ரமளான் உரை
முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ
வணங்கிடத் தலையும் – வாழ்த்திட நாவும் தந்தவனே ! இணங்கிட மனமும், வழங்கிடக் கரமும் தந்தவனே ! வல்லவனே … அல்லாஹ் என்னும் தூய இறைவனே ! காலமெல்லாம் உன்னைப் போற்றுகிறேன்! புகழுகிறேன் ! இந்தக் கனிவான ரமளானில் உன் பெயரால் என் கன்னி உரை துவங்குகிறேன் !
அன்பார்ந்த நேயர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. புனித ரமளானின் புனிதத்தை உணர்ந்து – அதன் கண்ணியம் காத்து புண்ணியங்கள் சேர்க்கத் துடித்து நிற்கும் அருமைப் பெருமக்களே ! சகோதரர்களே ! சகோதரிகளே ! உங்கள் அனைவருக்கும் என் இதயம் குளிர்ந்த வாழ்த்துக்கள் !
அருமைப் பெருமக்களே ! …
கோடான கோடி ஜீவ இனத்திலே – குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பிலே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்து லில்லாஹ் ! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !
இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும், சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் காணுகிறோம் !
எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்று போல் அமைந்ததில்லை. செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இழந்தவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள் ! இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி – இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை சதக்கா – ஜக்காத் – தர்மம் என்று வகைப்படுத்தி – அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது. அதன் வழிவாழ நமக்கு அன்புக்கட்டளையும் பிறப்பித்திருக்கிறது புனித இஸ்லாம் !
சிக்கனத்தைச் சேமிப்பைப் புகழாத ஏடுயில்லை !
‘சிறு துளியே பெருவெள்ளம்’ என்னுமொரு முதுமொழியில்
தக்கதொரு தருணத்தில் தான்சிறிது சேர்த்து வைத்தால்
தரும்நல்ல பலனையது; பயனடைந்தோர் சொன்னதிது !
இக்கருத்தை ஏற்காத ஏடுமில்லை நாடுமில்லை !
இஸ்லாமும் சிக்கனத்தைச் சொல்லாத நாளுமில்லை !
பக்திக்குள் ஓர்முடிச்சும் பொருளியலில் ஓர்முடிச்சும்
பக்குவமாய் போட்டுவைத்த தத்துவமே நோன்புதானே ?
பேராசை தடுப்பதற்கு நோன்புவொரு கேடயமே !
பெருமாசை கொண்டலைந்தோர் பின்னடைந்தார் ! சரித்திரமே !
பாராண்ட மன்னவரும் பேராசை கொண்டதனால்
பிறந்தமண் பறிகொடுத்து புகுந்திட்டார் வேறிடமே !
சீரான வாழ்வமைத்துச் சிறப்பாகப் பேரெடுத்துச்
சரித்திரத்தில் புகழடைய மனக்கட்டு அவசியமே !
யாராரோ சொல்வதற்கும் கேட்பதற்கும் இனித்திடுமே !
எளிதாகப் பயிற்சிபெற நோன்புவொரு தத்துவமே !
உண்பதிலோர் கட்டுப்பாடு ! பருவதில் கட்டுப்பாடு !
உணர்ச்சிதனைக் கட்டிப்போட்டு வாழ்வதிலோர் கட்டுப்பாடு !
எண்ணியெண்ணிப் பார்க்கையிலே இத்தகைய கட்டுப்பாடு –
ஏற்றமிகு வாழ்வுதரும் ; என்றுமில்லை தட்டுப்பாடு !
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை கொள்வதெல்லாம்
மனக்கட்டுப் பாடின்றி மனம்போன போக்கிலன்றோ?
கண்ணியமும் கட்டுப்பாடும் எங்கிருந்து பிறக்கிறது?
காட்டுமெழில் இஸ்லாத்தின் கடமைகளில் தெரிகிறது !
முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து
முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து
அப்பழுக்கு இல்லாத மனிதரிலும் புனிதரென
ஆகிவிட்ட முஃமின்களே ! முஸ்லிம்களே ! உங்களுக்கு
இப்பொழுது இன்பத்தின் எல்லையெனப் பிறந்திருக்கும்
ஈத் பெருநாள் மலர்ந்திருக்கும் ! சொர்க்கவாசல் திறந்திருக்கும் !
செப்பியதோர் ரஹ்மத்தும் மஃபிரத்தும் சேர்ந்திருக்கும் !
சங்கைமிகு ஸலாமத்தும் பரக்கத்தும் குவிந்திருக்கும் !
‘ரய்யானின்’ சொர்க்கபதி அலங்கரித்துக் காத்திருக்கும் !
‘ராஹத்தாய்’ கஸ்தூரி வாசமங்கு கமழ்ந்திருக்கும் !
மெய்யான ‘ஹூருல்ஈன்’ சுவனமங்கை சிரித்து நிற்கும் !
மேலான இறையோனின் ‘ரிலா’- பொருத்தம் சிறந்திருக்கும் !
துய்ய மலக்(கு) ‘ரில்வானும்’ விழிகுளிர்ந்து வரவேற்கும் !
தூதர் நபி ‘ஷபாஅத்தும்’ தடையின்றித் தொடர்ந்திருக்கும் !
தெய்வீக மார்க்கத்தின் திருக்கடமை நிறைவேற்றி
திகழ்கின்ற ‘முத்தக்கீன்’ தீனவரே ! வாழ்த்துகிறேன் !
பகலெல்லாம் பசித்திருந்த உத்தமரே வாழ்த்துகிறேன் !
பண்பாடி தராவீஹைத் தொழுதவரே வாழ்த்துகிறேன் !
முகமலர தர்மங்கள் ஈந்தவரே வாழ்த்துகிறேன் !
முழுதாக குர்ஆனை முடித்தவரே வாழ்த்துகிறேன் !
இகபரமும் இறையருளைப் பெற்றிடவே வாழ்த்துகிறேன் !
இருகரமும் ஏந்திநின்று துஆச் செய்து வாழ்த்துகிறேன் !
அகங்குளிரக் கவியரங்கம் அரங்கேற்றும் வானொலியாம்
ஆறு – பல ஆற்றல்பெற அனுதினமும் வாழ்த்துகிறேன் !