“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை
ஏற்பது தான்முதல் உத்தமம்!
நம்பிச் செயல்படல் பத்தியம் – இது
நலமெலாம் தருதல் சத்தியம் !”
என்று பாடினார் ஒருவர்.
‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள் உண்டு. அவ்வாறு சொல்வதற்கேற்ற பொருட் செறிவு உள்ள சொல் ’இஸ்லாம்’ என்ற சொல். அது, நானிலத்திற்கு நலமெலாம் தர வந்த சத்தியம் என்றும் அதற்கு ஏற்ற தத்துவம் என்றும் இசை பெற்றிருக்கிறது என்பதை மேற்கண்ட பாடல் சுட்டிக்காட்டுகிறது.
அந்தத் தத்துவம், அமைதித் தத்துவம்; அமைதிக்கான தத்துவம்; அமைதியை – சாந்தியை – நோக்கி நடத்தும் தத்துவம். அமைதியின் பயன்களைப் பெற்றுத் தருவது அந்தத் தத்துவத்தின் இலட்சியம். தன் தத்துவத்தையும், தன் இலட்சியத்தையும், தன் தனிச் சிறப்பையும் தன் பெயரிலேயே பெற்றிருக்கும் ஒரு நெறி இஸ்லாம் ! வாழும் சமயங்களின் பெயர்ப்பட்டியலையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இனிதே புலப்படும்.
ஒரு மலர்க்கொடி மொட்டுவிடுகிறது; பின்னர் மொட்டு கட்டவிழ்கிறது; மலர்கிறது; மணம் வீசுகிறது; மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; சூல் கொள்கிறது; காய்க்கிறது; கனிகிறது; இதே பயன்களைப் பன்மடங்காய்ப் பெருக்க வல்ல எத்தனையோ வித்துக்களை அந்தக் கனி, தன்னகத்தே இருந்து வெளிப்படுத்துகிறது; உலகம் பயன்பெறுகிறது; எல்லாம் அமைதியாக…! இந்த அமைதி எவ்வளவு ஆக்கவளம் செறிந்த அமைதி ! ஆற்றல் பெருக்கும் அமைதி! இடையறாச் செயற்பாட்டை உடைய இயக்க அமைதி !
இத்தகைய இனிய அமைதிக்கு இந்த உலகம் எப்போதும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது !
“நம்நோக்கங்கள் ஒன்றேயாகட்டும் !
நம் இதயங்கள் ஒன்றாகச் சேரட்டும் !
ஒற்றுமையில் மனம் சாந்தி அடையட்டும் !
அனைவருடனும் அமைதியாக இருப்போம் !”
என்பது
ஒரு புராதான கால அழைப்பு.
“முன்னெப்போதும் நடாத்தப்படாத அளவுக்குத் துணிந்து நடாத்தப்படும் மிக்க நீதியான போரைவிட மிகவும் அநீதியான அமைதியாக இருந்தாலும் அந்த அமைதியையே நான் விரும்பித் தேர்ந்தெடுப்பேன்”
என்பது அதை அடுத்ததொரு காலகட்டத்து அமைதி விரும்பியின் விருப்பம்.
“போரிட்டாவது நீ அமைதியைத் தேடிக்கொள் !”
என்பது
இந்த நூற்றாண்டின் தொடக்க காலம் தெரிவித்த ஒரு தீர்வு.
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் !”
என்பது
‘சாந்தியால் உலகம் தழைக்க வேண்டும்’ என்று சங்க நாதம் புரிந்த ஒரு புரட்சிக்காரரின் போர்க்குரல், நம் காலத்தில் நாம் கேட்ட குரல் !
அமைதி வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக வேண்டும். அப்போதுதான் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஏற்படும். அதற்கு வேற்றுமைகளை வேரறுக்க வேண்டும். அதற்கு ஏற்ற முழக்கங்களும் எழாமல் இல்லை.
“ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !”
என்றொரு
முழக்கம் எழுந்தது. பின்னர்,
“குலமும் ஒன்றே ! குடியும் ஒன்றே !
இறப்பும் ஒன்றே ! பிறப்பும் ஒன்றே !
வழிபடு தெய்வமும் ஒன்றே !
என்று சற்றே விளக்கமான முழக்கமும் எழுந்தது. இப்படி எத்தனையோ குரல்கள் !
அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அனைத்தையும் ஒருங்கிணைத்து – நீணிலமெங்கும் நீறுபூத்த நெருப்பாக இருந்த எத்தனை எத்தனையோ நல்லெண்ணங்களையெல்லாம் ஊதி ஊதிப் பெருஞ் சோதியாக்கி இதோ ‘இஸ்லாம்!’ என்று அரபு தீபகற்பம் அறிமுகம் செய்தது !
ஒருவனே இறைவன் ! ஒன்றே மனுக்குலம் !
அனைத்து மக்களின் அன்னை ஒருவரே !
அனைத்து வேதங்களின் அடிப்படை ஒன்றே !
இம்மையும் ஒன்றே ! மறுமையும் ஒன்றே
இறுதி வேதமும் ஒன்றே ! இறுதித் தூதும் ஒன்றே !
என்பன அந்தச் சோதியின் பெருஞ்சுடர்கள் !
இந்த இஸ்லாம் – இஸ்லாம் எனும் சொல், அரபு மொழிச் சொல் என்பதற்காக இது நமக்குச் சொந்தமானது இல்லை என்று சிந்தனையுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். மனித வசதிக்கும், உரிமைகளுக்கும், நல்வாழ்வுக்கும் ஏற்றதாக எங்கிருந்து எந்த நலன்கள் கிடைத்தாலும் அதைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிற உருண்டைச் சிற்றூர் (Global Village) ஆன இன்றைய உலகம், இஸ்லாம் தன் கொடை வளத்தால் கொடுக்கும் சாந்தி, சமத்துவம், சகோதரத்துவம், சமரசம், சத்தியம் முதலிய எத்தனையோ நன்மைகளை – ஊற்றுப் பெருக்காய் உலகுக்கு ஊட்டும் நன்மைகளை- வேண்டாம் என்று சொல்லுமா என்ன?
(ஸல்ம்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து (ஸலம) என்னும் சொல்லும் அதிலிருந்து (அஸ்லம) என்னும் சொல்லும், அதிலிருந்து (இஸ்லாம்) எனும் சொல்லும் தோன்றின என்பர் அரபு மொழி அறிஞர்கள் ‘இஸ்லாம்’ என்ற சொல்லே ஒரு வேர்ச் சொல்தான் என்பாரும் உளர்.
ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம். மார்க்க அடிப்படையில், இஸ்லாமிய வாழ்வை வாழ்ந்து காட்டியவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில், மனித குலத்துக்கு வாய்த்த பேறுகளின் அடிப்படையில் இஸ்லாம் என்றால், எவ்வுயிர்க்கும் இன்னமைதி ஈந்துவக்கும் சன்மார்க்கம் என்று சற்றே விளக்கமாய்ப் பொருள் கொள்ளலாம்.
வணக்கத்திற்குரிய ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு அழகிய பல திருநாமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஸ்ஸலாம் – இன்னமைதி அருள்பவன் – என்பதையும் கவனத்தில் கொள்வோமாக.
இந்த இறைவன் இந்த மார்க்கத்தின் மூலம் இந்த உலகத்திற்கு வாழ்வின் எல்லா அம்சங்கள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதல்களை அளித்துள்ளான். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் சமுதாயத்தை ‘நடுநிலையுள்ள சமுதாயமாக’ – ‘உம்மத்தே வஸதாக’ – ஆக்கியுள்ளான் (2;143) நடுநிலை என்பது நீதி அல்லவோ !
”… நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்:
அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழி
காட்டுகிறார்கள். மேலும் சத்தியத்திற்கேற்பவே
நீதி வழங்குகிறார்கள்” (7:181) என்கிறது திருக்குர்ஆன்
“நீதி, நேர்மை ஆகியவற்றில் நிலைபெற்று, வரம்பு மீறாமல் நடுநிலையான வழியில் சென்று, எவருடனும் அநீதியான அசத்தியமான முறைகளில் தொடர்பு கொள்ளாமல், சத்தியம், மெய்ம்மை ஆகியவற்றில் அடிப்படையில் மட்டுமே எல்லாருடனும் தமது உறவை ஒரேவிதமாக அமைத்துக் கொண்டு உலக சமுதாயங்களுக்கு மத்தியில் பாரபட்சமற்ற வகையில் நீதி வழங்கும் அந்தஸ்த்திலுள்ள உயர்வும் சிறப்பும் கொண்ட ஒரு குழுவுக்குத்தான் திருக்குர்ஆன் தன் மொழி வழக்கில் உம்மத்தே – வஸத் – நடுநிலையுள்ள சமுதாயம் என்று கூறுகிறது.”
உலக மக்கள் நடுநிலையாக நடந்து கொள்வது என்று முடிவு செய்து விட்டால் மனித குலத்துக்கு அதைவிட இயல்பான பொருத்தமான, நேரான, நிம்மதியான வழியாக வேறு என்ன இருக்க முடியும்! எனவேதான் இஃது ‘அவனுடைய இயற்கை வழி’ என்றும் ‘நிலையான வழி’ என்றும் (30:30) அடைமொழிகள் பெற்றுள்ளன.
‘ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும், (17:15)’ ஒரு சமூகம் நேரான வழியை மேற்கொள்கின்றது என்றால் அதனுடைய நேரான வழி அந்தச் சமூகத்துக்கே பயனளிக்கும். இந்த உலகமே நேரான வழியை மேற்கொள்கின்றதென்றால் அஃது ஒட்டு மொத்தமாக இந்த உலகத்துக்கே பயனளிக்கும். இதை யாரால் மறுக்க முடியும்? இத்தகையதோர் ஒளிவுமறைவு அற்ற பரிபூரணமான உயர் நேர் வழியைத்தான் இஸ்லாம் உலகுக்குப் பொதுவுடைமை ஆக்கியுள்ளது.
அதற்கான பிரகடனம் 11.3.கி.பி.632 (9.12.ஹி10) – ஆம் நாள் வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில் எல்லாம் வல்ல இறைவனால் இவ்வாறு இறக்கி அருளப்பட்டது:
”…இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களுடைய
மார்க்கத்தைச் சம்பூரணமாக்கிவிட்டேன். என் அருட்
கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்திருக்
கிறேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாகவும்
பொருந்திக் கொண்டேன் …” (5:3)
( பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய ‘இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி )
நூலை மேலும் வாசிக்க கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ
NEWLIGHT BOOK CENTRE
1504 – A, MIG, 3rd Main Road
Mathur MMDA
Chennai – 600 068
E-mail :
Cell : 99944 05644
Tel : 044 25552846
For Book Orders Pl. send MO / DD in favour of NEWLIGHT BOOK CENTRE, CHENNAI
UAE : Pl. contact 050 51 96 433