வா ! ரமழானே ! வா !
உன்னை வரவேற்க
இரப்பைகளிலும்
இதயங்களிலும்
ஆயிரம்கோடி
கரங்களோடு காத்திருக்கின்றோம் !
நீ
பசிமாதம் ஆனாலும்
எங்கள் ஆன்மாக்களுக்கு
விருந்தளிக்கவல்லவா
விண்ணிறங்கி வருகின்றாய் ?
எங்கள்
ஆன்மத் தங்கத்தை
புடம்போட வருகின்ற
புனித ரமழானே !
வா ! வா !
காபாவைச் சுற்றிவந்து
கைக்குழந்தை ஆகின்றோம் !
ஆனாலும் இங்கே
பொய்க்குழந்தையாகவே
பொழுதைக் கழிக்கின்றோம் !
அந்தப் பாவத்
துருவையும் கூட
சுட்டெரிக்கும் உன் நெருப்பில்
சாம்பலாக்கி விடுகின்றாய் !
எங்கள்
ஆன்ம வயிறுகளில்
நீ
நெருப்பை மூட்டி
எங்களுக்காக
பசிவிருந்தினைப்
பகிர்ந்தளிக்கின்றாய் !
உண்ணாமல் பருகாமல்
உபவாசம் இருக்கின்றோம் !
தீயன
எண்ணாமல் இருந்திடவும்
எங்களுக்கு இறைவன்
அருள்பாலிக்கட்டும் !
நீ
ஸ ஹர் நேரத்து
விருந்தாக இல்லாமல்
சர்வரோக நிவாரண
மருந்தாக வா !
உன் கையில் உள்ள
ஒட்டடைக் கோலால்
எங்கள்
ஆன்மாவின் மூலைகளில்
ஒட்டியிருக்கின்ற
நூலாம்படைகளைத்
துடைத்தெறிய வா ! வா !
நாங்கள்
பெயர்தாங்கிகள் தான் !
எங்கள்
குடுவைகளில்
அமுதம் என்று
எழுதி ஒட்டிவிட்டு
ஆலகால விஷத்தை
அடைத்து வைத்திருக்கிறோம் !
எங்களிற் சிலர்
வட்டிமூச்சால்தான்
வாழுகின்றார்கள் !
பள்ளிவாசல்களில்
சிம்மாசனங்களை
அந்தச் சிலரே
சிதிலப் படுத்துகின்றார் !
ரமழானே!
உன்னெருப்பு கொண்டவரை
உருமாற்றம் செய்துவிடு !
பன் நெடுங்காலத்து
பாசிகளைத் துடைத்துவிடு !
அந்தத்
தொழுநோய்க் கைகளைத்
தொழும் கைக ளாக்கிவிடு !
அல்லாஹ்வை எங்களுக்கு
அருள் அழகுப் பரிசாக
அள்ளித்தர வருகின்ற
ஆசையுள்ள ரமழானே !
நீ
கொடையாளன் அல்லாஹ்வின்
படையாக வருகின்றாய் !
முப்பது நாள் என்றாலும்
முப்பத்து முக்கோடி
தெப்பங்களை அள்ளித்
தெரித்திட நீ வருகின்றாய் !
லைலதுல் கத்ர் என்னும்
புனிதப்பே ரொளிஉன்னுள்
புதைந்து கிடக்க நீ
புறப்பட்டு வருகின்றாய் !
கண் வலைவீசி உன்னை
கவர்ந்து கொள்வதற்கு
விண்கடலில் மனம்பதித்து
வெளியில் நிற்கின்றோம் !
ரமழான் பிறைமீனே !
உன்
வெளிச்சத்தின்
ஒளிச்சத்தால்
எங்கள்
ஆன்மா அகல்களில்
சுடரேற்ற வ ! வா !
திரிகள் கரிந்து
எண்ணெய் வற்றிப் போய்
எங்கள்
இதய அகல்கள்
இருண்டே கிடக்கின்றன !
வா ரமழானே ! வா ! வா!
இதயத்தை இரைப்பைக்கு
இடமாற்றம் செய்ய வா !
பசியினை அனைவருக்கும்
பரிமாற்றம் செய்ய வா !
ரமழானே !
உன்
ஒருகையில் அகப்பை !
மறுகையில் ஒட்டடைக்கோல் !
எங்கள்
ஆன்ம இலைகளைத்
துடைத்துவிட்டு
அல்லாஹ்வின் அருள் விருந்தை
அகப்பையால்
அள்ளிப் போட வா ! வா !
உன் கையால் விருந்துண்ண
நாங்கள்
உபவாசம் இருக்கின்றோம் !
pmkamal28@yahoo.com
__._,_.___