ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை.
‘ஆகவே, மனிதனை அவனுடைய இறைவன் சோதித்து அவனுக்கு அருள் புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான்.
ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து விட்டால், என்னிறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்’ என்று (குறை) கூறுகின்றான்.’’ – அல்குர்ஆன் (89 : 15, 16)
ஏன் இந்த இரு நிலைகள்? எச்சமயத்திலும் இறைவன் மீது முழு நம்பிக்கை கொள்வது எப்போது ?
‘சுகமும் சோகமும் நிரந்தரமல்ல’ என்பதை நாம் மறந்து விடுகின்றோம். சோதனைக் காலத்தில் தான் நாம் நம் மனதைத் திடப்பத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.
எல்லா நபிமார்களின் வாழ்வையும் ஸஹாபாக்களின் வாழ்வையும் சிந்தித்தால் அவர்களின் உறுதிநிலை தெரியும்.
வாழ்வில் உயர்ந்து நிற்கும் எந்த மனிதனையும், நீங்கள் முன்னேறியதற்குக் காரணமென்ன? என்று நீங்கள் கேட்டால் ‘நான் பல சோதனைக் கட்டங்களைப் பொறுத்துக் கொண்டதாலும், துன்பங்களை சகித்துக் கொண்டதாலும் நான் முன்னேறியிருக்கிறேன்’ என்பார்.
நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகர மக்களின் கல்லடி, சொல்லடியை ஏற்றும் அவர்களை அழிக்க நாடவில்லை. இச்சோதனையை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இன்று அந்நகரமே இஸ்மாமிய நகரமாகத் திகழ்கின்றது. இந்த வெற்றி எதனால் ஏற்பட்டது ?
நபி ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் தவப்புதல்வர், அருமை மகனை அறுக்க வேண்டும்’ என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அறுக்க எத்தனித்த போது தான் அல்லாஹ், அவர்களின் முழு ஈமானையும், தன் மீதுள்ள அதீத அன்பையும் தெரிந்து கொண்டான். பின்பு தான் ‘கலீலுல்லாஹ்’ என்ற பட்டத்தை வழங்கினான். சோதனையை ஏற்றதால் தானே இப்பட்டத்தைப் பெற முடிந்தது ?
ஹள்ரத் பிலால் (ரளி) அவர்கள் தன் எஜமானனின் அடி, உதை தாங்க முடியாமல் ஈமானை விட்டிருந்தால் “ரளியல்லாஹு அன்ஹு” என்று போற்றப்படுவார்களா? பல சோதனைகளை ஈமானுக்காக அல்லாஹ்விற்காக ஏற்றுக் கொண்டதால் தான் இன்று அவர்களின் பெயரை பலர் பெருமையாக சூட்டிக் கொள்வதைக் காண்கின்றோம். இச்சிறப்பு எப்படி கிடைத்தது ?
ஹள்ரத் சுமையா (ரளி) அவர்கள், இறைவனுக்காக ஈமானைக் காத்திட்டபோது அவர் தம் பிறப்புறுப்பில் அம்பெய்தப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். இறைவனுக்காக தன் இன்னுயிரை ஈந்த காரணத்தால் அவர்கள் சரித்திர ஏடுகளில் போற்றப்படுகின்றார்கள்; புகழப்படுகின்றார்கள்.
மூமீன்களின் அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் போருக்குச் சென்று வரும்போது சிறு தடங்கலால் தங்கி விட்டு பின்னால் வந்த ஸஃப்வான் (ரளி) அவர்களுடன் ஊருக்குத் திரும்பும்போது அவதூறு கூறப்பட்டு பரிதவித்தார்கள். உண்ணவில்லை, உறங்கவில்லை, நிம்மதியிழந்து தவித்தார்கள். தம் ஆருயிர்க் கணவர் நபி (ஸல்) அவர்கள் கூட நம்முடன் பேச மறுத்து விட்டார்களே ! என புழுவாய்த் துடித்தார்கள். இவ்வளவு சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு படைத்த இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை தூய்மைப்படுத்தும் வண்ணம் ‘சூரத்துன்நூர்’ எனும் அத்தியாயத்தில் பத்து வசனங்களைக் கூறினான். இதைக் கண்டு நம் அன்னை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.
இந்த பத்து வசனங்களை பிரத்தியேகமாக அவர்களுக்காக அல்லாஹ் இறக்கியருளினானே ஏன் ? சோதனைகளைத் தாங்கி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதால் தானே !
“துன்பத்திற்குப் பின் இன்பமே ; துன்பத்திற்குப் பின் இன்பமே !” என்று;-
இருமுறை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக்காட்டுகின்றான். இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. இஃது உலக நியதியும், இறைவனின் தீர்ப்புமாகும். இதை மனிதனால் மாற்றவியலாது. தொடர்ந்து இன்பத்தில் திளைத்தவனும் கிடையாது. தொடர்ந்து துன்பத்தில் மூழ்கிக் கிடப்பவனும் கிடையாது. இரண்டும் மாறிவரும் இரவு பகல் போன்றது. சோதனையைக் கண்டு உருகிப் போவதை விட துன்பத்தை சகித்துக் கொண்டு இன்பத்தை சுகித்துக் கொள். இதுவே நடுநிலை வாழ்விற்கு வழி வகுக்கும்.
சோதனைகள் வெற்றிக்கே !
சோதனைதான் வெற்றியின் முதற்படி !
சோதனைகளை வென்று பல சாதனைகள் படைப்போம் !
அல்லாஹ் அருள் புரிவானாக !