பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்!
சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்!
முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்!
தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!!
பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி!
பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி!
தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு!
மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!!
தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப் பாட்டுவரும்!
நின்னழகைப் புகழ்ந்தபடி நீண்டபல வரிகள் வரும்!
உன்முகத்தைப் பார்த்தபின்னே உனக்கு இணை ஏதுமில்லை – என
பண்ணசைய கண்ணுறங்கும் பால்நிலவே தாலேலோ!!
சொல்லாலே சுகம்தருவாள் அம்மாவின் அமுதமது
சொக்கத்தான் வைத்திடுவாள் தன்தோளில் உனைப்போட்டு!
மெல்லத்தான் கண்திறந்து கொஞ்சம்நீ சிரிக்கையிலே
உள்ளம்தான் கொள்ளைபோகும் உண்மையை என்னவென்பேன்!
பிஞ்சுமொழி கொஞ்சவரும் பிதாவும் இங்கு உண்டு
நெஞ்சினிலே சாய்த்தபடி கொஞ்சியே மகிழ்வாரே!
தாய்பாடும் தாலாட்டில் தந்தையும் இணைந்திருக்க
தொட்டிலதை ஆட்டுவிக்க வந்தவனே தாலேலோ!!
காவிரிமைந்தன்