சமத்துவபுரம்
( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )
சுவனத்தின் மலர்
சோதிமய மாகிப்
புவனத்தில் பூத்ததோ?
புதுப்பள்ளி யானதோ?
நிறைநிலா வட்டு
நெடுவானம் விட்டு,
தரையிறங்கி வந்ததோ?
தவப்பள்ளி யானதோ?
விண்மீன் ஒன்று
மண்மீது விழுந்து
கண்கவர் பள்ளியாய்க்
காட்சி யானதோ?
அழகெல்லாம் கூடி
அலங்காரம் செய்து,
எழில்பள்ளி யாக
எதிர்நின்ற தாமோ?
சீரெல்லாம் சேர்ந்து
சிங்காரம் செய்து
ஓரிறைப் பள்ளியாய்
உருவான தாமோ?
வனப்பெல்லாம் திரண்டு
வளம்மிகப் பெற்று,
தினந்தொழும்
பள்ளியாய்த்
திகழ்கின்ற தாமோ?
கொற்றவன் கூடோ?
கோமகன் வீடோ?
பற்றிலான் மீது
பற்றுடன் எழுந்த
நற்றவப் பயனோ?
நன்னெறிப் புலமோ?
பொற்புடை தலமோ?
புண்ணிய புரமோ?
தொழுகை மேடையாய்ப் பிறந்து,
தொழும் பள்ளியாய் வளர்ந்து,
இன்று
தொழும் மாளிகை
ஓதும் மதர்சா
கூடும் மர்க்கஸ் என
மூன்று பெரும் பரிமாணங்களுடன்
தோன்றும் எழில் தோற்றம் காணீர் !
காலமெல்லாம்
காபா நோக்கித்
தொழுது கொண்டிருக்கும்
தூய பள்ளி !
படைத்தவனுக்குப்
படைப்புகள் கூடிப்
படைத்திருக்கும் படையல் !
திருமறை மொழியில்
திருநபி வழியில்
தீனோர்கள் திளைக்கும்
தீனின் கோட்டை !
சொர்க்கத்துத்
திறவு கோலின்
உற்பத்திச் சாலை !
ஓரிறைக் கொள்கையின்
பேரரங்கம் !
ஆத்மிக நெறியின்
அருட்சுரங்கம் !
கலிமாச் செல்வங்களின்
கருவூலம் !
கல்பு விளைச்சலின்
களஞ்சியம் !
சமத்துவம் தழைக்க
சகோதரத்துவம் செழிக்க,
சன்மார்க்கம் கொழிக்க
மாந்தரை அழைக்கும்
சாந்தி நிலையம் !
சமத்துவபுரமாம் !
எது சமத்துவபுரம் ?
அதோ
பாரெங்கும் அழைக்கும்
பாங்கின் அருளோசை !
இதோ
மாட மாளிகைகளுடன்
மண் குடிசைகளும்,
கோட்டை கொத்தளங்களுடன்
கூரை வீடுகளும்
கைகோர்த்துக் கொண்டு
தூயவன் பள்ளிக்குத்
தொழச்செல்லும் காட்சி
சமத்துவத்தின் மாட்சி !
’தக்பீர்’ முழக்கத்தில்
‘தெளஹீது’ மலர்கள்
கரவிதழ் விரித்து
இறைவனிடம்
சரணடையும் நேர்த்தி –
சன்மார்க்கக் கீர்த்தி !
சுல்தான் சுலைமானும்
அடிமை ஐயுபும்
தோளோடு தோளிணைய
தோழமை உணர்வுடன்
தோய்ந்திடும் ஒருமை –
தூய்மையின் பெருமை !
ஆமாம்,
சாதி வழக்கின்றிப்
பேதப் பிணக்கின்றிக்
கூடித் தொழுதிடும்
சமரசச் சரம் !
இதுவே சமத்துவபுரம் !
( இளையான்குடி நெசவுபட்டடை தொழுகை மேடை புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பு மலரிலிருந்து – 23 மே 2008 – ஹிஜ்ரி 1429 ஜமாதுல் அவ்வல் பிறை 17 வெள்ளிக்கிழமை )
பேராசிரியர் தை.கா. காதர் கனி – இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர்