குருதியில் நனையும் காலம்

இலக்கியம் நூல் அறிமுகங்கள்
விகடன் வரவேற்பறை

 

குருதியில் நனையும் காலம்  – ஆளூர் ஷாநவாஸ்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.பக்கங்கள்: 136விலை: 100

ல்வேறு இதழ்களில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறீஷீsமீபீ சிஷீனீனீuஸீவீtஹ் ஆகவே பார்க்கப்படும் இஸ்லாமிய சமுதாயத்தின் உள்ளே நடக்கும் சிக்கல்கள் பொதுச் சமூகம் அறியாதவை. ஊடகங்களாலும் அதிகாரத்தினாலும் தீவிரவாத முகம் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் வலியைப் பேசும் நூல். இஸ்லாமியரான ஆளூர் ஷாநவாஸ் தன் சொந்த மதத்தின் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும்கூட விமர்சிக்கிறார். ஆனால், அந்த விமர்சனம் எவ்வகையிலும் அவர்களைப் புண்படுத்தாமல் அவர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பதுதான் வெற்றி. இஸ்லாமியர்களை ஊடகம் எப்படிப் பார்க்கிறது என்பது முதல், இஸ்லாமிய ஊடகங்களின் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பது வரை விமர்சனம் செய்கிறது நூல். திரைப்படங்கள் தன் பங்குக்கு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள்குறித்த தவறான சித்திரங்களை விதைப்பதை மிக விரிவாக அலசுவதோடு, இஸ்லாமியர்கள் மைய நீரோட்டத்தில் கலந்து ஊடகங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். ‘திருமாவளவனை இஸ்லாமிய சமுதாயம் எப்படி நம்புவது?’ என்ற ஷாநவாஸின் கேள்வியும் அதற்கு திருமாவளவன் எழுதிய பதில் கட்டுரையும் சுவாரஸ்யம்.

தீவிரவாதியாக மட்டுமே சித்திரிக்கப்பட்ட அப்துல் நாசர் மதானியின் அரசியல் வாழ்க்கையின் தோற்றம், வளர்ச்சி என்று அவருடைய வேறு பரிணாமங்களைக் காட்டுகிறது நூல். ஒவ்வோர் இஸ்லாமியரின் வாழ்க்கையையும் பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அந்தச் சம்பவத்துக்குப் பின்னான பொதுப் புத்தியின் குறுக்கீடுகள், அதிகாரத்தின் குறுக்கீடுகள் குறித்துக் கூறும் நூல், அறிவின் அடிப்படையில் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அயோத்தித் தீர்ப்பைக் கடுமையாகச் சாடுகிறது. நரேந்திர மோடியைப் புகழும் சீமானையும் ஆதிக்க சாதிகளுக்குத் துணைபோகும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் இந்த நூலில், இஸ்லாமியர்கள்குறித்த கட்டுரைகள் மட்டும் அல்லாமல், பரமக்குடிப் படுகொலைகள் குறித்த கடுமையான கண்டனங்களும் இருப்பது தலித்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான நல்லுறவுக்குச் சான்றாக விளங்குகிறது.

மதத்துக்கு வெளியே நின்று தன் கருத்துகளைக் கூறாமல், உள்ளேயே இருந்துகொண்டு தோழமைத் தொனியிலும், உண்மையான அக்கறையுடனும் எளிய மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் காலத்தின் அவசியத் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *