காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

இலக்கியம் கட்டுரைகள்
கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு.

”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த
என்னிற்சிறந்த மறவர்களும்….”

என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ் தன்னிலும் சிறந்தது,2.அதை வளர்க்க வேண்டும்,3.பாவேந்தர் தமிழ் வளர்த்தார்,4.அவரை விடவும் தமிழைப் பெரிதும் வளர்த்தவர்கள் உள்ளார்கள்,5.அவர்களை மதிக்கும் பாங்கு பாவேந்தருக்கு இருந்தது,6.இந்தப் பண்பும்,தமிழ் வளர்க்கும் பாங்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும்….எனப் பல செய்திகள் உணர்த்தப் படுகின்றன.
தமிழுக்கு யார் எந்த அளவுக்குத் தொண்டு செய்திருந்தாலும் அதற்குப் பதிவு வேண்டும்;தமிழ்த் தொண்டு செய்வோருக்கு உதவ வேண்டும்;மனம் திறந்த பாராட்டு வேண்டும்.
கடலைப் பார்த்து வியக்கும் முன்னர் அது துளிகளால் ஆனது என்பதை எத்தனைபேர் எண்ணிப் பார்க்கிறோம்!
தினையளவு நன்மை செய்திருந்தாலும்,அது காலத்தினாற் செய்யப் பட்டிருப்பின் அதைப் பனையளவாகக் கொள்வர் அதன் பயன் தெரிந்தவர் என்பதற்குத் தமிழ்த் தாத்தா உ.வே.சா.சிறந்த எடுத்துக்காட்டு. அவர் எழுதிய “என் சரித்திரம்” படித்துப் பாருங்கள்;அவர் முதன் முதலாக ஓலைச் சுவடியில் இருந்து அச்சுக்கு ஏற்றிய அத்தனை  நூல்களையும் படித்துப் பாருங்கள்; அவருடைய நன்றிக்குரிய அனைவரின் பெயர்களையும் உரிய முறையில் குறித்திருப்பார்-அல்ல-பொறித்திருப்பார்!
ஏம்பல் வரலாற்றில் எனக்குத் தெரிந்தவரை மலேசியாவில் புகழ் பெற்று விளங்கிய (ஏம்பல்) மர்ஹூம் கவிஞர் முகம்மது யூசூஃப்,முந்தைய தலைமுறையைச் சேர்ந்த (ஏம்பல்)திருக்குறள் இப்றாஹீம், நோட்டக்கார வீட்டு ஜமால் முகம்முது குடும்பத்தினர் எனச் சிலரை நல்ல தமிழ்த் தொண்டர்களாக நான் அறிவேன்.அவ்வாறே காலம் சென்ற திரு.இலக்குவன்,அவருடைய தம்பி திருக்குறள் கந்தசாமிச் செட்டியார் ஆகியோரும் நற்றமிழ்த் தொண்டர்களாவர்.இவர்களில் இப்றஹீம் அவர்களைத் தவிர அனைவரும் எனக்கு மிக்க நெருக்கமானவர்க்ளே.ஏம்பல் என்ற சொல்லையும், அதன் இலக்கியப் பயன்பாட்டையும், ஓரளவு அதன் வரலாற்றையும் அறிந்த எனக்கு இன்று ஓர் இன்ப அதிர்ச்சி! சிறியேன் மட்டுமல்ல-எங்கள் ஊரார் யாருமே அறிந்திராத-ஆனால் ஏம்பலைச் சேர்ந்த ஒரு தமிழ்த்தொண்டரைப் பற்றி உ.வே.சா. அவர்களே குறித்திருப்பதை அறிந்துதான் அந்த இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
புற நானூறு முதற் பதிப்பில் அந்தப் பதிப்பு உருப் பெற உதவியவர்களில் ஏம்பல் பொன்னுசாமியும் ஒருவர் என்பதை அறியும் போது எப்படிப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்ளாமல் இருக்க முடியும்!தமிழுக்குத் தொண்டு செய்வோர் எப்படியெல்லாம் (118ஆண்டுகளுக்குப் பின்னரும்) வாழ்கிறார்கள்!!
இதில் உ.வே.சா எப்படி நன்றிக்குரியவரோ அவ்வாறே முனைவர் மு .இளங்கோவன் அவர்களும் எம் நன்றிக்குரியவராகிறார்;அவர்தாம் உ.வே.சா.வின் புற நானூறு ஆய்வில் இதைத் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
நல்லவேளை! இந்தப் பதிப்பு என்னிடமும் உள்ளது.அதை மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும்-முன்பு படித்த போது இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று!
 நூலின் முகப்பும் சான்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
(படம் 1 புறநானூறு முதற்பதிப்பு முதற்பக்கம்)

புறநானூறு உ.வே.சா அவர்களால் முதன்முதல் 1894 இல் பதிப்பிக்கப்பெற்றது.சீவக சிந்தாமணியை உ.வே.சா அவர்கள் பதிப்பித்தபொழுது நச்சினார்க்கினியர் உரையில் காணப்படும் மேற்கோள்கள் எந்த நூல்களில் வருகின்றன என்பதை ஆராயும்பொழுது அவருக்குப் பொருநராற்றுப்படை முதலான பத்துப்பாட்டு நூல்கள் பற்றி அறிய நேர்ந்ததைத் தம் வாழ்க்கை வரலாற்றில் (பக்கம் 599,600)குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் வேறொரு சுவடியின் ‘கொற்றுறைக் குற்றில’ என்னும் தொடரைக் கண்டு அது புறநானூற்றின் 95 ஆம் பாடல் என்று உணர்ந்தார்.அதுமுதல் புறநானூற்றுப் பாடல்களைத் தனியே தொகுக்கும் முயற்சி மேற்கொண்டார்(பக் 600-01).

புறநானூற்றைப் பதிப்பிக்கத் தொடங்கியபொழுது முன்பே சில நூல்களைப்([சிந்தாமணி,சிலம்பு) பதிப்பித்த பட்டறிவு இருந்ததால் முந்தைய நூல்களைவிடப் பன்மடங்கு புறநானூறு சிறப்பாக வெளிவரவேண்டும் என்று நினைத்தார்.தம்முடன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த துரைசாமி அவர்களிடம் இருந்த பைபிள் சிறப்புப் பதிப்பைக் கண்ணுற்றுப் பல புதுமைகளைத் தம் ஆராய்ச்சியில் புகுத்தினார். சங்கப்புலவர்களின் வரலாறு, தொடர்கள்,கருத்துகளைப் பல்வேறு அகராதிகளாக எழுதிவைத்துக்கொண்டு ஆய்வு செய்தார்.திருமானூர்க் கிருட்டிண ஐயர், ம.வீ.இராமானுசாசாரியார்,சொக்கலிங்கத் தம்பிரான்,ஏம்பல் பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் இந்தப் பணியில் துணைநின்றதை உ.வேசா அவர்கள் புறநானூற்று முன்னுரையில் நன்றியுடன் பதிவுசெய்துள்ளார்.

Inline image 1
(படம் 2 புறநானூறு முதற்பதிப்பு அருஞ்சொல் அகராதி) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *