இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக மக்களைச் சென்றடைகிறது. Informative essay செய்தி விரிவாக்கம் எனக் கட்டுரையைக் கூறுவர். நிகழ்கால மக்கள் பிரச்சனைகள், தேவைகள், கலாச்சாரம், உடை, உணவு, வேலைவாய்ப்பு, திருமணம், விவாகரத்து, குடியமர்வுச் சிக்கல், தேய்ந்து வரும் ஒழுக்கம், கரைந்தோடிய கூட்டுக் குடும்பப்போக்கு கலாச்சாரப் பின்னடைவு, சக்கராத்து ஹாலிலிருக்கும் சிறு வணிகம் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆணும், பெண்ணும் தனித்து வாழக்கூடிய சூழல் இவற்றை இலக்கியத்தின் எந்த வடிவத்திலும் கொண்டுவர பதிவு செய்ய முஸ்லிம் சமூகத்தில் ஆள் இல்லை. பழம்பெருமை பேசி மீள் பதிவிறக்கம் செய்யும் அதேவேளை இன்றைய பிரச்சினைகளும் பதிவு செய்யப்படவேண்டும். ஆல்பத்திற்காக, வீடியோவுக்காக, பொழுதுபோக்குக்காக இலக்கியப்போக்கு கையிலெடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும். நபியவர்கள் துஆ கிட்டாது.
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 3,000 ம் பேர் தத்தமது துறை, வாழ்வியல் அனுபவங்களை எழுதி ஸ்கிரிப்ட் வடிவில் வைத்துள்ளனர். அவற்றை புத்தகமாகக் கொண்டு வருவதற்கு உதவலாம். 55 முஸ்லிம் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கு ஆளில்லை. ஒரு சிலரே 10 பெயர்களில் எழுதும் சூழ்நிலையுள்ளது. இதழை ஃப்ரூப் பார்க்க சந்திப்பிழை, கருத்துப்பிழை நீக்க ஒட்டுப்பிழை சரிசெய்ய, சங்க இலக்கியத்தில் தெளஹீது கண்டுபிடிக்க, உரை எழுத ஆள் கிடைக்கவில்லை. இலக்கிய ஜாம்பவான்களாக கருதப்படுவோர் ஒருவரையும் உருவாக்கப்படவில்லை.
காலந்தோறும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் செய்த மேடை உரையை எழுத்து வடிவில் கொண்டு வரமுடியாத இயலாமையில் கை பிசைந்து நிற்கின்றனர். கலந்து கொண்டோர் பெயர்ப்பட்டியல் வருகிறதே தவிர, பங்குபெற்ற சிறப்பாளர் என்ன பேசினார்? வெளிப்பட்ட சிறந்த கருத்து முழுமையாக அதே மூலத்தோடு நூலாக்கித் தர ஒட்டு மொத்த தமிழகத்திலும் ஆள் இல்லை. போகிற போக்கில் சகட்டுமேனிக்கு எடுத்து வீசப்படும் குற்றச்சாட்டல்ல இது.
ஒவ்வொரு வாரமும், ஆங்கில உரைக்கூடம், தமிழ் உரைக்கூடம், மாநாடுகள், இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு கள ஆய்வு செய்து கூறும் அனுபவத்தின் வெளிப்பாடு. வாரந்தோறும் தமிழகம் தழுவி சென்னை பிற பகுதிகளில் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு, புறநானூறு, திருக்குறள், திருமுறை வகுப்புகள் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. சேவை மனப்பான்மையோடு ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள், புலவர்கள் செயல்படுகின்றனர். முஸ்லிம் சமூகத்தில் பழந்தமிழ் இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம் இலக்கிய வடிவங்களுக்கான பயிற்சிகள், சீர்பிரிக்கும் முறை, உரை செய்யும் முறை, படைப்பாக்கத்திறன் வளர்ச்சி, விரிவுரை வகுப்புகள் நடத்தப்படவில்லை.
வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒதுக்கி தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துச் செல்ல ஓய்வு பெற்ற, பெறாத ஆசிரியர், பேராசிரியர்கள் முன்வர வேண்டும். தாம் வாழக்கூடிய பகுதிகளில் சங்க இலக்கியம், தொல்காப்பியம், இஸ்லாமிய இலக்கியம் குறித்து வகுப்புகள் எடுத்து வளரும் சமூகத்தை தமிழ்ப்புலமையாளர்களாக மாற்றவேண்டும். இலக்கியம் செய்கிறோம் செய்யவிருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள் இவை.
-சதாம்
நன்றி :
முஸ்லிம் முரசு
மே 2011