குழந்தைகளுக்கு…!

இலக்கியம் கவிதைகள் (All)
நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும்
இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்
தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்
தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும்
சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும்
கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும்
காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும்

வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும்
வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும்
மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும்
மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் வேண்டும்

இனிய சொல்லைமட்டும் நா இயம்பிடவேண்டும்
இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட வேண்டும்
கனிவுகொண்ட நெஞ்சமொடு இருந்திடவேண்டும்
கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல் வேண்டும்

தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்திடல் வேண்டும்
தாய்நாட்டின் சிறப்பதனை போற்றிட வேண்டும்
அறிவுதந்த ஆசானையே வணங்கிடல் வேண்டும்
அன்பினாலே உலகம் தன்னை ஆளவும் வேண்டும்

நாடு நமது நாடு என்ற எண்ணம் வேண்டும்
நன்மையான செயல்கள் மட்டும் செய்திடல் வேண்டும்
ஒற்றுமைப்பயிரினையே வளர்த்திட வேண்டும்
ஒப்புயர்வற்றவர்களைச் சார்ந்திடவேண்டும்

நன்னெறிக்கு ஒளிகொடுக்கும் வள்ளுவர் வாக்கு- உயர்
ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
உணர்ந்து நடந்தால் உண்டு பல நன்மை நமக்கு!

குழந்தைகளுக்கு…!(நவம்பர்14 குழந்தைகள் தினம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *