வானொலியில் பேசிய நோன்பு பேச்சு : பகுதி 2
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ )
எல்லா உலகமும் ஏகமாய் ஆளும் வல்லான் ஒருவன் அல்லாஹ்வின் திருப்பெயரைப் போற்றி புகழ்கிறேன் ! அவன் திருவருளை வேண்டிப் பிரார்த்தித்து இவ்வுரையைத் துவங்குகிறேன் !
பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே !
பொறுமையின் மாதமென்றும் – புண்ணியத் திங்களென்றும் போற்றிப் புகழத்தக்க கண்ணிய மாதத்தில் – பசித்திருந்து – விழித்திருந்து – தாகம் பொறுத்து – உணர்ச்சி வெறுத்து இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் ஏங்கி நின்று ‘இபாதத்’ எனும் இறைவணக்கத்தை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருக்கும் கடமையாளர்களே ! கண்ணியவான்களே ! உங்கள் அனைவருக்கும் இறைச்சாந்தியும் இனிய ஈடேற்றமும் சுபசோபனமும் உரித்தாகட்டும்
“உலகவாழ் மனிதனின் ஒவ்வொரு செயலும் வல்ல இறைவனிடத்தில் பன்மடங்கு பொங்கிப் பெருகுகிறது ! அவன் செய்யும் ஒரே ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் 700 மடங்கு வரை அதிகரிக்கிறது. ஆனால் அதிலிருந்து புனித நோன்புக்கு மட்டும் விலக்குண்டு ! நோன்பு எனக்குரியது – அதன் கூலியை நானே (மானிடனுக்கு விரும்பிய அளவு) வழங்குவேன்” என இறைவன் கூறுகிறான்.
இந்தக் கருத்தினை – சுபச்செய்தியை நமக்குப் பெருமைக்குரிய பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.
எல்லா வணக்கங்களையும் விட நோன்பென்னும் இந்த வணக்கத்திற்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்பு? இதற்கு மட்டும் இறைவனே பிரத்தியேக நன்மையை வாரி வழங்குவதன் மர்மமென்ன என்பதை நாம் உணர வேண்டும் !
எல்லா வணக்கங்களும் இறைவனுக்குச் செலுத்தப்படுபவைகள் தான்! ஆனால் அதை செயல்படுத்தும் போது பிற மனிதனுக்கும் பகிரங்கமாகத் தெரிந்து விடுகிறது ! இறைவனைத் தொழும் போது எல்லோருக்குமே தெரிகிறது ! இறைவனுக்காக தர்மம் வழங்கும்போது வாங்கிச் செல்பவனுக்குத் தெரிகிறது ! இறைவனுக்காக ஹஜ் செல்லும் போது எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது !
ஆனால் பசி துறந்து, தாகம் மறந்து இறைவனுக்காகப் பட்டினி கிடப்பது மட்டும் மற்றவரிடம் சொன்னால் தெரிகிறது ! ஆமாம் ! இது ஒரு இரகசிய வணக்கம் ! ரகசியச் சுரங்கம் ! இந்தச் சுரங்கத்தில் விளையும் தவாபு என்னும் நன்மைகளை மனிதனால் அறிய முடியாது; அளவிட முடியாது; இதை இறைவன் மட்டுமே அறிவான் ! அளப்பான் ! கூலி கொடுப்பான் அது அவனுக்கு மட்டுமே வெளிச்சமான ரகசியம் ! ஆகவே தான் பசியின் பரிசை இறைவனே நேரடியாக அளிக்கிறான்.
‘நோன்பின் கூலி சொர்க்கம் தான்’ என்றார்கள் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்
உலக சமுதாயத்திலே வருடத்தில் ஒரு மாதம் முழுவதும் பகல் முழுவதும் உண்ணாமலும், நீர் பருகாமலும் , இன்ப உறவு கொள்ளாமலும் இறைவனுக்கு மனித உணர்வுகளைக் காணிக்கை செலுத்தும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயந்தான் என்பதில் மிகமிகப் பெருமை கொள்கிறோம் !
ஏறத்தாழ முன்னூற்று அறுபது மணி நேரம் இறைவனுக்காக இந்த ஒரு மாதத்தில் உபவாசம் இருக்கிறோம் ! இந்த உபவாச நோன்பினால் பொருளாதாரத் தேக்கத்தைப் பெறுகிறோம் ! சிக்கனத்தின் மேன்மையை உணருகிறோம் !! உலகம் முழுவதும் கணக்கிட்டுப் பார்த்தால் அடங்காத அளவுக்கு கோடான கோடி டாலர்களை உலக அரங்கில் மீதப்படுத்திக் காட்டுகின்றோம் !
இப்படிப் பொருள் தேங்கி நிற்கும் காலத்தில் அதைப் பிறருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் தர்மத்தின் சிந்தனை மனித மனங்களிலே ஊடுருவிச் செல்கிறது ! துன்பப்பட்டவனின் துயர் துடைக்கிறோம் ! தடுக்கி விழுந்தவனைத் தூக்கி நிமிர்த்துகிறோம் ! ஏழையின் கண்ணீரைத் துடைத்து இறைவனின் மனமகிழ்ச்சியைப் பெறுகிறோம் !
