முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்தனர். அந்த கிராமத்தினர், காத்தாகுளம் கிராமத்தினர் குடிநீர் எடுக்க தடைவிதித்ததால், கடும் அவதிப்பட்டனர்.
அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று, ஆய்வுப்பணிக்காக வந்த முதுகுளத்தூர் பி.டி.ஓ., முத்திளங்கோவன், மேற்பார்வையாளர் சேதுபாண்டியை கிராமத்தினர் சிறைபிடித்தனர். “”இரண்டு நாட்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்” என, உறுதியளித்த பிறகும், ஏற்காமல் இருவரையம் சிறைபிடித்தனர். தாசில்தார் செழியன், பேச்சு நடத்தி சமரசம் செய்தார். இரண்டு மணி நேரம் சிறைபிடிக்கபட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.
நன்றி : தினமலர்