ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

இலக்கியம் கவிதைகள் (All)

கவியரசர் கவிதை…..

              

அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984

ஏற்றுங்கள்போற்றுங்கள்!

திங்களோர்    முறைதான்   பூக்கும்

சித்திர   வடிவம்   காட்டும்

செங்கழு    நீர்ப்பூப்    போல

தேயமோர்    திருநாள்   காண(த்)

தங்களை     ஈந்தார்;    அந்தத்

தலைவரை    எண்ணும்    நாளே

மங்கலத்    திருநாள்;    இன்று

வணங்குவோம்  அவரை  வாழ்த்த.

 

வெடித்தது    கருவி;    ஆங்கே

வீழ்ந்தது   குருதி;    மண்ணில்

துடித்தது      ஆவி;    ஆயின்

தொட்டகை     விட்டா    ரில்லை

பிடித்ததோர்     கொடியை    மார்பில்

பிணைத்தவர்    மறைந்தார்  அந்த

படித்தளத்    தின்மேல்    தானே

பறக்கின்ற    கொடியைக்     கண்டோம்!

 

ஏற்றுங்கள்     கொடியை    வானில்;

ஏற்றிடும்    போதே       நெஞ்சில்

போற்றுங்கள்    காந்தி     என்னும்

புண்ணிய    மூர்த்தி     தன்னை;

மாற்றுங்கள்     சமுதாயத்தை

மாபெரும்     பரத     நாட்டில்

ஆற்றுங்கள்    சிறந்த   சேவை;

அன்னைக்கு    மகன்தான்   காவல்!

 

இந்தியா     பெற்ற     வாழ்வு

எவரெவர்     கைக்கோ     சென்று

சந்தியில்      நின்றார்     மக்கள்

தாயகம்    நினைவா   ரில்லை

இந்திரா     என்னும்    சக்தி

எழுந்தது    முதலே   வாழ்வில்

இந்தியா      உயர்ந்த     தென்று

எல்லோரும்    பண்பா    டுங்கள்!

                                                     

-கவியரசு கண்ணதாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *