நம் உடலில் தினசரி ஏற்படக் கூடிய, வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய, உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதைக் கொடுப்பது தான் உணவு. பொதுவாக, ஒவ்வொரு உணவுப் பொருளும், சிறந்த மருத்துவப் பண்புகளை கொண்டிருக்கும்.
சில பொருட்களை, ஒன்றுடன் ஒன்று கலந்து சாப்பிடும் போது, அதன் பலன் இரட்டிப்பாகும்.உதாரணமாக, தேன் மருத்துவக் குணம் கொண்ட உணவு. தேனை தனியாக, நாள் ஒன்றுக்கு, ஆறு டீஸ்பூன் வரை கூட சாப்பிடலாம். இதே போல் பசு நெய்யும் உடலுக்கு நல்லது. ஆனால், இரண்டையும் ஒன்றாய் கலந்து சாப்பிட்டால், தொண்டை அழற்சி, வயிற்றுப் பிரச்னை ஏற்படும்.
கைக்குத்தல் அரிசி, அவலை, தயிருடன் கலந்து சாப்பிட்டால், வயிறு மந்தமாகும்; மூட்டு வலி வரும்.இரண்டு பொருளை சேர்த்துச் சாப்பிடுவதால், உடலுக்கு கூடுதல் நன்மை ஏற்படுவதும் உண்டு. நாட்டுச் சர்க்கரையும், புழுங்கல் அரிசியும் சேர்த்து செய்யும், சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போது, வாந்தியையும், மனத் தடுமாற்றத்தையும் போக்கும். எள் சேர்த்து தயாரிக்கப்பட்ட புளி சாதம் உண்டால், நாவில் உள்ள சுவை மொட்டுக்கள், நன்றாக இயங்க ஆரம்பிக்கும்.
சூடான சோறுடன் நல்லெண்ணெய் கலந்து உண்டால், இளமை பொலிவாக இருக்கலாம். குழைந்த சாதத்துடன், பசு மோர் அல்லது தயிரை, கல் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமானத் தன்மை அதிகரிக்கும். மாமிசங்களுடன், இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கல் உப்பு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பக்குவப்படுத்தி சமைக்கும் போது, மாமிசத்தின் நஞ்சு நீங்கி, அந்த உணவு, உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். நாள்பட்ட நோய்களுக்கு பின் ஏற்படும், உடல் தளர்ச்சியை நீக்கும்.சமைத்த உணவுடன், பழங்களைச் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. பழம் சாப்பிட்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து தான், உணவு உண்ண வேண்டும்.
உணவிற்கு முக்கால் மணி நேரம் முன், நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.எதை, எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம், பசித்து புசிப்பது! எந்த ஒரு காரணத்திற்காகவும், பசிக்காமல், சாப்பிடவே கூடாது.