பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சி மலர் போல், இஸ்லாமிய பெண் பேச்சாளர்களும், சொற்பொழிவாளர்களும், கவிஞர்களும் மிக சொற்பம் தான். அந்த வரிசையில் முத்துப்பேட்டை நகருக்கு மிக அமைதியான முறையில் பெருமையினை சேர்த்துக்கொண்டிருக்கும் பெண் பேச்சாளரும், பெண் கவிஞருமான அன்புடன் .. மலிக்கா அவர்களின் சிறப்பு பேட்டி..
நானும் என் எழுத்துணர்வும். அன்புடன்மலிக்கா
தங்களின் பெயர்: மலிக்கா ஃபாரூக்
புனைப்பெயர்: அன்புடன் மலிக்கா
பிறந்த வருடம்: 24-10-1978
சொந்த ஊர்: திருவாரூர் மாட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை.
படிப்பு: சூழ்நிலை சூழ்ச்சி செய்ததால் பள்ளிப்படிப்பையே தொடரமுடியவில்லை.
கவிதையில் ஆர்வம் வந்தது எப்படி?
எல்லாம் வல்ல இறைவன் துணையோடு!
சிறிய வயதில் எனது உறவினர் அதிரை அருட்கவி தாஹா அவர்களின் வீட்டில் உறங்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அப்போது அவர்களுடைய நூல்களை அப்பப்ப வாசிப்பேன். பாடல்போல்வரும் சரளம் பிடித்தது. அதேபோல் டி ராஜேந்தர் அவர்களின் பாடல்களின் அடுக்குமொழி வசனமாக வரும் கவிதைகள் அதுவும் என்னை ஈர்த்தது. நாமும் இவைகள்போல் எழுதினால் என்ன என்று ஆரம்பிக்கப்பட்டதோடு,சிறுவயது முதல் அதிகமதிகம் புத்தகங்கள் வாசித்தில்லையென்றபோதும், தமிழ்மீது விருப்பம் அதிகம், இருந்ததால் எனக்குள் தோன்றும் உணர்வுகள்.அடுத்தவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அதனைக்காணும்போது ஏற்படும் உணர்வுகள் அதனை வெளிப்படுத்த நான் தேர்ந்தெடுத்த வழி எழுத்து. ஒவ்வொரு மனத்துக்குள்ளும் உணர்வுகள் புதைந்துகிடக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கவிதைகள் குடியிருக்கிறது அதுபோல்தான் எனக்குள்ளும் கவிதை ஆர்வம் பிறந்தது. அதனை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவேண்டுமெயென அந்த சந்தர்ப்பத்திற்க்காக காத்திராமல் நானே சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொண்டேன். எனக்குள் எழும் எண்ணங்களையெல்லாம் நோட்டில் எழுதிக்கொண்டே வருவேன். எனது எண்ணங்களை உணர்வுகளைக்கொண்டு உள்ளடக்கி எழுத்துக்களின் வாயிலாக கோத்தெடுப்பேன் கவிதைகளின் மாலைகளாக! தினமும் எழுதுவேன்.எழுதாமலிருக்கும் நாட்களில் எழுதியதை படித்து மகிழ்வேன்.
கவிதை எழுத ஆரம்பித்தது எப்போது?
16 வயதில் முதன் முதலாக வார இதழ் ஒன்றுக்கு 6 வரியில் என் கவிதையை அனுப்பினேன். வெகுநாள் காத்திருந்தும் இதழில் வரவேயில்லை. அதன்பின்பு சிறு சிறு கவிதைகள் எழுதி பெயர் மாற்றம் செய்து ராணி.குமுதம் போன்ற இதழுகளுக்கு அனுப்பியுள்ளேன். இருந்தும் எனது கவிதையார்வம் விடாது கருப்புபோல் தொடர்ந்துகொண்டேயிருந்து. இடையில் பத்து பதினோர் ஆண்டுகள் துபை வாசம்.அங்கிருக்கும்போது 26-10 2009 அன்றுதான் எனது தாகத்துக்கு தண்ணீர் கிடைத்ததுபோல்.தமிழார்வதிற்கு இணையதளத்தில் தமிழ்குடும்பம் எனும் வலைதளம் அறிமுகமானது.அதில் எனது முதல் பதிவை எனது எண்ணங்களை கோத்து கவிதையென்ற பெயரில் மாலையாக்கி பதிவிட்டேன் மிகுந்த வரவேற்ப்பு. அத்துடன் ஊக்கத்தை தூண்டும் வகையில் மனம் நிறைந்த கருத்துகள். அதனைகண்டதும் என்னுள்ளம் அளவில்லா ஆனந்தம் அடைந்தது. அந்த தூண்டுதலோடு. அதே தளத்தில் எனது கவிதையின் கருத்துப்பகுதியில் அமீரக தமிழ்த்தேர் மாத இதழிலுக்கு எழுதும்படி அழைப்பு அதனைத்தொடர்ந்து தொடங்கியதுதான் கவிதைகளின் ஊர்வலம். பத்திரிக்கைகள் மற்றும் இதழ்களிலும் பல இணைய தளங்களிலும் எனது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வலம் வந்துகொண்டிருக்கிறது.
வலைதளம் ஆரம்பித்தது எப்போது? எப்படி?
அதிகமதிகம எழுதவேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது அதனை பூர்த்தியாக்கும் வகையில் எனது அண்ணன் ஆரீஃப் எனக்கென தனியாக இணையத்தில் கவிதைகள் என்றபெயரில் வலைதளம் தொடங்கித்தந்தார்கள். அதில் எழுத ஆரம்பித்த நான். கவிதைகளின்மேலுள்ள ஈர்ப்பின் காரணமாய் படிப்பறிவு அதிகமில்லையென்றபோதும் இணையத்தில் எப்படியெல்லாம் வலம்வருவதென குறுகியகாலத்திலேயெ கற்றுக்கொண்டு அதனை நீரோடை[http://niroodai.blogspot.com] என மாற்றியமைத்து கவிதைகளத்தில் இறங்கினேன். அதன்பின்புகலையார்வமும் எனக்கு உண்டு அதனை நிவர்த்திசெய்ய கலைச்சாரல் [http://kalaisaral.blogspot.com] என்ற வலைதளமும். இஸ்லாமிய மார்க்கத்தைபற்றிய எனது அறிவுக்கு எட்டியவைகளை இனிய பாதையில் [http://fmalikka.blogspot.com] என்ற தளத்தில் மூலமும். புகைப்படத்தினுள் கவிதையை புகுத்தி அதனை வெளியிட கவிக்கூடு [http://kavikkudu.blogspot.com/] என்ற தளத்தையும் அடுத்தடுத்து உருவாக்கி அதில் எனது எண்ணங்கள். சமூகத்தின் பலகோணங்களின், வலிகள். வேதனைகளென மற்றவரின் மன உணர்வுகளோடு எனது உணர்வுகளையும் கலந்து கவிதைகள் மற்றும் கட்டுரைகள்.கலைகள்.சிந்தனைகளென செயலாற்றி வருகிறேன்.
அடுத்து வலைதளத்தில் 40, 45 க்குமேற்பட்ட சிறந்த வலைதளத்திற்கான விருதுகள் எனது தளங்களுக்கு தரப்பட்டது மிகவும் சந்தோஷக்குறியது எனது வலைதளம் சிறந்தவலைதளமென பாராட்டையும் பெற்று யூத்ஃபுல்விகடனில் ”குட் ப்ளாக்”பகுதியில் வெளியாதும் மகிழ்ச்சிற்க்குறியது. அதுமட்டுமல்லாது இந்த 3 ஆண்டுகாலங்களில் எனது வலைதளங்களிலோ அல்லது எனது பதிவுகளுக்கோ எவ்வித தவறான நோக்கத்தோடும் சிறுஅளவிலும் முகம் சுளிக்கும்வன்னமாக யாரும் இதுவரை என்னிடம் கருத்துப்பரிபாற்றங்கள் செய்யவோ? அல்லது தேவையில்லாது கருத்துகளிட்டு சங்கடளைங்களை ஏற்படுத்தியதோ இல்லை என்பதே என் எழுதுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது.
தங்களின் முதல் மேடைக்கவிதை?
அமீரக மண்ணில் எனது கவிதை எனது குரலில் தமிழ்த்தேர் மாத இதழ் நடத்தும் மாதாந்திர கவியரங்கில் அரங்கேறியது பாலையில் பலர்படும் வேதனைகளை சொல்லும், கோடையென்ன? வாடையென்ன ? என்ற முதல் கவிதை.அக்கவிதைவாசிக்கப்பட்டதும் எழுந்த கைதட்டல்களில் ஒலி இன்றளவும் என்காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
தங்களின் முதல் விருது பற்றி?
பாலைதேசத்தில் பலமேடைகளில் பலகவிதைகள். நீரோடையில் மிக குறுகியகாலத்தில் 100 கவிதைகளென எழுதிய என் கவிதை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இலங்கையைச்சேர்ந்த காப்பியக்கோ தந்தை ஜின்னாஹ் சரிபுதீன் அவர்களின் கையால் துபையில் கிடைத்த முதல் விருது.என் வாழ்நாளில் மறக்கமுடியாதது. அதனை கொடுப்பதற்க்கு தூண்டுதலாக இருந்த சிறுகதை எழுத்தாளர் பத்திரிக்கையாளருமான அண்ணன் திருச்சி சையத். ஒருபக்க கதைகளின் மன்னர் தந்தை சேக் சிந்தாமதார். கவிபடைக்கும் அண்ணன் கமால் ஆகியோருக்கு என்றும் என் நன்றிகளிருக்கும்.
முதல் கவிதை நூலைப்பற்றி:
அயல்நாட்டில் எனது எண்ண உணர்வுகள் உயிர்ப்பெற்று ஒலித்தது ”உணர்வுகளின் ஓசை” என்ற முதல் கவிதைதொகுப்பின் வாயிலாக! அதனை வெளியிட்ட, தந்தை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுதீன். இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன். பேராசிரியர் தந்தை சே மு. முகமதலி. கவிஞர் மு மேத்தா ஆகியோருக்கும். வெளியிட ஏற்பாடு செய்த பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கலகத்திற்க்கும் என்றும் எனது நன்றிகள். அதனோடு எனது முதல் நூல் கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையால் 2010திற்கான மூன்றாம் பரிசினைப்பெற்றதும் நெஞ்சை நெகிழச்செய்தது.
வானொலியில் முதல் கவிதைப்பற்றி”
”உணர்வுகளின் ஓசை” கவிதை தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கவிதைகள் சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கனீர் குரலில் அழகாய் வாசிக்கப்பட்டு வானொலியிலும் ஒலித்தது எனது கவிதைகள்.
தங்கள் கவிதைகள் பிறயிடங்களில் எப்படி?
எனது கவிதைகள். கனடாவின் தங்கதீபம் பத்திரிக்கையில் வெளியானது. அமெரிக்க மண்ணில் எனது கவிதை வேறொரு தோழியின் குரலில் வாசிக்கப்பட்டு சர்ட்பிக்கெட் வாங்கியது. மேலும் பல இணையதளங்களிலும் வலம் வருவதோடு அதிலும் எனது படைப்புகளுக்கு பரிசுகள். முகநூலில் போட்டிக்கவிதைக்கு முதல் பரிசு.மற்றும் நர்கீஸ் பத்திரிக்கையில்ஆறுதல் பரிசுகள்.என எனது எழுத்துகளுக்கு இறைவன் தந்துகொண்டிருக்கும் அருட்கொடைகள்.
இதழில் முதல் கட்டுரை:
லேடீஸ் பெண்மணியில் எனது முதல் கட்டுரை வாழ்ந்துபாரடி பெண்ணே! என்றதலைப்பில் வெளிவந்தது. அதில் வெளியான எனது அலைபேசிக்கு நிறைய பேர்கள் போன் செய்து பாராட்டினார்கள் குறிப்பாக அரவாணிகள் இரண்டுபேர் போன் செய்ததும் அதற்க்கு நான் கூறிய பதில்களும் என்னையே ஆச்சர்யப்படவைத்தன.
அடுத்து கவிதை நூல்கள் எப்போது?
எனது எண்ணத்தின் வெளிப்பாட்டில் அடுத்த 2 தொகுப்பிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகிறது. இறைவன் நாடினால் விரைவில் வெளிவரும்.
மேலும் தங்களைபற்றி:
இப்படியான எனது எழுத்துப்பயணம் தெளிந்த நீரோடையாய் ஓடிக்கொண்டிருக்கிறது,அதன் நீரோட்டம் அன்பெனும் கருத்துகளால் அதிகமாகிறது..
இறைவன் நாடினால் என் எண்ணங்களின் கடைசிசொட்டு உணர்வுகள் இருக்கும்வரை இன்னும் நிறைய நிறைய எழுத எனதுள்ளம் ஆவல்கொள்கிறது. இனிவரும் காலங்களிலும் எல்லோருக்குமாய் சேர்த்து துடிக்கும் உணர்வுகளால் விதைகள் விதைக்கப்படும் என் எழுத்தின் வாயிலாக!
நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் யாருக்குசொல்வீர்கள்?
முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு அவனே அதிகம் படிக்காத எனக்கு அறிவைத்தந்தான் எழுதறிவில்லா எனக்கு எழுத்தறிவிதவனும் அவனே! ஆகவே புகழனைத்தும். நன்றியனைத்தும் அவனுக்கே உரித்தானது!
அடுத்து எனது மச்சானுக்கு. எல்லாவகையிலும் ஊக்கம்கொடுத்து கவிதையார்வத்தை மென்மேலும் வளர்த்துவிட்டது நூல்கள் வெளிவரவேண்டுமென என்னைவிட அதிக ஆர்வம்கொண்டு என்னைத்தூண்டுவது என எல்லாமுமாக இருக்கும் என்னவருக்கும். அடுத்து என் எழுத்துக்களையும் ஏற்று எனக்கும் ஓர் அங்கீகாரம் வழங்கிவரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும். எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. என்னை ஊக்கப்படுத்திய மற்றும் மென்மேலும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்கள்.மற்றும் முகம் தெரியாத அன்பர்கள் அனைவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை கூறிக்கொண்டேயிருக்கும் எனது நெஞ்சம்.
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”
http://www.niroodai.blogspot.com/
E mail: fmalikka@hotmail.com
சந்திப்பு :
Rafeek Zakaria
najiraf@gmail.com