மக்கம் –
இபுராஹிம் நபிகள்
இஸ்மாயில் நபிகளின்
பிரார்த்தனை தேசம் – அங்கே
பிறந்ததுதான் நமது
ஈருலகங்களுக்குமான
இரட்சிப்பு சுவாசம் !
கஅபா –
உலக முஸ்லிம்களின்
கவுரவ கம்பீரம் – உலகின்
அனைத்து நபிமார்களும்
நின்று வணங்கிய
இறை வாசஸ்தலம் !
அன்னை ஹாஜரா
ஏழுமுறை ஓடித்தேடிய
குழந்தையின் தாகம்
இங்குதான்
புனித ஜம் ஜம்மாய் சுரந்தது !
ஹஜ்ஜூக்கு வந்து – தங்கள்
அழுக்குப் பாவங்களை
அகற்றுபவர்கள்
புனித மழலைகளாகப்
பிறக்கிறார்கள் !
பிள்ளைகளுக்குப் பாலூட்டுவது
மக்கத்தாயின் கடமையல்லவா !
மக்கத்தின் ஜம்ஜம்
குழந்தை இஸ்மாயிலுக்கு
பாலூட்டுவதால்தான் – மக்கா
மாநிலத்தின் மார்பிடமானதோ !
அங்கே ஓடுவது
நம் தோள் குலுக்கும்
தொங்கலோட்டமா
இல்லை
எதிரிகளுக்கு நம் வலிமை சொல்லும்
வெற்றி ஓட்டம் !
நம் உள்ளுக்குள் எழும்
காமக் குரோதக் கோபச்
சாத்தான்களுக்கு
அங்கே போயல்லவா
கற்களை எறிகிறோம் !
நாளைய நம்
மஹ்ஸரின் சந்திப்புக்களை
அரஃபாவில் அல்லவா
வெண்ணாடை அணிந்து
அரங்கேற்றம் செய்கிறோம் !
அதனால்தான்
நபிகள்பெருமான் நின்ற இடம்
மக்காவும்
சென்ற இடம் மதினாவும்
நமக்குச் சொர்க்கங்களாகின !
நம்
சமத்துவச் சகோதரத்துவச்
சமுதாயத்தின்
அணிவகுப்பை
க அபாவோடு மட்டுமல்ல
உலக அரங்கிலும்
அரங்கேற்றம் செய்வோம் !