26.10.2012 முதல் 28.10.2012 வரை
முன்பொரு நாள் 1992ல் பம்மலில் – இலக்கியப் பட்டறையிலிருந்து நண்பர் பூங்கணியன் அலுவல் நிமித்தமாய் மஸ்கட் செல்கிறார் என்பதை முன்னிட்டு நடைபெற்ற வழியனுப்புவிழாவில் ஓவியக் கவிஞர் ஷேக் அவர்கள் பேசும்போது – “ஒரு பேனா பறந்து போவதைப் போல் உணர்கிறேன்” என்றார். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த எனக்கு அந்த உவமை மிகவும் பிடித்திருந்தது! எந்த அளவு தெரியுமா? அந்தப் பேனா நானாக இருக்கக் கூடாதா என்று எண்ணுமளவிற்கு!! அது கனவானது அன்று! ஆனால் நனவானது இன்று!!
வருடங்கள் உருண்டோட, வாழ்க்கைத் தடங்கள் மாற நான் வந்து விழுந்த இடம் அமீரகம்! தமிழின்பால் கொண்ட வற்றாதக் காதலால், வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் ஆலோசகராகவும், தமிழ்த்தேர் மாத இதழின் ஆசிரியராகவும் பொறுப்பேற்று ஆண்டுகள் ஆறினைக் கடக்க.. தோழர்களின் துணையோடு மாதந்தோறும் கவியரங்கங்கள்.. சிறப்பு இதழ்கள் வெளியீடு என இலக்கியப் பணி நடந்தேறிவருகிறது!
சென்னையிலே 1991முதல் துடிப்போடு செயல்படும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனராய், பொதுச் செயலாளராய் பணியாற்றி ஆண்டுதோறும் கவியரசு விழாக்கள், கண்ணதாசன் விருதுகள் என்பதோடு நில்லாமல் 1994ல் கவிஞரின் முழுவுருவ வெண்கலச்சிலை நிறுவியது மற்றும் 2004ல் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை உருவாக்கம் என்பனவற்றில் மூலகாரணமாய், முழு உழைப்பை ஈந்திட்ட வரலாறு நல்லோர் நெஞ்சங்களில் இன்றும் பதிவாகியிருக்கிறது. 21 ஆண்டுகளாய் எழுதப்பட்டுவரும் இனிய வரலாறு இன்றும் தொடர்கிறது!
20.01.2012 அன்று மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கியச் செயலாளர் திரு.பஷீர் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ஜானகிராமன் மற்றும் ஜமீல் ஆகியோரின் ஒத்துழைப்பில் கவியரசு கண்ணதாசன் பாடல்களில் விஞ்சியிருப்பது காதலா? தத்துவமா? என்கிற தலைப்பில் நடைபெற்ற சிறப்புச் சொல்லரங்கத்தின் நடுவராய் பொறுப்பேற்றேன். பேச்சாற்றல் மிக்க சங்க உறுப்பினர்கள் 18 பேர் இடம்பெற்ற மாபெரும் சொல்லரங்கை மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களோடு நிறைவு செய்தோம்.
அன்றுதொட்டு அன்பைப் பொழியும் நண்பர்களைப் பெற்றதனை தமிழ்த்தேர் ஏடுகள் சாட்சி சொல்ல.. மஸ்கட் திரு.பஷீர், திருமதி.விஜி மகாலிங்கம், திருமதி.ஸ்வர்ணகுமாரி சபரி ஆகியோரின் கவிதைகள் தமிழ்த்தேரை அழகூட்டுவதில் பங்காற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை இன்னும் விரிவு செய்யவும், கவியரசு புகழ்பாடும் பணியில் நண்பர்களை இன்னும் பெறவும் வேண்டுமென்ற நோக்கத்தில் பக்ரீத் விடுமுறையில் மஸ்கட் பயணத்தைத் திட்டமிட்டேன். ஒரு பயணக் கட்டுரை எழுதிடும் அளவிற்கு நிகழ்வுகள் கூடிவந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!
26.10.2012 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி அளவில் துபாயிலிருந்து மஸ்கட் நோக்கிப் புறப்பட்ட மகிழ்வுந்தில் பயணம் தொடங்கினேன்! வாகனம் புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களில் சென்று கொண்டிருந்த ‘ஹட்டா பாதையில்’ நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் எல்லா வாகனங்களும் அப்படி அப்படியே நிறுத்தப்பட்டிருக்க.. என்ன நடக்கிறது என்பதை அறியாமல் கண்கள் அங்குமிங்கும் மோத ஒரு கணம் திகைத்துப் போனேன்.. பிறகுதான் அன்றைய ஈத் பெருநாளையொட்டி அருகிலிருந்த தர்காவில் நடைபெற்ற ஈத் முசுல்லா எனப்படும் பெரும்தொழுகையினை முடித்து மக்கள் கூட்டம் தத்தம் வாகனங்கள் நோக்கி வந்துகொண்ருந்த காட்சியைக் காண முடிந்தது! 455 கி.மீட்டர் தொலைதூரப் பயணத்தில் அமீரகம் மற்றும் ஓமன் நாட்டுத் தூதரகங்களின் அலுலகங்களில் கடவுச்சீட்டு தணிக்கை போன்ற நடைமுறைகள் முடித்துக் கொண்டு மஸ்கட் நோக்கிய சாலையில் எமது வாகனத்தின் வேகம் கூடியது! சரியாக பகல் 1.00 மணி அளவில் மஸ்கட்டின் நடுப்பகுதியான ருவி என்னும் இடத்திற்கு வாகனம் எங்களைக் கொண்டு சேர்த்தது.
முன்பதிவு செய்திருந்த ருவி ஹோட்டலில் நுழைந்து ஐந்தாம் தளத்திலிருந்த அறைக்குச் சென்றேன். மதிய உணவிற்காக அதே ஹோட்டலில் உள்ள உணவகத்தில் பசியாறினேன். மீண்டும் அறைக்கு வந்து சந்திக்க வேண்டியவர்களுடன் உரையாடி, நாள் மற்றும் நேரத்தைக் குறித்துக் கொண்டேன். மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ஜானகிராமன் அவர்கள் நேரில் வந்து சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் உரையாடினார். மறுநாள் காலை அலுவலக நிமித்தமாய் ஐதராபாத் செல்ல வேண்டியிருப்பதால் செயலாளர் திரு.பஷீர் அவர்கள் எனது சந்திப்பிற்கான ஆயத்தம் செய்கிறார் என்று தெரிவித்து விடைபெற்றார். அவரின் பண்பை எண்ணி மகிழ்ந்ததோடு.. இன்முகம் காட்டி, நலம் விசாரித்து. தமிழை நேசிப்பவர்களையும் வரவேற்பதும், போற்றிப் பாராட்டுவதும், விருந்தளித்து மகிழ்வதும் மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் மரபு என்பதை நிலைநிறுத்திய தலைவரை வணங்கி மகிழ்கிறேன்!
அதன் பிறகு அன்றைய நாளில் வேறேதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த நிகழ்வுமின்றி நேரம் கடந்தபோது நெஞ்சம் கனத்தது! காரணம்.. துபாயை விட மஸ்கட்டில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை இருமடங்கைத் தாண்ட.. தொலைதூரப் பயணங்களில் நண்பர்கள் சிலர் சென்றிருக்க.. எனது பயணம் சரிதானா என்கிற கேள்வி எழுந்தது! எனினும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிஞரின் ஆசிகள் நிறைந்திருப்பதால் இந்தப் பயணம் வெற்றிப் பயணமாக அமையும் என்கிற நம்பிக்கையோடு தொடர்ந்தேன்!
கிட்டிய அந்த நாள் இரவை வீணாக்க விழைவின்றி – தற்போது நான் எழுதிவரும் புதிய நூலான பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்னும் நூலிற்காக சில பகுதிகளை எழுதி முடித்தேன். அடுத்தடுத்த சந்திப்புகள் மின்சார வேகத்தில் சுற்றிச்சுழன்றன! பரபரப்பும் பற்றிக் கொண்டன!!
ஆம். 27.10.2012 காலை 8.30 முதல் 9.30 மணி வரை சந்திப்போம் என்று முன்னரே தெரிவித்திருந்த மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவி திருமதி.சித்ரா நாராயணன் அவர்கள் அழைப்புவிடுக்க.. அவரிடமிருந்து வாகனம் வந்து என்னை அவர்களின் அலுவலகமான Middle east nursery *DMS-educare institution பள்ளிக்கு அழைத்துச் சென்றது. வாசலில் நின்று அன்பொழுக வரவேற்றார். Pre KG, LKG, UKG ஆகிய மூன்று வகுப்புகளே கொண்ட இந்தப்பள்ளி கடந்த இருபது ஆண்டுகளாய் சேவை புரிந்து வருவதை அறிந்தேன். சுமார் 500 குழந்தைகள் பயிலும் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற கண்காட்சியில் பிஞ்சுக்குழந்தைகளின் கைவண்ணத்தில் பூத்துக்குலுங்கிய வண்ணப் பதிவுகள், பதாகைகள், படங்கள் நெஞ்சைப் பறித்தன!! பிள்ளைகளுக்கு பிஞ்சுவயதிலேயே VALUES கற்பிக்கப்படுவதாகவும் அடித்தளம் நன்கு அமைவதால் பள்ளி, கல்லூரி மற்றும் வாழ்க்கையில் அவர்கள் எளிதில் முன்னுக்கு வருகிறார்கள் என்பதும் அறிந்தபோது.. உயரிய சேவையினை வேள்வியாக ஆற்றிவரும் திருமதி.சித்ரா நாராயணன் அவர்களை வியப்புடன் நோக்கினேன்.
தொடர்ந்து எங்களின் உரையாடல்.. தமிழ், தமிழ்த்தேர், கம்பராமாயணம், கண்ணதாசன், வாலி என்று விரிந்திருக்க.. இதிலே எம்.ஜி.ஆர் பற்றி உள்ளம்திறந்து எடுத்துரைத்த வார்த்தைகளைக் கேட்டு உள்ளம்சிலிர்த்த திருமதி.சித்ரா நாராயணன் அவர்கள் உடனே தொலைபேசியில் திருமதி.ஹேமா முரளி அவர்களை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் வந்திருக்கிறார் என்று என்னைப் பற்றி அறிமுகம் தந்தார். மேலும் புரட்சித்தலைவருக்கு சிறுநீரகம் தானம் செய்த எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் திருமதி லீலாவதியின் மகள் ஹேமா என்பது பிறகே தெரிய வந்தது! அதுவும் திருமதி.லீலாவதி அவர்களும் தற்போது மஸ்கட்டில் இருப்பது அறிந்து அவர்களைக் காண என் விழைவினைத் தெரிவித்தேன்! மறுநாள் காலை 11.30 மணிக்கு சந்திப்போம் என்னும் அவர்தம் ஒப்புதலோடு தங்குமிடம் திரும்பினேன்!
சுமார் 1.00 மணியளவில் மஸ்கட் தமிழ்ச்சங்கச் செயலாளர் திரு.பஷீர் அவர்கள் என்னை அழைத்துச் செல்ல குடும்பசகிதமாக வந்திருந்தார். சரியாக 1.15 மணிக்கு மஸ்கட் உட்லண்ட்ஸில் முன்பதிவு செய்திருந்த பிரத்யேக அறையில் எங்களின் சங்கமம் தொடங்கியது. கவிக்கோ அப்துல் ரகுமான், இறையன்பு ஆகியோர் முன்னுரைகளோடு அச்சேற்றம் பெற்றுக் கொண்டிருக்கும் தனது கவிதை நூல் பற்றியும் அது தொடர்பாக விழா நாகர்கோவிலில் வருகிற 15.11.2012 அன்று நடைபெறவிருப்பதையும் எடுத்துரைத்தார். இதுதவிர, வானலை வளர்தமிழ் – தமிழ்த்தேர் நிகழ்ச்சிகள் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை இணைக்கும் பாலமாக.. ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற தனது எண்ணத்தை தெரிவித்த திரு.பஷீர் அவர்கள் – வானலை வளர்தமிழ் அமைப்புடன் மஸ்கட் தமிழ்ச்சங்கம் இணைந்து இதற்காக தொடக்கம் செய்வோம் என்று தெரிவித்தார். இதன் வாயிலாக நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், படைப்பாளிகளின் புத்தக வெளியீடுகள், பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடு செய்யலாம் என்றார். வானலை வளர்தமிழ் நிர்வாகிகளுடன் இதுபற்றி கலந்தாலோசித்து விடை தருகிறேன் என்றேன்!
மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள் திரு.ஜமீல், திரு.ராஜசேகரன், திரு.சுரேஷ் மற்றும் திரு.பொன்னம்பலம் ஆகியோரும் தமது குடும்பத்தினருடன் வருகை தந்தனர். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப விழா போலவே அமைந்திருக்க.. கலகலப்பாய் அனைவருடனும் கருத்துப்பரிமாற்றம், கண்ணதாசன் பாடல்கள் பற்றிய செய்திகள் என சுமார் 2 மணி நேரம் மதிய உணவோடு நடைபெற்றது. மேலும் அன்றைய மாலை 8.30 மணி அளவில் திரு.ஜமீல் அவர்களது இல்லத்தில் நடைபெறவுள்ள மற்றுமொரு சந்திப்பு நிகழ்ச்சியில் மானாட மயிலாட புகழ் திரு.மனோ வருகையையொட்டி அந்நிகழ்விலும் என்னையும் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். கிட்டிய விடுமுறையில் தமது தொலைதூரப் பயணங்களை எல்லாம் சற்று ஒத்திவைத்து என் வருகைக்கு முக்கியத்துவம் தந்திட்ட நண்பர்களை என்ன சொல்லி நன்றி பகர்வது என்றறியவில்லை!
இதையடுத்து மாலை சுமார் 6.00 மணிக்கு அலுவலக நண்பராய் அறிமுகமாகி சந்தோஷம் என்கிற வார்த்தையை எவரைச் சந்திக்கும்போதும் பரிமாறி அன்பிற்கு இலக்கணம் வகுக்கும் திரு.பாஸ்கோ அவர்கள் வந்திருந்து என்னை அவரது வாகனத்தில் அழைத்து நான் விரும்பிய அல்-கொயர் என்னுமிடத்தில் திருமதி விஜி மகாலிங்கம் அவர்கள் இல்லத்தில் விடுத்துச் சென்றார். முதன் முதலான சந்திப்பு என்றாலும் முகமலர்ந்து பலநாட்கள் பழகிய பாசத்துடன் பகிர்வுகள்.. ஆவலாய் என் வருகையை நோக்கி காத்திருந்த இவர்களும் தங்களின் விடுமுறை பயணத்தை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்திருந்தினர். 20.01.2012ல் சொல்லரங்கின் பார்வையாளராகவும் மஸ்கட் தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் அறிமுகமான தம்பதியருடன் ஒன்றரை மணி நேர உரையாடல்கள்! தத்துவார்த்த விஷயங்களிலும் யோகா போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்ட தம்பதிகள் இருவரும் ஒருசேரக் காட்டிய பரிவு, விருந்து உபசரிப்பு – பண்பட்ட மனிதர்களாய் இவர்களை பகுத்துக்காட்டியது! உரையாட நேரம் மட்டும் குறைவாக இருந்தது என்கிற குறையோடு விடைபெற வேண்டியிருந்தது!
அடுத்து மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஜமீல் இல்லத்தில் ‘மனோவுடன் ஒரு சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்கச் சென்றேன். இதிலும் மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டதுடன், ஆளுக்கு ஒரு உணவினைத் தயாரித்து கொண்டுவந்திருந்தனர். இந்த ஒற்றுமை இவர்களின் வெற்றியைப் பறைசாற்றியது. சந்திப்புகள்.. சந்தோஷத்தை அள்ளித்தருகின்றன என்பதை அனைவரும் உளமாற ஒப்புக்கொள்ள ‘மனிதத் தேடல்’ என்னும் தான் எழுதிய நூலினையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தார் திரு.மனோ. வளர்ந்துவரும் கலைஞரான திரு.மனோவின் பகிர்வுகள் அவருக்குள் உள்ள திறமைகளை அறியச் செய்தன. கடந்துவந்த பாதையில் கிட்டிய அனுபவங்களே தான் பெற்ற பாடங்கள் என்றும் அவற்றிலிருந்து வெற்றிக்கான இலக்கை அடையாளம் காண முடிந்தது என்றும் குறிப்பிட்ட அவர்.. தனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் மனிதர் என்கிற இலக்கணத்தில் ரஜினியைத் தான் காண்பதாகவும், அதுபோல பிறவிக்கலைஞனாய் திரு.கமலஹாசன் அவர்களைப் பார்ப்பதாகவும் அவர்பற்றிய பல்வேறு தகவல்களைப் பரிமாறி பலகுரல்களிலும் விருந்து பரிமாறி இரவுநேர சந்திப்பை இனிதாக்கினார். அருமையான விருந்துடன் அன்றைய சந்திப்பு நிறைவுக்கு வர, திரு.ராஜசேகர் அவர்கள் என்னை தங்குமிடத்திற்கு திரும்ப உதவினார்.
மறுநாள் காலை 9.00 மணிக்கு மீண்டும் நண்பர் திரு.பாஸ்கோ அவர்கள் வந்திருந்து எங்கே செல்ல வேண்டும் சொல்லுங்கள்.. நான் உங்களுடன்தான் என்றார். மத்ராவிலுள்ள சிவன் கோவிலுக்கும், டார்சய்த்திலிலுள்ள கிருஷ்ணர் கோவிலுக்கும் செல்ல விரும்பினேன். அவ்வண்ணமே அந்த இரண்டு இடங்களையும் ஒரு மணி நேரத்திற்குள் முடித்து சரவண பவன் உணவகத்தில் காலை சிற்றுண்டி அருந்தினோம். பின்னர் இருவரும் 2008ல் பணியாற்றிய மஸ்கட் அலுவலக இடங்களை பார்வையிட்டு திரும்பினோம்.
மதியம் 2.00 மணிக்கு துபாய் திரும்ப வேண்டியிருந்ததால்.. கடைசி நிகழ்வாக.. சந்திப்பாக திருமதி. சித்ரா நாராயணன் அவர்களின் பள்ளிக்கு சுமார் 11.30 மணிக்கு சென்றோம். நாங்கள் சென்ற சில நிமிடங்களில் திருமதி.லீலாவதி, திரு.முரளி மற்றும் திருமதி்ஹேமா ஆகியோர் வந்து சேர்ந்தனர். இலட்சோப லட்சம் ஏழை மக்களின் இதயநாயகன்.. வாழ்க்கை முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த சரித்திரம் – எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரம் – பொன்மனச் செம்மலுக்கு தன் உடல் உறுப்பை வழங்கிய பெருமாட்டியை லட்சோப லட்சம் ரசிகப் பெருமக்களில் ஒருவனாய்.. நன்றிப் பெருக்கோடு அவர்தம் காலடிதொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன். நான் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் என்னும் நூலையும் வாழும் தமிழே வாலி என்கிற நூலையும் அவர்களுக்கு அளித்து இந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள் என்று குறிப்பிட்டுத் தந்தேன். தொடர்ந்து கவியரசு பாடல்கள் பற்றிய பல செய்திகள், எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய தகவல்களை – திருமதி. சித்ரா நாராயணன் திருமதி.லீலாவதி, திரு.முரளி மற்றும் திருமதி். ஹேமா ஆகியோருடன் பரிமாறிட மொத்தத்தில் உணர்வு பூர்வமான ஒரு சந்திப்பானது. இதற்கெல்லாம் வழிவகுத்துத் தந்த அன்புநெஞ்சம் திருமதி. சித்ரா நாராயணன் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்தேன்.
விரையில் துபாயில் எம்.ஜி.ஆருக்காக சிறப்புக் கவியரங்கமும் சிறப்பு மலர் வெளியீடும் அமைக்க உள்ளேன் என்பதை அவர்களிடம் தெரிவித்ததுடன்.. அதில் இடம்பெற திரு.முரளி அவர்களிடம் உள்ள அரிய புகைப்படங்களைத் தந்து உதவுமாறும் கேட்டுக்கொண்டேன். அவ்விழாவில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தேன்.
அடுத்து மதிய உணவிற்காக மீண்டும் மஸ்கட் உட்லேண்டஸிற்கு முதல் முறையாக எம்.ஜி,ஆர் அவர்களின் உறவினர்களுடன் உணவருந்தியது மறக்க முடியாததாகும். மஸ்கட் பயணத்தில் மக்கள் திலகம் தொடர்பான புதிய உறவுகள் கிடைத்ததென்று புதிய பலத்தோடு விடைபெற்றேன். பேருந்து நிறுத்தம் வரை வந்திருந்து வாகனம் புறப்படும் விவரங்களை உறுதி செய்த திரு.முரளி அவர்களின் அன்பில் மூழ்கிப்போனேன்.
பயணம் முடித்து பேருந்தில் திரும்பும்போது முன்னர் சந்தித்த திரு.எஸ்.கே.ராவ் அவர்களின் தொலைபேசி எண் கிட்ட.. தொடர்புகொண்டபோது அவரின் அடிமனம் பேசிய வரிகள் இவை. “என்ன சார்.. இது என்ன டெலிபதியா? இன்று காலைதான் உங்களைப் பற்றியும் உங்கள் புத்தகத்தைப் பற்றியும் என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராவண்ணம் இன்று என்னைத் தொடர்பு கொள்கிறீர்கள்” என்றார். தன்னை சந்திக்காமல் திரும்பியது வருத்தம் தருகிறது .. அடுத்த முறை தவறாமல் சந்திப்போம் – உரையாடுவோம் என்று அழைப்புவிடுத்தார். அவரது உள்ள நெகிழ்ச்சியில் நானும் பங்கேற்றவனாக விடைபெற்றபோது கவியரசருக்கு மானசீக நன்றிகளை உரித்தாக்கினேன். முன்னிரவு 10.00 மணி அளவில் துபாய் திரும்பினேன்.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் பயணத்தின் முழுமையிலும் இறைவன் என்னுடன் இருந்தான் என்பதே உண்மை!!