கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் லீக் மேடைகள்தோறும் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை தவறாமல் முழங்கி வந்தார்கள் “வஅதஸிமூ பிஹப்லில்லாஹி ஜமீஆ … அல்லாஹ்வின் (ஈமான் சார்ந்த ஒற்றுமை) கயிற்றை ஒன்றுபட்டு பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பதே அவ்வசனமாகும்.
அல்லாஹ்வின் உத்தரவு என்ற நன்நம்பிக்கை (ஈமான்) அடிப்படையிலும் சமூகத்தை முன் நிறுத்தும் அரசியல் பாட்டையில் வழி நடத்துபவரின் கலப்பற்ற ஆதங்கம் என்ற ரீதியிலும் இது மிக அவசியமான அறைகூவல் அழைப்பாகும். இந்த அழைப்பு ஏற்கப்பட்டு சமுதாயத்தில் ஒன்றுபட்ட பிணைப்பு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கம் நம்மவர்களின் உள்ளங்களில் நீக்கமற நிலைப் பெற்றிருந்து வந்தது என்பது உண்மை. ஆனால் அது செயல்வடிவம் பெறுவதற்கு ஆக்க ரீதியான முயற்சிகள், அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படாமல் காலம் கடந்து கொண்டே இருந்து வந்தது.
புதிய புதிய கட்சிகளை – இயக்கங்களை தோற்றுவிப்பவர்களெல்லாம் சமுதாயத்தின் முன், வைத்த முதல் கொள்கை அறிவிப்பும், சமூக ஒருங்கிணைப்பு என்பதாகவே இருந்து வந்தது. ஆனால் உண்மை நிலை என்னவெனில் சமுதாயத்தை மேலும் பிரிப்பதற்கே அது உதவி செய்துள்ளது. இதனை சுதந்திர இந்தியாவின் அறுபதாண்டு கால எதார்த்த நிலை நிரூபித்து வந்திருக்கிறது.
ஃபிலாஸஃபி தத்துவங்களில் தியோரிக்கல் என்றும், பிராக்டிக்கல் என்றும் இரு பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. முதலாவது சீரிய நியதிகள், இரண்டாவது எதார்த்த (செயலாக்கங்கள்) நிகழ்வுகள். இவ்விரண்டின் கூட்டு முயற்சியினாலேயே வாழ்வின் மேம்பாட்டுக்கு வழியமைத்து தர முடியும் என்பது அறிவு ஜீவிகளின் முடிவாகும். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் நல்ல கொள்கைகள், மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் இவ்விரண்டின் மூலமே மனித வாழ்வை செப்பனிடவும் சிறப்படையச் செய்யவும் முடியும்.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பது மனித வாழ்வின் அனைத்து பிரிவிலும், துறையிலும் உணரப்பட்ட ஒன்று. எனினும் ஒன்றுபடுவதற்கு அதிகபட்சம் உலகாதாய பலன்களை மட்டுமே பிற சமய சமுதாய மக்கள் தங்களின் குறிக்கோளாக ஆக்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் இஸ்லாம் வழிகாட்டும் ஒருங்கிணைப்பு உலகவாழ்வின் உயர்வை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல. இஸ்லாம் இறைவனை வணங்குவதிலும் கூட ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. அதற்கு அழகிய செயல் ரீதியான வழிகாட்டுதல் களையும் செய்திருக்கிறது. ஐங்கால (ஜமாஅத்) கூட்டுத் தொழுகை, ஒரே மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்பது, ஒரே காலம் இடம் ஆகியவற்றை நிர்ணயித்து உலகளாவிய சமூக ஒருங்கிணைப்பை ஹஜ்ஜின் மூலம் இயல்பாகவே ஏற்படச் செய்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் முத்திரை குத்தப்பட்டுள்ளனர். உண்மையில் நாமே பெரும்பான்மையினராக இருந்து வருகிறோம். இதனை நாமும் உணரவில்லை. பிறர் உணரும்படி வாழ்ந்து காட்டவுமில்லை என்பதே எதார்த்தமான உண்மை. இறைக்கொள்கைகள், இறைவனை வணங்கும் முறைகள், சமூக அடையாளங்கள் பழக்கவழக்கங்கள் குல கோத்திர வரணாசிர பாகுபாடுகள் ஆகிய ஆயிரக்கணக்கான காரணங்களால் உணர்வுகளாலும், உறவுகளாலும் பிரிவுபட்டு இருப்பது இந்தியத் திருநாடும் இதில் வாழும் அனைத்து சமூக மக்களும்தான். ஆகவே சிறுபான்மை பட்டத்திற்கு இவர்களே மிக்க தகுதியுள்ளவர்கள்.
மேலே விவரிக்கப்பட்ட அனைத்து நிலைகளிலும் உணர்வாலும், வாழ்வியலிலும், வணக்க வழிபாடுகளிலும் ஒரே சீரான கட்டமைப்பை உடையவர்களாக இந்தியத்திரு நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே இந்திய நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர் இஸ்லாமியர்கள் மட்டுமே. இதனை முதலில் நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். பிறர் உணர வாழ்ந்து காட்டுவது என்பதும் இன்றைய காலகட்டத்தில் அவசியத்திலும் அவசியமாகும்.
உள்ளுக்குள் இருந்து வரும் இந்த ஒருங்கிணைப்பின் உறுதிப்பாடு முஸ்லிம்களை பொறுத்து “மஹல்லாஜமாஅத்” என்பதை கொண்டு உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துலகிலும் இந்த மஹல்லா ஜமாஅத்துகள் நிலை பெற்றிருக்கின்றன. உலக வல்லரசான அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிராயுதபாணிகளான ஆப்கானியர்களின் வீரவாழ்வுக்கு கட்டியம் கூறிக் கொண்டிருப்பதே “ஜர்க்கா” என்ற மஹல்லா ஜமாஅத்தின் கட்டமைப்பும், அதன் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே ஆகும். இதனை அனைத்துலக மீடியாக்களும் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியத் திருநாட்டில் – குறிப்பாக தமிழகத்தில் (மிகச்சிறிய சமீபகால சிதறல்களை நீக்கி நோக்கினால்) மஹல்லா ஜமாஅத்துகள் இன்றும் கூட நல்லமுறையில் நிறுவகிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களால் நாட்டில் நிலைநாட்டிட முடியாத எத்தனையோ நீதிபரிபாலனங்களையும் பிணக்குகளையும் சீர்செய்வதில் முதன்மையானதாகவும், முன்னோடியாகவும் இவை திகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்
மஹல்லா கட்டமைப்பு என்ற உறுதிப்பாட்டின் மூலம் சமூகத்தின் அஸ்திவாரத்தில் இருந்து வரும் பிணைப்பை தமிழகம் தழுவிய நிலையில் (பிராக்டிகல்) செயலாக்க முறை மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பதற்கான அரிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இம்முயற்சி காலத்தால் சாலச்சிறந்தது ஆகும். அனைத்து ஜமாஅத்தார்களும் இதில் இதய சுத்தியுடன் பங்கேற்பது கட்டாயமான அவசியமானதாகும். அரசியலுக்காக இந்த ஏற்பாடு என்று எண்ணி கூறி மக்களை திசை திருப்புபவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே மாபெரும் கேடு செய்பவர்களாவார்கள். ஏனெனில் இப்பணியை செய்தாக வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனை முஸ்லிம் லீக் அல்லாமல் வேறு எந்த இயக்கத்தினர் செய்தாலும் இந்த குற்றச்சாட்டை அவர்கள் மீதும் சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று கூற முடியாது. ஆகவே தமிழகத்தைப் பொறுத்து இன்றைய நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே இம்முயற்சிக்கு மிக்க அருகதையுள்ளதாகும் இதனை தீர்க்கமாக சிந்தித்து செயல்படுவது ஒவ்வொரு மஹல்லாவின் மார்க்கரீதியான கட்டாய கடமையாகும்.
அல்லாஹ் கிருபை செய்து அருட்பாளிப்பானாக ஆமின் !