முப்பசி வென்ற முஸ்லிம்கள்

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

பசியினையே பசியறியார் புரிந்திடவே

பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே !

“பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே !

பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே !

பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி !

பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி !

ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி !

ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி !

கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் !

கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் !

கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக்

காணிக்கை செய்திடுவான் காமத்தை !

சுட்டுவிழிப் பார்வையிலே சுருண்டுபோகும்

சுந்தரியைச் சீண்டியுமே பார்க்கமாட்டான் !

கட்டுடலைக் கட்டிவைப்பான் இறைவனுக்கு !

காளையவன் தேர்ந்துவிட்டான் சுவனத்திற்கு !

நேர்மையுடன் உழைத்தெடுத்த பொருளிருக்க

நேர்த்தியுடன் சமைத்தெடுக்கப் பெண்ணிருக்க

ஆர்வமுடன் படைத்துவைக்கத் தாயிருக்க

ஆவலுடன் உண்பதற்கு மனமிருக்க –

பார்படைத்த பேரிறையின் அருளைத்தேடி

பக்தியுடன் பசியினையே தியாகம்செய்வான் !

சீர்மிகுந்த சொர்க்கமதைத் தெரிவுசெய்வான் !

சத்தியமாய் சொர்க்கவாசி இவரே காண்பீர் !

பழமிருக்க பாலிருக்கப் பழச்சாறிருக்க

பளிங்குகளின் கிண்ணங்களும் அழகாயிருக்க

பழகிவந்த நண்பர்களும் பக்கமிருக்க

பாங்குடனே ஊற்றிவைத்தும் மனம்வெறுக்க

அழகுமிகு ரமளானைக் கருத்தேகொண்டு

அத்தனையும் ஒதுக்கிவைத்துத் தாகித்திருப்பார் !

அழகுடனே ‘முப்பசி’யும் வென்றமுஸ்லிம்

அருளுடனே சொர்க்கமதில் வீற்றிருப்பார் !

நன்றி :

நம்பிக்கை மாத இதழ்

ஜனவரி 1998

 

 
முப்பசி வென்ற முஸ்லிம்கள்

கவிதையினைப் படிக்கையிலே

பசிதனை மறந்தேன்  கவிதை

ருசிதனிலே உறைந்தேன்

 

தென்றல் கமால்

thendralkamal@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *