: iftchennai12@gmail.com  Website: www.ift-chennai.org

Price: Rs. 90/



Thanks & Regards,
K.Jalaludeen
Joint Secretary

ISLAMIC FOUNDATION TRUST
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI –  600 012
INDIA

TEL: +91-44-2662 4401/ 4332 6446
FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org

Read Samarasam (Tamil Fortnightly) at www.samarasam.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *