என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

என் ஆசை அலையில்

எழில் அண்ணல் நபிகள் !

முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

 

 

அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர்

அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே !

நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன்

நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் !

சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான்

சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை !

இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும்

இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !

 

அங்காச புரியினிலோர் அழகுமேடை – வானொலி

ஆறினிலே செந்தமிழின் கவிதைவாடை !

எங்கும் புகழ் நாட்டிநிற்கும் அண்ணல் நபிகள் – இந்த

இகமதிலே தோன்றி வந்த பிறந்த நாளே !

பொங்குதமிழ் கவிஞர் ஹாஜி மைதீசுல்தான் – தலைமைப்

பொருத்தமுடன் தென்றலோடு உ.கா வந்தார்

தங்கநிகர் கவிச்சரத்தை வார்த்துத் தந்தார் – அதைத்

தகைமையுடன் நாச்சியாவும் ஏற்றுக்கொண்டார் !

 

சின்னச்சின்ன ஆசைகளை நெஞ்சில் வைத்து – ஓர்

சிறுகவிதை படைத்துயிங்கு எடுத்து வந்தேன் !

பென்னம் பெரு கவிஞர்களின் அவையிதிலே – நான்

பெருமானைப் பேசவந்த பொருள் மறந்தேன் !

தன்னடக்கம், அவையடக்கம், இறைவணக்கம் – கூறி

தாஹாஇர சூல்நபியைத் தேடுகின்றேன் !

என்னருகே நபிவந்த கற்பனையில் – நெஞ்சில்

எழுந்துவிட்ட எண்ணங்களைப் பாடுகின்றேன் !

 

முதல்வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே – உலக

முக்கால வாழ்வுக்கெலாம் முன்னுரையே !

முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே – இறை

மூவேதம் புகழ்பாடும் அற்புதமே !

பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே – மனிதப்

பண்பொழுக்கம் அனைத்திற்கும் முழுவுருவே !

அதிபுகழுக் குரியவரே ! முஹம்மதரே – உம்மை

அன்பாலே புகழவந்தோம் ! ஏற்பீரே !

 

மறுபிறவி என்றொன்று உண்டென்றால் – நான்

மாதரசி ஆமினாராய் பிறப்பெடுப்பேன் !

நறுமலரே ! உம்மைஎந்தன் கருவில் வைத்து – உலகு

நாற்றிசையும் புகழ்பாடப் பெற்றெடுப்பேன் !

நறுமணமாய் பூப்பறித்து பாதை செய்து – உம்மை

நடக்க வைத்து ரசித்திருப்பேன் ; மகிழ்ந்திருப்பேன் !

மறுபடியும் நபிப்பட்டம் கொடுக்கும்போது – காக்கும்

மலைக்குகையாம் ஹீராவாய் உருவெடுப்பேன் !

 

சிலை வடிக்க ஷரீஅத்தும் அனுமதித்தால் – நபியே

சந்திரனைப் பிளந்து வந்து சிலையெடுப்பேன் !

மலைச்சிகரம் இமயத்தில் ஏற்றி வைப்பேன் – என்

மலர்விழிகள் மூடாமல் பார்த்திருப்பேன் !

தலைக் கவிஞன் கம்பனையே அழைத்து வந்து – கன்னித்

தமிழ்மொழியில் கவியெழுதப் பணித்திடுவேன் !

கலைஞான வாழ்வு தந்த எங்கள் நபியே – அந்தக்

கவிதைகளை மலைமுதுகில் செதுக்கிவைப்பேன் !

 

அருங்குணமே அண்ணலரே அன்பின் வடிவே –உங்கள்

அழகுகுணம் எங்களுக்கு அருளாய் வேண்டும் !

பெருங்கொடையே பொக்கிஷமே பண்பின் உருவே – உங்கள்

பண்புகுணம் எங்களுக்குக் கொடையாய் வேண்டும் !

பெருமதியே பேரழகே பாசச்சுடரே – உங்கள்

பாசகுணம் எங்களுக்கு வரமாய் வேண்டும் !

அருட்கொடையே அறிவுலகே அருமை நபியே – உங்கள்

அறிவு குணம் எங்களுக்கு வாழ்வாய் வேண்டும் !

 

விழித்திருந்தால் நினைவினிலே நீங்கள் வேண்டும் – இரு

விழி தூங்கின் கனவினிலும் நீங்கள் வேண்டும் !

வழியறியா நேரமுங்கள் ஒளியே வேண்டும் – வாழ்வின்

வழுக்கலிலே வலக்கரமாய் நீங்கள் வேண்டும் !

வழித்துணையாய் வாழ்வெல்லாம் நீங்கள் வேண்டும் – என்

வாழ்வினிலும் தாழ்வினிலும் துணையே வேண்டும் !

பழிபகைகள் சூழ்கையிலே காவல் வேண்டும் – உயிர்

பெருமூச்சு அடங்கையிலே மடியே வேண்டும் !

 

(மலேஷிய  வானொலி 6 – மவ்லிது ரசூல் கவியரங்கம் – 26 – 06 – 1999 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *