புது தில்லி, ஜூலை 22: நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகள் ஆதரவில் பி.ஏ.சங்மா போட்டியிட்டார்.
இதில் பிரணாப் முகர்ஜி மொத்த மதிப்பில் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு சுமார் 3,15,987 மதிப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும், இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் அக்னிஹோத்ரி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.
புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, வருகிற 25-ம் தேதி பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் அமோக ஆதரவு அளித்து என்னை வெற்றிபெற வைத்துள்ளனர்.
புதிய பாதையில் அடியெடுத்து வைக்க உள்ள நான், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வகையிலும், அதன் கண்ணியத்தைக் கட்டிக்காக்கும் வகையிலும் உண்மைக் குடிமகனாகச் செயல்படுவேன் என்றார்.
பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸýம், சமாஜவாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி மூவரில் ஒருவரை நிறுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் ஒருவழியாக சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் இரு கட்சிகளும் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தன. தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்னதாக திரிணமூல் காங்கிரஸýம் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தது. பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை கட்சிகளும் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தன.
அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகியவை பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து பா.ஜ.க.வும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளித்தது.
வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 63-ல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. சுமார் 7 மணி நேரம் வாக்கு எண்ணும் பணி நடந்தது.
முதலாவதாக, தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகளும் அதைத் தொடர்ந்து ஆந்திரம், குஜராத், கேரளம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளும் அதைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளும் அசாம், ஹிமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
பிற்பகலில் பிகார், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர், தில்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளும், ஆறாவதாக கோவா, கர்நாடகம், மிசோரம், தமிழ்நாடு,
புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
வாக்கு மதிப்பு விவரம்: இதன் முடிவில், “”பிரணாப் முகர்ஜி 3,094 வாக்குகள் பெற்றார் (வாக்கு மதிப்பு: 7,13,763). அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ. சங்மா 1,484 வாக்குகள் பெற்றார் (வாக்குமதிப்பு: 3,15,987). 81 வாக்குகள் செல்லாதவை என்றும் அவற்றின் மதிப்பு 18,221” என்றும் மாநிலங்களவைச் செயலர் அக்னிஹோத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வாக்குகள்: இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 776 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அதில், தேர்தலில் வாக்களித்த 748 எம்.பி.க்களில் பிரணாபுக்கு ஆதரவாக 527 பேரும் சங்மாவுக்கு ஆதரவாக 208 பேரும் வாக்களித்துள்ளனர். சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் உள்ளிட்ட 9 பேர் பிரணாபுக்கு ஆதரவாக போட்ட வாக்குகளும் சங்மாவுக்கு ஆதரவாக 6 பேர் போட்ட வாக்குகளும் செல்லாது எனத் தெரியவந்துள்ளது.
கர்நாடகத்தில் கட்சி மாறி ஓட்டு: கர்நாடகத்தில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த மாநிலத்தில் சில சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். கர்நாடக சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 224 எம்எல்ஏக்களில் ஆளும் பாஜகவுக்கு 120 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தேர்தல் முடிவில் பாஜக ஆதரித்த சங்மாவுக்கு 103 வாக்குகளே கிடைத்துள்ளன. அந்த மாநிலத்தில் பிரணாபுக்கு 117 வாக்குகள் கிடைத்தன. மூன்று ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
ஆந்திரத்திலும் பிரணாப் முன்னணி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப் பேரவை உறுப்பினர்களில் 190 பேர் மட்டுமே தேர்தலில் வாக்களித்தனர். இந்தத் தேர்தலை எதிர்க் கட்சிகளான தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேசமயம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு இருந்ததால் பிரணாபுக்கு 182 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஐந்து வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
சொந்த மாநிலத்தில் சங்மாவுக்கு சறுக்கல்: பி.ஏ. சங்மாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது சொந்த மாநிலமான மேகாலயத்தில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. அங்கு பிரணாபுக்கு 34 வாக்குகளும் சங்மாவுக்கு 23 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இரண்டு வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.