கால்பந்தில் மின்சாரம்

இலக்கியம் கட்டுரைகள் கே.ஏ.ஹிதாயத்துல்லா M.A.B.Ed.M.Phil.

அறிவியல் அதிசயங்கள்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,

கால்பந்தில் மின்சாரம்

பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர் எதிர் கட்சியையும் மாறி மாறிக் குறை கூறினாலும் அவதிப்படுவது என்னவோ மக்கள் மட்டும் தான். இதற்கான மாற்றுவழியைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை வெளிச்சமாக்க மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மண்ணெண்ணெய் விளக்குகள் வெளியேற்றும் புகையில் சுற்றுச் சூழலை வெப்பமாக்கும் கார்பன் – டை- ஆக்சைடு வாயு அதிகம் உள்ளது. வீட்டிற்குள் விளக்கெரிப்பதால் வெளிவரும் புகையைச் சுவாசிப்பது ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைப்பதற்கு சமம் என்றி அறிவியலார் கணக்கிட்டுள்ளனர். இது மட்டுமா? இன்னும் கேளுங்க. ஒவ்வொரு ஆண்டும் மண்ணெண்ணெய் விளக்குகள் வெளியேற்றி வளிமண்டலத்தில் கலக்கும் கார்பன் – டை – ஆக்சைடு வாயுவின் அளவு 190 மில்லியன் மெட்ரிக் டன்கள் எனவும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். புகை நமக்குப் பகை என்பது உண்மை தான் என்கிறீர்களா?

இந்த புகை பிரச்சினைக்குத் தீர்வு காண புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் நான்கு பெண் விஞ்ஞானிகள் லின், ஜெஸிகா, மேத்யூஸ், ஜுலியா, சில்வர்மேன், ஹிமாலி தக்கார் ஆகியோர் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளனர். அதுதான் கால்பந்து மின்சாரம். உதைத்து விளையாடும் போதே மின்சாரத்தை உற்பத்தி செய்து சேமித்து வைக்கும் கால்பந்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி விளையாடும் விளையாட்டு கால்பந்தாட்டம். இப்புதிய கண்டுபிடிப்பு ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு மிகவும் பலனளிக்கும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இக்கால்பந்து மக்களுக்கு இரு வழிகளில் பயனுள்ளதாக விளங்கும். மகிழ்ச்சியுடன் நன்றாக உதைத்து விளையாட இது பயன்படும். மற்றொன்று இது உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு இரவு நேரங்களில் வீடுகளில் மின்விளக்குகளை எரிய வைக்கவும்,செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும் என்று இக்குழுவின் தலைவர் லின் தெரிவிக்கின்றார்.

இக்கால்பந்தினுள் காந்தம் ஒன்று சுழலும் காயிலுக்குள் பொருத்தப்பட்டுள்ளது. பந்தை உதைக்கும் போது ஏற்படும் இயக்க ஆற்றலால் காயில் சுழன்று மின்சாரம் உற்பத்தியாகிறது. சாதாரண காற்றடைக்கப்பட்ட கால்பந்தின் அளவைப் போன்றே இதுவும் உள்ளது. ஆனால் எடை சற்று கூடுதலாக உள்ளது. மேலும் இப்பந்தைக் கொண்டு 15 நிமிடங்கள் விளையாடினாலே போதும் அதைக் கொண்டு ஒரு சிறிய LED விளக்கை மூன்று நேரம் எரிய வைக்கலாம்.

நம் நாட்டில் கால்பந்தைக் காட்டிலும் கிரிக்கெட் ஆட்டம் பிரபலமாக உள்ளது. வீட்டில் களிகிண்ட வைத்திருக்கும் துடுப்பைக் கூட பேட்டாக மாற்றி விளையாடும் நம் இளைஞர்கள் இக்கண்டுபிடிப்பு பற்றி சிந்திப்பார்களா? அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *