சுல்தான் கியாஸுத்தீன் முதுமையின் சுமையால் உயிரோடு போராடிக்கொண்டிருந்தார். எனவே கொள்ளையர்களை விரட்டியடிக்கச் சென்றிருந்த அவருடைய மகன் இளவரசர் முகம்மதை சற்றே விரைந்து திரும்புமாறு அவசரச் செய்தியை அனுப்பினார். அவ்வாறே திரும்பிய மகனிடம் தனிப்பட்ட முறையில் தன் இறுதி உபதேசத்தை இதயம் கசிய எடுத்துரைத்தார்.
“நீண்ட நெடிய அனுபவம் பெற்ற என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேள். அவை உனக்குப் பெரிதும் பயன்படும். நீ அரியணை ஏறும்போது உன்னை அல்லாஹ்வின் பிரதிநிதி என்று உணர்வாயாக.
நீ ஏற்கப் போகும் பொறுப்பு எவ்வளவு பாரதூரமானது என்பதை உரிய முறையில் உணர வேண்டும்.
உன்னுடைய உள்ளத்தில் எந்த விதமான மாசு படிந்த எண்ணத்திற்கும் இடம் கொடுத்து விடாதே.
உன்னைப் பற்றி நீயே மேன்மையாக எண்ணவோ, பகட்டாகக் காட்டிக்கொள்ளவோ கூடாது.
உனக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்புகளில் எதைப் பற்றியும் பேராசைக்காரர்களிடமும் அறிவில் தரம் தாழ்ந்தவர்களிடமும் பகிர்ந்து கொள்ளாதே.
அறிவையும் பயபக்தியையும் கொண்டு உன் உணர்ச்சிகளை அடக்கி ஆள்வாயாக. கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் நீ எச்சரிக்கையாக இரு. கோபம் எந்த மனிதனுக்கும் ஆபத்தானது தான். அது அரசர்களைப் பொருத்தவரை அழிவையே தரக்கூடியதாகிவிடும்.
பொதுக் கருவூலம் நாட்டு மக்களின் நலனுக்காகவே செலவிடப்பட வேண்டும். நற்செயல்கள் புரியும் விருப்பத்தோடும் செயல் திறனோடும் தாராளத் தன்மையோடும் செம்மையாகவும் நாட்டின் பொருளாதாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
உன்னுடைய முன்மாதிரியால் அல்லாஹ்வைத் தொழும் கடமை உணர்வு மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டாக வேண்டும். அதற்கேற்ப மக்களைப் பயிற்றுவிக்கவும் வேண்டும்.
கடுங் குற்றங்களையும் வஞ்சகமான பழக்க வழக்கங்களையும் ஒரு பொழுதும் அனுமதிக்காதே. அவற்றிற்குரிய தண்டனைகள் வழங்கப் படுவதில் கவனமாய் இரு.
தம் நலம் கருதும் அமைச்சர்கள் விருப்பம் போல் செயல்பட்டு, மக்கள் மீது தேவையற்றதைத் திணிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளில் நீ எப்போதும் கவனமாய் இரு.
வெளிப்படையாகவோ தனிப்பட்ட முறையிலோ உன்னிடம் எந்த ஒழுக்க குறைவும் ஏற்பட இடம் கொடுத்து விடாதே. ஓர் அரசனுக்குரிய முக்கியமான குண ஒழுக்கங்களை நிலை நாட்டுவதன் மூலம் மக்களிடம் மதிப்பச்சம் மட்டுமல்லாமல் சிறந்த செயலூக்கமும் ஏற்படுமாறு செய்.
உன்னைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொன்றும் முறைப் படுத்தப்பட வேண்டும். அதனால் உன்னைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் மக்கள் உள்ளத்தில் இயல்பாக உருவாகும். அது உனக்கு கண்ணியத்தை ஏற்படுத்தும். உன்னுடைய கட்டளைகளை மதித்து அவற்றை மக்கள் நிறைவேற்றுவதற்கு அது உதவியாக இருக்கும்.
மேதைகள் கல்வியில் சிறந்தவர்கள், வீரம் மிகுந்தவர்கள் முதலியோருக்கு எவ்விதமான துன்பத்தையும் ஏற்படுத்தாதே. அத்தகையவர்கள் உன் வலிமைக்கும் ஆட்சிக்கும் தூண்களாக விளங்குபவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உன்னுடைய அன்பாலும், வள்ளன்மையாலும் அவர்களைக் காத்து, ஆதரித்து வருவாயாக.
ஒரு சிறிய குற்றம் செய்தார் என்பதற்காக ஒரு மாமனிதனைத் தூக்கித் தரையில் போட்டுவிடாதே. அதே சமயம் அவருடைய சட்ட மீறல்களை முற்றிலுமாகக் கவனிக்காமலும் விட்டு விடாதே.
ஒரு தரந்தாழ்ந்த மனிதனை மிகவும் அவசரப்பட்டு ஓர் உயர்ந்த நிலையில் உயர்த்தி வைக்காதே.
மிகவும் அவசியமானது என்பதையும் உன்னால் நிறைவேற்ற முடியும் என்பதையும் நீ உறுதியாக உணராத நிலையில் நீ எந்த முயற்சியிலும் ஈடுபடாதே.
ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்று நீ எண்ணித் துணிந்து விட்டால் உன் விடாமுயற்சியால் வெற்றி பெறும் வரை அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே.
மனவலிமை இல்லாமலும் ஊசலாடும் மனநிலையிலும் இருப்பதை விட விட்டுக் கொடுக்காமல் பற்றுறுதியோடு இருந்து வெற்றி கொள்வது ஓர் அரசனுக்கு மிகவும் சிறந்ததாகும்.
இறுதி நேரச் சிரமங்களுக்கு இடையில் ஒருவாறாக உபதேசத்தைக் கூறி முடித்த பின்னர் சுல்தான் கியாஸுத்தீன் தனக்குப் பிறகு பொறுப்பேற்கப் போகும் மகனை அன்போடும் தழுவிக் கொண்டார். கண்களில் அரும்பி நிறைந்த கண்ணீரோடு அவர் தன் மகனையும் மண்ணுலகையும் விட்டுப் பிரிந்தார்.
-தானா மூனா