எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் !
புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் ! அல்ஹம்து லில்லாஹ் !
பசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ! ஏனென்றால் உலக வரலாற்றை உற்று நோக்கும் போது பசிக்காக உண்போர்கள் கோடி உண்டு ! ருசிக்காக உண்போரும் கோடி உண்டு ! பசி கொண்டு மாண்டோரும் கோடி உண்டு ! இதைப் பார்த்துப் பார்த்து ரசிப்போரும் கோடி உண்டு !
இப்படிப்பட்ட உலகிலே நேர்த்தியுடன் உழைத்தெழுந்த பொருள் இருந்தும், அதை நேர்த்தியுடன் சமைத்தெடுக்கத் துணை இருந்தும், அதை ஆர்வமுடன் படைத்துக் கொடுக்க ஆள் இருந்தும், அந்த ஹலாலான ரிஸ்க்கை ஆவலுடன் சாப்பிடுவதற்கு மனமிருந்தும் – பேரிறைவன் அருளைத்தேடி பக்திப் பரவசமுடன் அத்தனையும் ஒதுக்கி வைத்து தியாகம் செய்யும் உண்மையான விசுவாசிகள் – முஃமின்கள் – முஸ்லிம்கள் போற்றுதலுக்குரிய பேரருள் பெற்றவர்கள் தான் !
சுட்டுவிரல் பார்வையால் சுருண்டு போகும் – சுந்தர மங்கையாக கட்டிய மனைவி வீட்டிலிருந்தும் – கட்டில் அருகிலும் நெருங்காமல் தனது இளமையையும் இன்பத்தையும் கட்டி வைத்து – காம உணர்ச்சியை இறைவனுக்காக தியாகம் செய்யும் புண்ணிய புருஷர்களை இறைவன் போற்றுகிறான்; புகழுகிறான்; நேசிக்கிறான் !
பாலிருக்கப் பழமிருக்கப் பழச்சாறும் இருக்க – அக்கம்பக்கம் அருமை நண்பர்கள் இருக்க துளி நீரும் பருகாமல் ரமளானின் கண்ணியத்தை மனதில் கொண்டு தாகத்தையும் தியாகம் செய்யும் புனிதர்களே ! புண்ணியர்களே ! உங்களைத் தான் இறைவன் விரும்புகிறான் !
’தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற புரட்சி மிகுக் கவிதையைத் தெரியாதவர் இருக்க முடியாது. ஒரு மனிதனின் பசி தனிக்க உணவில்லை என்றால் இந்த உலகமே இருக்கத் தேவை இல்லை – அதை அழித்து விடு என்பதே இக்கவிதையின் கருத்து , அப்படிப்பட்ட கடுமையும் கொடுமையும் நிறைந்தது மனிதனின் பசி உணர்வு. எனவே தான் இல்லாதவர் பசியை இருப்பவர் உணர உண்ணா நோன்பை இருப்பவருக்கும் இல்லாதாருக்கும் எந்தப் பாகுபாடுமின்றி எல்லோருக்கும் கடமையாக்கி வைத்தது இஸ்லாம்.
’பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்ற தமிழ்மொழியின் தத்துவத்தை நோன்பிருந்தால் உணர முடியும். பசியின் மேன்மையை உணர்ந்தவன் கருணை உள்ளம் படைத்தவனாகிறான். கருணை கொண்டவன் தருமம் செய்யத் தலைப் படுகிறான். தருமவான் போற்றப்படுகிறான் , புகழப்படுகிறான், சுவனம் புகுகிறான் ! ஒரு மனிதனை சுவனம் புக வைக்கும் தத்துவத்தைக் கொண்டதுதான் ரமளாம் நோன்பு.
கருணை உள்ளம் படைத்தவர்களும், தர்மவான்களும் கொடை நெஞ்சர்களும் – ஒரு குடும்பத்தில், ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டில் பல்கிப் பெருகிவிட்டால் – அந்தச் சமுதாயத்தில் இல்லாமை இருக்குமா? அந்த நாட்டில் ஏழ்மை இருக்குமா? ஏன் இந்த உலகிலே பசி இருக்குமா? பட்டினி இருக்குமா? பஞ்சம் இருக்குமா? இல்லாமை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் அல்லவா? இதைத்தான் புனித நோன்பின்வழி இஸ்லாம் போதித்து உணர்த்துகிறது!
ஒரு தனி மனிதனின் தியாக உணர்வால் கல்விச் சாலைகள் உருவாகுது இல்லையா? ஒரு தனி மனிதனின் தர்ம உணர்வால் தரும மருத்துவ மனைகள் தோன்றுவது இல்லையா? ஒரு தனி மனிதனின் கொடைத் தன்மையால் மார்க்கக் கலைக் கூடங்கள் உருவாகுவதில்லையா? மத்ரஸாக்கள் பெருகுவதில்லையா? மஸ்ஜிதுகள் மிளிருவதில்லையா?
இந்த உணர்வை, இந்த தியாகத்தை, இந்தத் தத்துவத்தை நோன்பின் வழியாக இஸ்லாம் மனித குலத்திற்கு விதைத்து வைத்திருக்கிறது. எந்தச் சமுதாயத்தில் தியாகமும் தர்மமும் தலை சிறந்து நிற்கிறதோ அந்தச் சமுதாயமே உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பது உலக வரலாறு கூறும் உண்மை
பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டு ‘ஏழ்மையை ஒழிப்போம்’ என அரைகூவல் விடுவோரும், பன்னீரிலே குளித்துக் கொண்டு இல்லாமையைத் துடைப்போம்’ என சுற்றறிக்கை விடுவோரும் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும் வழிகொண்டோர் என்பதை நாம் உணர்ந்துதானே இருக்கிறோம்?
அவர்களின் வாக்கெல்லாம் நீர் மேல் எழுத்தாகவும் அவர்களின் போக்கெல்லாம் மதில்மேல் பூனையாகவும் தான் இருக்கும். சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும். சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம் தானே?
அதனால் தான் சொல்லும் செயலும் ஒன்றாக கனவும் நினைவும் செயலாக – தியாக உணர்வை நோன்பின்வழி இஸ்லாம் போதிக்கிறது!
மனித இனத்திற்கு இறைவன் படைத்த உணவுப் பசி, தாகப்பசி, காமப்பசி இம்மூன்று பசிகளையும் அனுபவித்துப் பக்குவப்பட்ட மனிதன் – பிறர் பசியினைத் தீர்த்து வைக்கப் பாடுபட முடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் தான் பொதுவான கடமையாக நோன்பை இஸ்லாம் கட்டளையாக்கி இருக்கிறது.
அன்புச் சகோதரர்களே ! அருமைச் சகோதரிகளே ! புனித நோன்பை நோற்றிருக்கும் நமக்கு இந்த நோன்பு வெறும் பசியுடனும் பட்டினியுடனும் மட்டும் முடிந்து விடக்கூடாது. இது நமக்கு ஒரு பக்குவத்தையும் பேரருளையும் தர வேண்டும் அந்த உணர்விலே நாம் நோன்பை மேற்கொள்ள வேண்டும்.
நாம், நமது வாழ்விலே சந்திக்கும் ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகளைச் செய்ய வேண்டும். நோயாளிகளின் வியாதி விலகுவதற்கு மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். பிறருக்கு நம்மால் இயன்ற அனைத்து தியாகங்களையும் செய்ய வேண்டும் இது தான் நோன்பின் தத்துவம் ! இதுவே ரமளானின் தத்துவம்
எல்லாம் வல்ல இறைவன் இந்தப் புனித ரமளானின் புண்ணியத்தால் நமது பாவங்களை மன்னித்து பிறருக்கு உதவி புரியும் புனிதர்களாக வாழச் செய்வானாக ஆமீன் !