சம உடமைச் சமுதாயத்தை உலகில் அமைக்கிறோம். இறைவனின் படைப்பில் எளியவன் – வலியவன் என்ற பேதத்தை நீக்கப் பாடுபடுகிறோம் ! எல்லோரும் இன்புற்று இருப்பதுவே இன்பம் என்னும் இனிய கொள்கையோடு வாழத் தலைப் படுகிறோம் ! ஒரு தனி மனிதன் இன்னொரு மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது அரசாங்கத்தின் சுமையைக் கூடக் குறைத்து விடுகிறோம்
உலக மக்களின் மேன்மைக்கும் நன்மைக்கும் தர்ம உணர்வு கொள்ளும் பாதைக்கு வழி வகுத்ததும் அதற்கு வித்திட்டதும் ரமளான் நோன்பு என்பது உண்மை ! உலக சமுதாயம் ஏற்றம் பெறுவதற்கு இனிய பாதை தந்தது ரமளான் என்பதும் உண்மையே !
சீர்திருத்தச் சமுதாயத்தைப் படைக்கப் போகிறோம் பொது உடமை சமுதாயத்தை அமைக்கப் போகிறோம் என்று உலக மக்கள் மன்றத்தில் அரைகூவல் விட்டவர்கள் எல்லாம் அதைச் சாதிக்க முடியாமல் தோற்றுப் போய் விட்டதை சரித்திரம் அறியும் !
அதே நேரம் அமைதியாக அடக்கமாக எவ்வித விளம்பரமும் இன்றி – வெளிச்சம் போட்டுக் காட்டாமல் – கூக்குரல் இடாமல் உண்ணா நோன்பின் வழி பற்பல சீர்திருத்தங்களையும் சிறந்த சமுதாய வாழ்வினையும் அரங்கேற்றி – நடைமுறைப்படுத்தி வெற்றி கொண்ட சமுதாயத்தை உலகில் கண்டது இஸ்லாம் ஒன்றுதான் ! இதை உலகம் அறியும் ! உலகோர் அறிவர் !
கொள்கையின் வேட்கையால் பிறந்த பூமியாம் மக்கத் திருநகரைத் துறந்து மதீனத்துல் பூமியிலே முஹாஜிரீன் தோழர்கள் குடி புகுந்தார்கள் ! உழைக்க வழி இல்லை ! உண்ண உணவில்லை ! இருக்க இடமில்லை ! உடுத்த உடையில்லை !
இந்தக் கொள்கை வீரர்களின் அவல நிலையறிந்த அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து அகதிகளாக மதினாவுக்கு வந்திருக்கும் முஹாஜிர் சகோதரர்களை மதினாவில் வாழும் அன்சார் சகோதரர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்பு அறிக்கை செய்தார்கள். இதைக் கேள்வியுற்ற மதீனத்துப் பெருமக்கள் மக்காவில் இருந்து வந்திருக்கும் அகதிச் சகோதரர்களை உடன்பிறந்த சகோதரர்களாக ஏற்றுக் கொண்டார்கள் ! தனக்கு உரிமையான வீடுகளில் ஒன்றை அகதிச் சகோதரர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள்! தன்னிடம் இருந்த ஈச்சம் வயல்களில் அவர்களுக்கும் பங்கு வைத்துக் கொடுத்தார்கள் ! சொத்து சுகம் இல்லாத ஏழை எளியவர்கள் கூட – தான் உழைத்து வந்த கூலித் தொகையில் உணவு தயாரித்து ஒருவர் மட்டுமே உண்ணும் அளவுள்ள உணவை இன்னொரு தோழருக்கும் பங்கிட்டுக் கொடுத்து இருவரும் உண்டு மகிழ்ந்தார்கள்.
இந்த தர்மத்தின் பாட்டையிலே தான் சம உரிமைச் சமுதாயத்தைக் கண்டார்கள். சமுதாயத்தின் சமநிலை தொழுகையிலும் தர்மத்திலும் பின்னிப் பிணைந்து கிடப்பதை உள்ளத்தால் அறிந்தார்கள் ! உலகுக்கும் அறிவித்தார்கள் !
பசித்திருப்பவன் படுத்து விட்டால் உலகமே பாழ்பட்டுப் போய் விடும்! பசித்திருப்பவன் புசித்தெழுந்து விட்டாலோ உலகமே உயர்வின் உச்ச நிலைக்கு வந்து விடும். இந்தத் தத்துவத்தை உணர்ந்து தான் பசித்திருந்து அதன் புனிதத்தை உணரச் சொல்கிறது நோன்பு ! வரலாற்றுப் பின்னணிகளைப் படித்தால் இது நடந்து வந்த அடிச்சுவடுகள் அழகாகத் தெரியும் !
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் – நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி” என்று – இட்டு வாழும் எழில் குணத்தவரை – உலகில் வாழும் உயர் குலத்தவராக சித்தரித்துக் காட்டுகிறது இந்த வெண்பா.
உலக உயர்வுக்கும் – சமதானத்திற்கும் – சமதர்ம சமுதாயத்திற்கும் வழி சொல்லும் அனைத்துமே இஸ்லாமிய வாழ்வியல் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை நன்கறிவோம்