( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா , இளையான்குடி )
அலைபேசி : 99763 72229
சங்கைக்குரிய ஹாஜிகளே …!
மெய்யாகவே – ஒரு
‘சமத்துவபுரம்’ கண்டு வந்த
சரித்திரங்களே…!
படைத்த ரப்பின்
பாச முகவரிகளே …!
உங்களை வரவேற்கிறோம் !
எப்போதும் கலையாத
வானவில் வார்த்தைகளால்…
வரவேற்கிறோம் !
பாலைவனம் பார்த்து வந்த
பன்னீர் நதிகளே ..!
பாலைவனமா .. அது?
இல்லை !
ஆயிரத்தி நானூறு
ஆண்டுகளுக்கு முன்பே…
ஓரிறைத் தத்துவம்
முழங்கப்பட்ட …
சோலைவனம் அது !
சுவனத்தின்
நிழல் சீமையது !
மாநகர் மக்கா …
உலக முஸ்லீம்களின் …
‘காதல்’ தேசம் !
எப்போது காணப்போகிறோம் என்ற
ஏக்கத்தை ….
எல்லோருக்கும் ஊட்டும் நகரம் !
கஅபா….
மக்கநகரத்தின் மாண்புச் சிகரம் !
அண்ணலார் தொழுத
புண்ணியச் சோலை !
இவைகளோடு
நம் பெருமானார் வாழ்வியலின்
இரண்டாம் பாகத்தை
இனிப்பாக எழுதியது மாநகர் மதீனா !
மறக்க முடியாத
இவைகளின் அழகையெல்லாம்
கைகளால் அள்ளிவர
இயலாதென்று…
கண்களால் அள்ளி வந்த …
கண்மணிகள் … நீங்கள் !
வெள்ளுடை அணிந்த
வெண்புறாக்களே …!
இம்மைக்கும் மறுமைக்குமான
பேறினை
ஈட்டி வந்த இதயங்களே… !
உங்களால் …
இங்கே … ஓர் உதயம் !
உதயம் கண்ட …
இதயங்களாய் … நாங்கள் !
வல்ல அல்லாஹ்வின்
கிருபையினால்
உங்கள் துஆக்கள் கபூலாகுமாமே !
இந்த மண் பயனுற
துஆச் செய்யுங்கள் !
போரில்லாத உலகம் வேண்டும்
துஆச் செய்யுங்கள் !
எல்லோருக்கும்
புன்னகை குறையாத
வாழ்க்கை வேண்டும் !
துஆச் செய்யுங்கள்
வல்ல இறைவனே … போதுமானவன் !
நன்றி :
டிசம்பர் 2009 நர்கிஸ் இதழில் வெளிவந்து பெரும்பாலோரின் பாராட்டைப் பெற்றது