எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும்,
இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே !
எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும்,
எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே !
எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும்,
ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே !
உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே !
உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே !
தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே
தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை
உத்தமர்கள் போற்றுகிறார் ! புகழுகிறார் ! பாடுகிறார் !!
உலகமெலாம் இக்கருத்தை ஏற்று நடை போடுகிறார் !
சத்தியத்தை சமத்துவத்தை சரித்திரத்தில் தேடுகிறார் !
சரிநிகராய்ச் சமுதாயம் படைப்பதற்கு நாடுகிறார் !
இத்தரையில் இவையாவும் ஏற்றமிகு ரமளானின்
எழில்நோன்பு நோற்பவரே எளிதாகக் காணுகிறார் !
உதிரத்தை வியர்வையென உடல்சிந்தி உழைத்திட்ட
உயர் ‘ரிஸ்க்’கை இறைவனுக்காய் உண்ணாமல் பசித்திருப்பார் !
சதிபதியாய் சல்லாபம் சந்தோஷம் கொண்டாடும்
சகலமெலாம் இறைவனுக்காய் செய்யாமல் தனித்திருப்பார் !
விதியில்லா வணக்கமதும் இரவுபகல் தொழுவதற்கு
விருப்பமுடன் இறைவனுக்காய் உறங்காமல் விழித்திருப்பார் !
புதிதல்ல இதுவெல்லாம் பொன்னான முஃமினுக்கு !
புடம்போட்ட தங்கமென மின்னுகிற நோன்பாளிக்கு !
தொடர்பு எண் : 98 420 96527