(தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
சிவகெங்கை மாவட்டம்)
தாலாட்ட தாய்மை வேண்டும் !
தலைநிமிர நேர்மை வேண்டும் !
பாராட்ட திறமை வேண்டும்
பாட்டெழுத புலமை வேண்டும் !
நாளென்றால் கிழமை வேண்டும் !
நட்பென்றால் இனிமை வேண்டும் !
ஏர்க்காலால் பசுமை வேண்டும்
எல்லோர்க்கும் நன்மை வேண்டும் !
உண்மையே உயர்வைக் காட்டும்
உழைப்பொன்றே சிகரம் காட்டும் !
பெண்மையே பெருமை காட்டும் வீண்
பேராசை சிறுமை காட்டும் !
தன்னலம் பொய்மை காட்டும்
தரித்திரம் வறுமை காட்டும்
இன்னலில் ஒடிந்திடாமல்
இமயமாய் உயர்ந்து காட்டு !
தனிமையே கொடுமை யென்பேன் !
சந்தனம் குளிர்ச்சி என்பேன்
இனிமையாய் வாழ்க்கை காண
இல்லறம் ஏற்ற தென்பேன்!
கணவனும் மனைவியும் ஓர்
கருத்தொருமித்து வாழ்வாரானால்
இனிமையே இனிமையென்பேன் !
ஈடில்லை இதற்கு என்பேன் !