தங்கைக்கோர்……. திருவாசகம் !

கவிதைகள் (All) பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா


( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )

தங்கையே..!

சாலிஹான நங்கையே…!

என் உயிரின் நிழலே…!

ஒன்று சொல்லட்டுமா…?

கல்வியென்பது

நம் முகத்திற்கு

கண்களைப் போன்றது…!

நமக்கு

முகவரியும் அதுதானே…!

கல்வியென்பது

நம்மை உயர்த்துவது !

குறிப்பாக…!

பெண்ணை நிமிர்த்துவதென்பன் !

கல்வியென்பது

இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும்

கண்ணாடி…!

கல்வியென்பது

அறியாமையை அப்புறப்படுத்துவது !

கல்வியென்பது

செல்வம் !

இது எடுத்தாலும் – பிறருக்கு

கொடுத்தாலும் குறைவதில்லை…!

இன்னொன்றும்

தெரியுமா…?

கல்வியொன்றுதான்

களவாட முடியாத செல்வம்..!

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்

சிறப்புயென்று

உன் ஆசிரியை சொன்னதாக

அன்று

என்னிடம் சொன்னாயே..!

இந்த பூமியில்

மண் படிக்க

மரம் படிக்க

பெண் படிக்காதிருப்பது

பேதமையன்றோ..!

ஆம்..!

தன்னுள் புதைத்த

விதைகளை

பூக்களாய், காய்களாய்,

கனிகளாய் புன்னகைக்க

மண் கற்றிருக்கும் போது,

பெண் படித்தாலென்ன..

பிழையா..?

சகோதரி..!

உலகில் பேராபத்து

எது தெரியுமா…?

கல்லாமைதான்..!

ஆமாம்..!

உன் பெயரை

வெறும் வாக்காளர் பட்டியலில் மட்டும்

பார்த்து விட விரும்புகிறாயா…?

அல்லது

இந்த உலகமே தன்

புருவத்தை உயர்த்திப் பார்க்கும்

வரலாற்றின் பட்டியலில்

பார்க்க விரும்கிறாயா..?

வரலாற்றில் நீ

வாழ விரும்பினால்…

படி.! படி..!! படி…!!!

நீ படித்தால் … உன்னையிந்த

உலகம் படிக்கும்

அன்று பத்ருப் போர்

கைதிகளில்

கற்றவர்கள்,

கல்லாதவர்களுக்கு

கல்வி போதித்து விட்டு

விடுதலையாகலாம்

என்று நமதருமை

நாயகம் (ஸல்…)

அவர்கள்

அறிவுறுத்தினார்களே…!

இது உலகில்

எந்தத்

தலைவர்களுக்கும்

எட்டாத சிந்தனை..!

கல்விக்கு உயர்வளித்த

கல்வெட்டு வரிகளிவை…!

ஒரு குடும்பத்தில்

பெண் படிக்கிற பொழுது…

பெருமை சேர்கிறது…!

பேதமை மறைகிறது…!

இன்னும் சொல்லப் போனால்

வறுமையும் சற்று

ஒதுங்கத்தான் … செய்கிறது..!

ஒரு காலத்தில் பெண்களுக்கு

கல்வி மறுக்கப்பட்ட பொழுது

அன்றைய சமுதாயம்

இருட்டில் அல்லவா… கிடந்தது..!

சகோதரி

ஒரு சமுதாய விடியலுக்கான

வெளிச்சம் – வேறெங்குமில்லை…!

உன்னுள் தான் இருக்கிறது…!

பெண் – கல்வி

கற்பதினால் தான் … இருக்கிறது !

நம் சங்கையான

இஸ்லாம் மார்க்கம்

போதிப்பது போல …

கற்பவராக இரு..!

அல்லது கற்பிப்பவராக இரு..!

தங்கையே…!

ஒரு பெண்ணின் உயர்வு

சாலிஹான ஒழுக்கத்திலும்

சங்கையான கல்வியிலும் தான்

என்பதை மட்டும்

மறந்துவிடாதே…!

இதுவே, உன்

அண்ணன் உனக்குக் கற்பிக்கும்

திருவாசகம் !

நன்றி :

இளையான்குடி மெயில்

டிசம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *